நடிகைகள் உள்ளிட்ட பெண்களுக்காக கேரள சினிமாவில் பெண்கள் திரைப்பட கூட்டமைப்பு தொடங்கப்பட்டது போல, தெலுங்கு சினிமாவிலும் தொடங்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகை ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவாகரத்தை அடுத்து, கேரளாவில் திரைப்பட பெண்கள் கூட்டமைப்பு தொடங்கப்பட்டது. சினிமாவில் பெண்களுக்கு நடத்தப்படும் அநீதிகளுக்கு எதிராக அந்த அமைப்பு பாடுபடும் என்று தெரிவிக்கப் பட்டது. அதில் நடிகைகள் ரேவதி, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உட்பட பலர் உள்ளனர்.
இந்நிலையில் இதை போல, தெலுங்கு சினிமாவிலும் ’பெண்களின் குரல்’ (Voice of Women) என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப் பில் நடிகைகள் உட்பட தெலுங்கு சினிமாவின் பல்வேறு அமைப்புகளில் உள்ள சுமார் 80 பெண்கள் இணைந்துள்ளனர்.
இதுபற்றி நடிகை லட்சுமி மஞ்சு கூறும்போது, ‘’பெண்களின் குரல் என்ற இந்த அமைப்பு, தெலுங்கு சினிமாவில் பெண்களின் நலனுக்காக பாடுபடும். இதை நான், தயாரிப்பாளர்கள் சுப்ரியா, ஸ்வப்னா, நடிகை ஜான்சி, இயக்குனர் நந்தினி ரெட்டி ஆகியோர் இணைந்து தொடங்கியுள் ளோம். இதற்கு 80 பெண்கள் ஆதரவு தெரிவித்து, இணைந்துள்ளனர். பெண்களுக்கு எதிராக என்ன அநீதி நடந்தாலும் அதை தீர்க்க எங்கள் அமைப்பு பாடுபடும். இந்த அமைப்பு என் மனதில் சிறப்பு இடத்தை பெற்றிருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார். இவர் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள். தமிழில், காற்றின் மொழி, மறந்தேன் மன்னித்தேன், கடல் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவது, மாதம் இருமுறை கூடி பெண்கள் பிரச்னைகள் குறித்து பேசுவது, தெலுங்கு சினிமாவில் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் பெண்களை பற்றிய தகவல்களை சேகரித்து ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றை தற்போது மேற்கொள்ள இருப்பதாகவும் லட்சுமி மஞ்சு தெரிவித்துள்ளார்.