சினிமா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி: கேரளாவில் புதிய முயற்சியில் 'அம்மா'

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி: கேரளாவில் புதிய முயற்சியில் 'அம்மா'

நிவேதா ஜெகராஜா

ஏழ்மையில் தவிக்கும் மாணவர்களுக்கு கைகொடுக்கும் விதமாக மலையாள திரைப்பட நடிகர்களின் சங்கமான 'அம்மா' சில முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.

மலையாள திரைப்பட நடிகர்களின் சங்கமான 'அம்மா' கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு உதவும் வகையில் சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு கல்வி உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. 'ஒப்பம் அம்மாயம்' என்று அறிவித்துள்ள இந்தத் திட்டத்தின் மூலமாக, ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் தவிக்கும் சுமார் 100 மாணவர்களுக்கு டேப்லெட் கணினிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. கேரளாவில் பள்ளிக் கல்வி பயிலும் தகுதியான 100 மாணவர்களுக்கு டேப்லெட் கணினிகளை வழங்க நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பாக, விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ''இந்த உதவி தகுதியான நபர்களுக்கு சென்றைடைய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். எனவே, ஜூலை 15-க்குள் மாணவர்கள் தங்கள் பகுதி வார்டு கவுன்சிலர் அல்லது மற்ற அதிகாரபூர்வ பிரதிநிதிகள் அல்லது 'அம்மா' சங்கத்தின் பிரதிநிதிகள் சான்றிதழின் இணைக்கப்பட்ட கடிதத்தை அஞ்சல் அல்லது மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் மாணவர்கள் கல்வி உதவியைப் பெறலாம். வரப்பட்ட கடிதங்களில் இருந்து தேவையான விசாரணைகளை மேற்கொண்டு ஜூலை இறுதி வாரம் முதல் கட்டமாக 100 டேப்லெட் கணினிகள் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலைக்கு முன்புதான் மலையாள திரைப்பட நடிகர்களின் சங்கமான 'அம்மா' சங்கத்துக்கு சொந்தமான புதிய கட்டிடம் கொச்சியில் திறக்கப்பட்டது. அதிலிருந்து நிறைய பணிகளை 'அம்மா' தனிப்பட்ட முறையில் செய்து வருகிறது. சில நாட்கள் முன்பு கூட கொச்சியில் ஒரு தடுப்பூசி இயக்கத்தை ஏற்பாடு செய்தது இந்த சங்கம்.

மலையாள திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை நோக்கமாக கொண்டு தடுப்பூசி முகாம் நடத்தினர். திரையுலகை சேர்ந்தவர்களுடன் கொச்சி பகுதியில் உள்ளவர்களும் இங்குச் சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று அப்போது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.