தென்னிந்திய நடிகர் சங்கதித்தின் புதிய நிர்வாகிகள் இன்று முறைபடி பதவியேற்க உள்ளனர்.
கடந்த 2019ல் பதிவான வாக்குகள் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஞாயிறன்று எண்ணப்பட்டு அன்று மாலையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி என அனைத்து பதவிகளிலும் பாண்டவர் அணி வெற்றிபெற்றது. தேர்தலில் போட்டியிட்ட பாண்டியர் அணி மற்றும் சங்கரதாஸ் அணி இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், பாண்டியர் அணி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
வெற்றியை தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நடிகர் நாசர், ``வருங்காலத்தில் காத்திருப்பு குறைந்து வேலைகள் எல்லாம் விரைவில் நடக்கும் என்று நினைக்கிறோம். இனி நாங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்த எண்ணம் மட்டுமே இருக்கும். நாங்கள் எடுத்துக் கொண்ட பளு வெகு அதிகமானது, பதவியேற்ற நாள் முதல் தான் மூன்று ஆண்டுகள் எங்கள் பதவி காலம் அமைய போகிறது.
எங்களுக்கு இந்த தேர்தலின் முடிவு வேண்டும் என்பதால் மட்டுமே நாங்கள் இறுதி வரை காத்திருக்கிறோம். ஆனால் எதிரணியினர், காலை எண்ணுவதற்கு முன்பே வெளியேறி விட்டார்கள். மேலும் பதவியேற்பு விழா குறித்து சட்ட ரீதியாக அமைக்கப்பட்ட குழு மூலமாக அரசாங்கத்தோடு ஆலோசித்து அறிவிப்புகள் வெளியிடப்படும். அரசாங்கத்திடம் உதவிகள் பெற வேண்டிய நிலை இருக்கிறது. விரைவாக எங்கள் பணிகளை வெகு விரைவாக எடுத்து செல்ல வேண்டும்” என்று கூறினார்.
இவற்றை தொடர்ந்து, தலைவர் நாசர் உட்பட வெற்றி பெற்ற அனைவரும், அதற்கான சான்றிதழ்களை தேர்தல் நடத்தும் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனிடம் பெற்றுக்கொண்டனர். இதனையடுத்து இன்று எளிய முறையில் நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்க உள்ளனர். அதனைதொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க நடிகர் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்திய செய்தி: மேகதாது திட்டத்துக்கு எதிரான தீர்மானம் - கர்நாடகா முதல்வர் கடும் கண்டனம்