சினிமா

B to the A to the B to the A BaBa | புது கிளைமேக்ஸுடன் பாபா: குதூகலத்தில் ரசிகர்கள்!

B to the A to the B to the A BaBa | புது கிளைமேக்ஸுடன் பாபா: குதூகலத்தில் ரசிகர்கள்!

JananiGovindhan

ரஜினிகாந்த் கதை, திரைக்கதை எழுதி தயாரித்து, அவரது நடிப்பிலேயே 2002ம் ஆண்டு வெளியான பாபா படம் புதுப் பொலிவோடு 20 ஆண்டுகள் கழித்து ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.

பாபா படம் ரிலீசாகிறது என அறிவிக்கப்பட்டு டிக்கெட் புக்கிங் தொடங்கியதுமே ஹவுஸ்ஃபுல் போர்டு போடும் அளவுக்கு டிக்கெட்களை வாங்கி குவித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் 2002ல் வெளியானபோது பாபா, ப்ளாப் படமாகவே கருதப்பட்டது. ஆனால் இன்று படம் ரிலீசானதும் எதோ புதுப்படத்துக்கு இணையாக கூடுவதை போல தியேட்டர்களில் கூட்டம் அலை மோதியிருக்கிறது.

வழக்கம்போல ரஜினியின் அறிமுக காட்சி உட்பட பல முக்கியமான காட்சிகளை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் பகிர்ந்து ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். குறிப்பாக மாற்றியமைக்கப்பட்ட பாபா கிளைமேக்ஸ் காட்சியை முக்கியமாக வைரலாக்கி வருகிறார்கள்.

அப்போதைய அரசியல் நிலைப்பாட்டை கருதி இமாலயத்தில் பாபாவை பார்த்துவிட்டு திரும்பும் ரஜினி மீண்டும் பாபாவிடமே செல்லும் எண்ணத்தை மாற்றிக்கொள்வதோடு பழைய பாபா படத்தில் கிளைமேக்ஸ் இருக்கும். ஆனால் தற்போது அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்திருக்கும் நிலையில், ரி ரிலீசான பாபாவில் கிளைமேக்ஸ் மாற்றப்பட்டிருக்கிறது.

அதன்படி, பாபவிடம் ரஜினி தன்னை சிஷ்யன ஏத்துக்கச் சொல்லி கேட்க, அதற்கு “நான் வெச்ச பரிட்சைல ஜெயிச்சுட்ட. ஆனா உன் தாயை நோகடிச்சிருக்க. என்னதான் தானம், தர்மம் செய்தாலும் தாயை சந்தோஷமாக வெச்சிக்கலனா மோட்சம் கிடைக்காது. அடுத்த ஜென்மத்துல அதே தாய்க்கு மகனா பிறந்து அவரோட எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றினா அந்த மாய வலை தானா விலகிடும். அப்போ நானே உன்னை அழைச்சிக்கிறேன்” என பாபா கூறும்படி காட்சி மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கிளைமேக்ஸ் காட்சியைதான் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புதுப்பிக்கப்பட்ட கிளைமேக்ஸ் காட்சிக்காகத்தான் அண்மையில் ரஜினி டப்பிங் பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.