சினிமா

'முதல் சீஸனுக்கு ரூ.35 கோடி சம்பளம்' - நெட்ஃப்ளிக்ஸ் உடன் இணையும் சஞ்சய் லீலா பன்சாலி

'முதல் சீஸனுக்கு ரூ.35 கோடி சம்பளம்' - நெட்ஃப்ளிக்ஸ் உடன் இணையும் சஞ்சய் லீலா பன்சாலி

நிவேதா ஜெகராஜா

நெட்ஃப்ளிக்ஸ் உடன் இணைந்து மிகப் பெரிய படைப்பாக வெப் சீரிஸ் ஒன்றை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் பாலிவுட்டின் பிரபல இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி.

பாலிவுட் சினிமா நட்சத்திரங்களின் மோஸ்ட் வான்டட் இயக்குநராக உருவெடுத்திருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. வரலாற்றுப் பின்னணியை படமாக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயர் எடுத்துள்ள சஞ்சய் லீலா தனது படத்துக்கு இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என்பதை தாண்டி இசை, கேமரா என அனைத்து பணிகளையும் பார்க்கும் மனிதரும்கூட. இவர் இயக்கத்தில் அடுத்தப் படைப்பாக வரவிருக்கிறது 'கங்குபாய் கதியாவாதி'. ஆலியா பட் லீடு ரோலில் நடிக்க, 'கங்குபாய் கதியாவாதி' டீஸர் சில நாள்கள் முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில், ஓடிடியில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, தற்போது 'கங்குபாய் கதியாவாதி' படத்துக்குப் பின் அடுத்த படைப்பாக 'ஹீராமந்தி' என்ற வெப் சீரிஸ் ஒன்றை இயக்க பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் உடன் இணைந்துள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி. 'ஹீராமந்தி' என்பது பாகிஸ்தானின் லாகூருக்கு அருகில் இருக்கும் ஒரு பகுதியாகும். சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இந்தியாவுடன் இருந்த இந்தப் பகுதியில் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கைப் பின்னணி, கலாசாரம், காதல், துரோகம், அரசியல் போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கும் விதமாக வெப் சீரிஸாக இயக்க இருக்கிறார்.

பிரமாண்டமாக தயாராக இருக்கும் இந்த தொடரில் சம்பளம் வாங்காமல் நடிக்க தயாராக இருக்கிறேன் என ஆலியா பட் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், வெப் சீரிஸின் முதல் சீசனுக்காக மட்டும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கு ரூ.35 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் ஹங்காமா தளத்துக்கு பேசியுள்ள பெயர் வெளியிட விரும்பாதவர் ஒருவர், இந்த தகவலை வெளியிட்டு இருக்கிறார். முதல் சீசனில் மொத்தம் ஏழு எப்பிசோடுகள் உள்ளனவாம்.

முன்னதாக, இந்தத் தொடர் குறித்து பேசிய சஞ்சய் லீலா பன்சாலி, ''இது ஒரு பிரமாண்டத் தொடராக வெளிவரும். இந்தத் தொடரை இயக்க ஆவலோடு இருக்கிறேன். உலகளாவிய பார்வையாளர்களை கொண்டுள்ள நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ‘ஹீராமந்தி’யை உலகம் முழுவது கொண்டுசெல்ல இருக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.