சினிமா

நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் விசாரணை அறிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் விசாரணை அறிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சங்கீதா

நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் விவகாரத்தில், தனியார் மருத்துவ மையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்து 4 மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அண்மையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி அறிவித்தது சர்ச்சையை கிளம்பியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின் பேரில், மருத்துவத் துறை சேவைகள் துணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை அறிக்கை நேற்று வெளியானது.

அதில், ஐசிஎம்ஆர்-ன் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக விசாரணை அறிக்கை வெளியானது. எனினும், சிகிச்சையளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமனையில் பராமரிக்கப்படாததால், தனியார் மருத்துவமனையின் செயற்கை கருத்தரித்தல் மையத்தை ஏன் தற்காலிகமாக மூடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் "நட்புடன் உங்களோடு மனநல சேவை” திட்டத்தை துவங்கி வைத்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரபல நடிகை நயன்தாரா வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றதில் எந்த விதிமுறைகளும் இல்லை எனவும், மேலும் மத்திய அரசு வாடகைத்தாய் முறையில் கடந்த ஜனவரி மாதம் திருத்தம் கொண்டு வந்த நிலையில், அதற்கு முன்னர் உள்ள சட்டத்தின் அடிப்படையிலேயே வாடகைத்தாய் முறையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அரசின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு குழந்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், சம்பந்தப்பட்ட கருத்தரிப்பு சிகிச்சை மையம் முறையான ஆவணங்களை மருத்துவ குழு மேற்கொண்ட விசாரணையின் போது சமர்ப்பிக்கவில்லை எனவும், முறையான தகவல் அளிக்காத காரணத்தால் மேற்கண்ட மருத்துவ மையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போது வாடகை முறையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், புதிய சட்டத்தின் படி வாடகைத் தாய் முறையின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள், அவர்களின் உறவினர்கள் மூலமாக மட்டுமே தான் பெற முடியும் எனவும், இதனால் இதில் முன்பு போல எளிதாக வாடகைத்தாய் முறையில் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதில் பல கட்டுப்பாடுகள் இந்தப் புதிய சட்டத்தில் இருப்பதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் குறிப்பிட்டார்.

சென்னை அமைந்தகரையில் செயல்பட்டு வரும் தனியார் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ள நிலையில், அது குறித்து அத்தகைய கருத்தரிப்பு மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.