நடிகை நயன்தாரா கமலுடன் மோதுவதை வேண்டாம் என்று தவிர்த்திருக்கிறார்.
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றின் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் காமெடி நடிகர் யோகி பாபு, நடிகை நயன்தாராவை காதலிப்பதைபோன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
அந்தப் பாடல் வெளியான வேகத்திலேயே வைரலானது. மேலும் படத்தின் ட்ரெயலர் வெளிவரும் வரை காமெடி படமாக பார்க்கப்பட்ட இதன் தலைப்பு வேறு பொருளை முன் வைத்தது. ‘கோ கோ’ என்பதன் அர்த்தம் போதைப் பொருள் என்பதும் அதனை பின்புலமாக வைத்தே திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்பது புரிய வந்தது. இந்தப் படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில் இப்போது அந்தத் தேதி மாற்றப்பட்டுள்ளது.
கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி உள்ள ‘விஸ்வரூபம்2’ வரும் ஆகஸ்ட் 10 அன்று வெளியாவதால் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் தேதியை படக்குழு தள்ளிப் போட்டுள்ளது. புதிய அறிவிப்பின் படி இப்படம் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நயன்தாரா திரையரங்கில் நேரடியாக கமல்ஹாசனுடன் மோதுவதை தவிர்த்திருக்கிறார்.