சினிமா

துப்பாக்கியும் துரத்தலும் நயன்தாராவின் 'வேற லெவல்' !

"டிமாண்டி காலனி" படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் இயக்குநர் அஜய் நாகமுத்து. இவரின் அடுத்த படம் "இமைக்கா நொடிகள்". இதில் நயன்தாரா, அதர்வா முரளி, ராஷி கன்னா, பாலிவுட்டின் பிரபல கிளாஸிக் திரைப்படங்களின் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு போன்ற பிரபல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.டி.ராஜசேகர், நீண்ட நாட்களுக்கு பிறகு இமைக்கா நொடிகளுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் இன்று வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ள, இந்தப் படத்தில் நயன்தாரா காவல்துறை அதிகாரியாக சண்டைக் காட்சிகளில் கலக்கியுள்ளதாக, டிரெய்லரை பார்த்துவிட்டு அவரது ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும், சர்ப்ரைஸாக இந்தப் படத்தில் சிறிய வேடத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் கதாப்பாத்திரம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி ட்ரெய்லரில் தோன்றுவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.