சினிமா

“லவ் யூ சார்” - இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

“லவ் யூ சார்” - இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

webteam

’இயற்கை’, ’பேராண்மை’, ‘ஈ’உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் உடல் நலக்குறைவால் இன்று காலாமானார். அவரது இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திரைப்பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குநர் ஜனநாதன் இறப்பு குறித்து நடிகர் ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ ஆழ்ந்த இரங்கல் ஜனா சார். யார் ஒருவராலும் உங்களை எனது நினைவுகளில் இருந்து பிரிக்க முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ லல் யூ சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் மோகன் ராஜா ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ நெஞ்சம் நொறுங்கி விட்டது . ஜனநாதன் சாருக்கு ஆழந்த இரங்கல். எனக்கு மட்டுமல்லாது பலருக்கு அவர் ஒரு உத்வேகம் அளிக்க கூடிய மனிதராக இருக்கிறார். அற்புதமான ஆன்மா எப்போது நினைவு கூறப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை சுருதிஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, “ கனத்த இதயத்துடன் நாங்கள் உங்களுக்கு குட் பை சொல்கிறோம். உங்களுடன் பணியாற்றியது ஒரு அற்புதமான அனுபவம். நீங்கள் வழங்கிய அறிவிற்கும், அன்பான வார்த்தைகளுக்கும் எனது நன்றிகள். எனது நினைவுகளில் எப்போதும் நீங்கள் இருப்பீர்கள். இயக்குநரை இழந்து வாடும் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டதாவது, “ உங்கள் திரைப்படங்கள் சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகள் குறித்த பார்வையை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கும். உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் டி. இமான் பதிவிட்டதாவது, “ ‘லாபம்’ இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது இல்லை. சமூக புரட்சியாளர் கார்ல் மார்க்ஸ் நினைவு தினத்தில் அவர் காலாமாகியுள்ளார். அவர் அனைவருக்கும் முன் மாதிரி. நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டதாவது, “ எஸ்.பி.ஜனநாதன் உயிரிழப்பு என்னை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1959 ஆம் ஆண்டு மே -7 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் வடசேரியில் ஜனநாதன் பிறந்தார். 2003 ஆம் ஆண்டு ஷியாம், அருண்விஜய், நடிப்பில் வெளியான ‘இயற்கை’படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் தொடர்ந்து ஜீவா, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஈ’, ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘பேராண்மை’, ஆர்யா, ஷியாம், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான  ‘புறம்போக்கு எனும் பொதுவுடைமை’ உள்ளிட்ட படங்களை இயக்கினார். மார்க்சிய சிந்தனை கொண்ட இயக்குநர் எஸ்.பி ஜனநாதன், தனது படைப்புகளில் இடதுசாரி பார்வையினை அழுத்தமாக பேசிவந்தவர். 

2003 ஆம் ஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருது இவர் இயக்கிய ‘இயற்கை’ படத்திற்கு வழங்கப்பட்டது. இவரின் உதவி இயக்குநர் ‘கல்யாண்’ இயக்கிய பூலோகம் படத்திற்கு வசனகர்த்தவாக பணியாற்றினர். தற்போது விஜய் சேதுபதி, சுருதிஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் லாபம் படத்தை இயக்கியுள்ளார். வாழ்வின் இறுதி காலம் வரை ஜனநாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை.

முன்னதாக, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜனநாதன் குறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்தன. அதனைத்தொடர்ந்து ஜனநாதனுக்கு உயர் சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறினர். இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 

.