Na Muthukumar PT
சினிமா

இதயங்களை கவிதை வரிகளால் தாலாட்டும் கன்னிகாபுரத்துக் கவிஞன்! தமிழால் உயிர்வாழும் நா.முத்துக்குமார்!

சண்முகப் பிரியா . செ

உடலாய் தான் இல்லாவிட்டாலும், உயிராய் இருந்து தமிழ் சினிமாவை தன் பாடல்களால் இன்றுவரை கட்டி ஆண்டுக்கொண்டிருக்கும் ஒரு அளப்பரியாக் கவிஞன் நா.முத்துக்குமார்.

அவர் மறைந்து ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஒவ்வொரு பாடல்களிலும் மேடைகளிலும் அவர் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கிறார். காரணம் கவிஞனாக மட்டுமின்றி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு தாக்கத்தை கொடுத்துச் சென்றவர் அவர். அப்படிப்பட்ட அசாத்தியக் கவிஞனின் பிறந்தநாளை அவரின் வாசகர்கள் வழி நாமும் கொண்டாடுவோம்.

நா. முத்துக்குமார்

யார் இந்த நா.மு..?

கன்னிகாபுரத்து கவிஞன், வாசிப்புக் காதலன், புத்தகப் பிரியன், பயணப் பித்தன், பூமாலையாய் பா மாலை செய்பவன், பாடலால் பலரையும் காதலிக்க வைத்தவன், உவமைகளை விதவிதமான வடிவில் வகுத்து தொகுத்தவன், அளப்பரியா படைப்பாளி, இசைக்கு எழுத்துக்களை இசைய வைத்தவன்...

இப்படி நா.மு-வைப் பற்றி சொல்லிகொண்டே போகலாம். நா மு தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ரேஷன் அட்டையில் பெயர் பதியப்படாத உறுப்பினர். துயர், வெறுமை, காதல் என வாழ்வின் அடிப்படை உணர்வுகளுமே இவரது எழுத்தின் பிரதானம்.

புகைவண்டியை ராட்சச உலோகப் பாம்பாகவும், வாழ்க்கையை ஒரு கொலாஜ் ஓவியமாகவும் உருவகப்படுத்திப் கவிதை வார்த்தவர்.
Na.Muthu kumar

வாழ்வின் ஒவ்வொரு சூழலையும் ஒவ்வொரு உறவையும் அவ்வளவு நேசித்துக் கவிதை தந்தவர். இவரின் ஆனந்த யாழ் மீட்டப்படாத வீடில்லை, இவரால் காதலிக்காத காதலர்கலும் இல்லை. சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகையும் அழகாய் இசையில் சேர்த்தவர் என நா மு வைப் பற்றி நினைக்கையில் நம் எல்லோருக்கும் சொல்லிச் சிலாகிக்க அத்தனை கவிதைகளும் உணர்வுகளும் பொங்கி வரும்.!

பாடலாசிரியரை காட்டிலும் கவிஞர் என்பதிலேயே நா.மு-க்கு பெருமிதம்!

திரையுலகில் மிகவும் குறுகிய காலத்தில் அதாவது, பன்னிரண்டே ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியதவர் தான் நா.முத்துக்குமார். ஆனாலும், நா.முத்துக்குமார் சினிமா பாடலாசிரியர் என்பதை காட்டிலும் தான் ஒரு கவிஞர் என்பதில் தான் எப்பொழுதும் பெருமிதம் கொள்வார். பாடலாசிரியர் என்பதை தாண்டி இந்த உலகம் தன்னை கவிஞராக அங்கீகரிக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புவார் என்று அவரை அறிந்தவர்கள் சொல்வார்கள்.

நா.முத்துக்குமார்

அணிலாடும் முன்றில், பட்டாம்பூச்சி விற்பவன் போன்ற அவரது கவிதை புத்தகங்கள் பலரது இதயங்களை கொள்ளை கொண்டவை. ஆனால், கவிஞர் என்ற பெருமிதத்தை என்றுமே அவர் வெளிக்காட்டியதில்லை.

இலக்கியம் குறித்து பெருமிதம்!

இலக்கியம் குறித்து அவர் மிகப்பெரிய பெருமிதம் கொண்டிருக்கிறார். “மருத்துவர் படிக்கிறவர்கள் மருத்துவம் மட்டுமே படிக்கிறார்கள்; பொறியியல் படிக்கிறவர்கள் பொறியியல் மட்டுமே படிக்கிறார்கள்.. ஆனால் இலக்கியம் படிக்கிறவர்கள் தான் மனிதநேயத்தையும், வாழ்க்கையையும் கற்றுக் கொடுக்கும்” என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

Na Muthukumar

வாசிப்பே மூச்சாக கொண்டவர்!

எவ்வளவு பரபரப்பாக திரையுலகில் அவர் இயங்கிக் கொண்டிருந்தாலும் ஒரு பொழுதும் அவர் படிப்பதை நிறுத்திக் கொண்டதே இல்லை. அவரது இந்த வாசிப்பு பழக்கம் குறித்து பலரும் ஆச்சர்யமாக சொல்லியிருக்கிறார்கள். அதாவது பல கவிஞர்கள் ஒரு கட்டத்தில் தவறவிட்ட வாசிப்புப் பழக்கத்தை தீராத வெறியாய் அவர் கடைபிடித்து வந்ததாக கூறுவார்கள். ஒரு நாளைக்கு 5-6 மணி நேரம் தவறாமல் வாசிக்கும் பழக்கும் கொண்டவராய் அவர் இருந்துள்ளார். அவரிடமே உங்களுக்கு பொழுதுபோக்கு எது என்று கேட்டால் அவரிடம் இருந்து வரும் முதல் வார்த்தை வாசிப்புதான்.

“விருதுகள் எனக்கு பொருட்டல்ல”

இவ்வளவு பாடல்கள் எழுதி விருதுகள் பல பெற்ற போதும் விருதுகள் குறித்து என்றுமே அவர் அலட்டிக் கொண்டதில்லை. இரண்டு தேசிய விருதுகளை வென்றவர் அவர். “எல்லா படைப்பையும் விருதை நோக்கி எழுதுவதல்ல.. என்னுடைய திருப்திக்காகவுவும், ரசிகர்களின் மனசுக்காகவும்” என்று நெகிழ்ச்சியாக கூறுவார்.

ஒருநாளில் வாழ்க்கை.. பாடல் உருவான விதம் குறித்து..

நா.முத்துக்குமாரின் பாடல்களில் பலருக்கும் நம்பிக்கை கொடுத்த அருமருந்தாக அமைந்த பாடல் என்றால் அது புதுப்பேட்டையில் இடம்பெற்ற ஒருநாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது பாடல்.

“எந்த சோகமும் ஒருநாள் தான். முதல் நாள் கொஞ்சம் ஆழமாக இருக்கும். அடுத்த நாள் அந்த ஆழத்தின் அடர்த்தி குறையும். அதற்கு அடுத்த நாள் மனசு லேசாக ஆகிடும். நான்காவது நாள் அந்த சோகத்தை மறந்துவிடுவோம். இதைத்தான் நாங்கள் பல்லவியாய் வச்சோம். ஒருநாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது. மறுநாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது. எத்தனைக்கோடி கண்ணீர் மண் விழுந்திருக்கும். அத்தனை கண்ட பின்னும் இங்கே பூப்பூக்கும்” என்று அந்தப் பாடல் குறித்து நா.முத்துக்குமார் விவரிக்கும் அழகே தனி.

நா.முவின் மனசும், அறிவும் இதுதான்!

நா.முத்துக்குமாரின் கடைசி பாடல் ஒன்று குறித்து அதன் வரிகளை சிலாகித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மிகவும் நெகிழ்ச்சியாக கூறியிருப்பார்.

“மொழி இல்லை மதம் இல்லை; யாதும் ஊரே என்கிறாய்

புல் பூண்டு அது கூட சொந்தம் என்றே சொல்கிறாய்

காற்றோடு விளையாட ஊஞ்சல் எங்கே செய்கிறாய்

கடன் வாங்கி சிரிக்கின்ற மானுடன் நெஞ்சை கொய்கிறாய்

உயிரே எந்தன் செல்லமே” என்ற 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்களே பாடல் தான் அது..

நா.முத்துக்குமாரின் மனசையும் அவரது அறிவையும் ஒருசேர சொல்லும் பாடல் அது..

உங்கள் மனங்களை கொள்ளை கொண்ட நா.முத்துக்குமாரின் கவிதை வரிகளை பகிர்ந்து கொள்ளுங்கள்!