சினிமா

மீண்டும் மணிரத்னம் படம்: மதுபாலா ஆசை

மீண்டும் மணிரத்னம் படம்: மதுபாலா ஆசை

webteam

மணிரத்னம் படத்தில் நடிக்க மீண்டும் ஆவலாக இருக்கிறேன் என்று நடிகை மதுபாலா கூறினார்.

தமிழில், அழகன், வானமே எல்லை, ரோஜா, ஜென்டில்மேன் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் மதுபாலா. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்துள்ள அவரிடம், ’ரோஜா’ வெளியாகி 25 வருடம் ஆகிவிட்டது, இன்னும் ரோஜா மதுபாலா என்று அழைக்கிறார்கள்’ என்று கேட்கப்பட்டது. 
அதற்கு அவர் கூறும்போது, ’அந்தப் படத்தில் நடிக்கும் போது, நான் மது ரகுநாதனாக இருந்தேன். இப்போது மது ஷாவாக இருக்கிறேன். ஆனால் சினிமாவில் நான் மது என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன். அப்படித்தான் அழைக்கச் சொல்கிறேன். ஆனாலும் ’மது... ’ரோஜா’வில் நடித்தவர்’ என்பதே என் டேக்லைனாக இருக்கிறது. அதிக படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் பெயர் என்னுடன் ஒட்டிக்கொண்டது. சமீபத்தில் ரோஜா படம் வெளியாகி 25 வருடம் ஆகிவிட்டதை ஒட்டி, டிவிட்டரில்  டேக் லைன் டிரெண்டானது. ’அடக்கடவுளே, ரோஜா வெளியாகி 25 வருடம் ஆகிவிட்டதா?’ என்று நினைக்கவில்லை. ’25 வருடத்துக்கு முன் நான் ’ரோஜா’ படத்தில் நடித்திருக்கிறேன் என்றுதான் நினைத்தேன். இப்போதும் மணிரத்னத்துடன் தொடர்பில்தான் இருக்கிறேன். அவர் படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்பது கனவு. அதே போல அரவிந்த் சாமியுடன் தொடர்பில்தான் இருக்கிறேன். அவர் நடித்த ’தனி ஒருவன்’ படத்தை சமீபத்தில் பார்த்தேன். அவர் வில்லனாக நடித்திருந்தார். ஆனால், ஹீரோ போலதான் இருந்தார். தமிழில் ஏன் மீண்டும் நடிக்கவில்லை என்று என்னைக் கேட்கிறார்கள். என்னை வசீகரிக்கும் கதை கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்தால் நடிப்பேன்’ என்றார்.