VIRTUAL ஸ்டூடியோ முகநூல்
சினிமா

ஏ.ஆர்.ரகுமானின் VIRTUAL ஸ்டூடியோ... இத்தனை சிறப்புகளா?

சென்னை அருகே ஏ.ஆர்.ரகுமானின், மெய் நிகர் ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது. அதன் சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்கள்: எழில் மற்றும் பாலவெற்றிவேல்

திரைத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் பணி சுமைகள் குறைகின்றன. அப்படியான ஒன்றுதான் VIRTUAL எனப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம். உலக அளவில் பிரபலம் அடைந்துள்ள இந்த தொழில்நுட்பத்துடன் செயற்கை நுண்ணறிவையும் சேர்த்து உருவாக்கிய ஒரு ஸ்டூடியோ சென்னை அருகே திறக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கவரப்பேட்டையில் ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டூடியோவில், Ustream எனும் நிறுவனத்தோடு இணைந்து அமைக்கப்பட்டுள்ளது. 20 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்டூடியோவில் நவீன தொழில்நுட்ப கருவிகள் இடம் பெற்றுள்ளன. இங்குள்ள தொழில்நுட்பங்கள் மூலம் புகைப்படங்களை கொண்டு திரைப்படத்திற்கு தேவையான பேக்ரவுண்ட்களை உருவாக்க முடியும் மற்றும் குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் திரைப்பணிகளை முடிக்க முடியும் என்கிறார் Ustream ஸ்டூடியோ நிறுவனர்.

மெய்நிகர் ஸ்டூடியோ சென்னையில் உருவாக்கப்பட்டிருப்பது தமிழ்த் திரைத்துறையினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், தமிழ் திரைப்படங்களில் சிறந்த கிராஃபிக்ஸ் உருவாகும் எனவும் கூறினார் ஏர்.ஆர். ரகுமான்.

புதிதாக திறக்கப்பட்டுள்ள ஸ்டூடீயோவில் 1.9 பிக்சல் தடத்திற்கு உட்பட்ட முதன்மையான LED ஸ்கிரீன், 40 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்டுள்ளது. சிறந்த கேமராக்கள், டிராக்கிங் அமைப்பு, பல்வேறு விதமான ஒளியமைப்புகள் என முக்கிய வசதிகள் உள்ள ஸ்டூடியோவில், விரைவாக படக்காட்சிகளை பதிவேற்றம் செய்து, நேரடியாக எடிட் செய்யும் நவீன வசதிகளும் இடம் பெற்றள்ளன.

அத்துடன் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைக்கப்பட்டிருப்பதால், குறைந்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியும் என்கின்றனர். இதன் பயன்பாடு தமிழ் திரைத்துறையில் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.