மதுஸ்ரீ-ஏ.ஆர்.ரஹ்மான் கோப்புப் படம்
சினிமா

3 நாட்களாக தொடர் விருது மழையில் நனைந்த ‘மல்லிப்பூ’ பாடகி மதுஸ்ரீ - தமிழுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் வைத்த கோரிக்கை!

‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் மல்லிப்பூ பாடல் பாடியதற்காக தொடர்ச்சியாக 3 விருதுகளை பெற்ற பாடகி மதுஸ்ரீக்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டு தெரிவித்து கோரிக்கை வைத்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

சங்கீதா

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்த இந்தப் படத்தை, ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டு இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். கேங்ஸ்டர் ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்தப் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மல்லிப்பூ பாடல் போஸ்டர்,

குறிப்பாக இந்தப் படத்தில் வரும் ‘மல்லிப்பூ’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியதுடன், பலரின் செல்ஃபோன் ரிங்டோனாகவும் மாறியது. ஏனெனில், குடும்பத்திற்காக வெளிநாடு அல்லது வெளியூருக்கு சென்று உழைக்கும் கணவனின் பிரிவை மனைவி வருத்தத்துடன் கூறும் வகையில், பாடலாசிரியர் தாமரை மிகவும் அழகாக பாடல் வரிகளை அமைத்திருந்ததும், பாடல் எடுக்கப்பட்ட விதமும், ஏ.ஆர். ரஹ்மான் இசையோடு மதுஸ்ரீயின் இனிமையான குரலும், இந்தப் பாடல் பலரின் மனம் கவர்ந்த பாடலாக மாறியதற்கு காரணமாக அமைந்தது.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாடகி மதுஸ்ரீ இதற்கு முன்பே, அதாவது 2003-ம் ஆண்டிலிருந்தே, வித்யாசாகர், தீனா, கார்த்திக் ராஜா, டி. இமான், யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர். ரஹ்மான் என பல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருந்தாலும், ‘மல்லிப்பூ’ பாடல் தான் அவரை மேலும் பிரபலமாக்கியது. இதற்காக, அவருக்கு 3 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

வெந்து தணிந்தது காடு,

இதுதொடர்பாக மதுஸ்ரீ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹாட்ரிக் ஹாட்ரிக் ஆனந்தவிகடன் விருதுகள் மார்ச் 30 அன்று, பிகைண்ட்வுட்ஸ் கோல்டு ஐகான் விருதுகள் ஏப்ரல் 1-ம் தேதி, ஜேஎஃப்டபிள்யூ (jfw) விருதுகள் ஏப்ரல் 2-ம் தேதி.. மல்லிப்பூ பாடலுக்காக சென்னையில்...” என்று பதிவிட்டு இருந்தார். மேலும் ஹேஷ்டேக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தையும் சேர்த்திருந்தார்.

இந்நிலையில், இந்தப் பதிவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் டேக் செய்து, ‘வாழ்த்துகள்’ என்று மகிழ்ச்சி எமோஜியுடன், விரைவாக தமிழ் கற்றுக்கொள்வது எப்படி என்ற Quora-வின் இணைப்பையும் சேர்த்துள்ளார். மதுஸ்ரீ-ஐ விரைவில் தமிழ் கற்றுக்கொள்ளும்படி சூசகமாக அவர் கூறியுள்ளதை ரசிகர்கள் வரவேற்றுள்ளதுடன், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மதுஸ்ரீ, தமிழில் பாடிய விதம் மிகவும் அழகாகவே இருந்ததாகவும் நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர்.