சினிமா

முன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு

முன் ஜாமீன் கோரி ஏ.ஆர்.முருகதாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு

webteam

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று இப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாருக்கு ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் கோமளவல்லி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டுமென்றும் வலியுறுத்தினர். 

இதற்கிடையே நேற்று இரவு ஏ.ஆர். முருகதாஸை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கைது செய்ய முயற்சிப்பதாக வந்த தகவல் தவறு எனவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே  காவலர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டிற்கு சென்றதாகவும் காவல் துறை விளக்கம் அளித்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நேற்று இரவு இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது வீட்டின் கதவை போலீசார் தட்டியதாகவும் ஆனால் நான் அங்கு இல்லை எனவும் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று காலை சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸின் முன்ஜாமீன் மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 'சர்கார்’ படத்திற்கான சென்சார் வேலைகள் காலை 10.30 மணி அளவில் தொடங்குவதாகவும் சர்ச்சைக்குரிய காட்சிகள் அகற்றப்படும் என தயாரிப்பாளர்கள் உறுதி அளித்ததாகவும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க இணைச்செயலாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.