சினிமா

விஜய் சேதுபதியை நடுவர் வெளியேற்றவில்லை - 800 படத்தின் இணை எழுத்தாளர்.!

விஜய் சேதுபதியை நடுவர் வெளியேற்றவில்லை - 800 படத்தின் இணை எழுத்தாளர்.!

webteam

விஜய் சேதுபதி 800 படத்தில் நடிக்க வேண்டும் என படத்தின் இணை எழுத்தாளர் கேட்டுக்கொண்டுள்ளார். 

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். ஆனால் ஈழத்தமிழர்களுக்கு துரோகம் விளைவித்த முத்தையாவின் வரலாற்றுப் படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வேண்டும் என எதிர்ப்புகள் வலுத்தது. இதனைத் தொடர்ந்து முத்தையாவும், தயாரிப்பு நிறுவனமும் குறித்து விளக்கம் அளித்தனர். இருப்பினும் எதிர்ப்புகள் நின்றபாடில்லை.

இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியின் சினிமா வாழ்வைக் கருத்தில் கொண்டு, கிரிக்கெட் வீரர் முத்தையா விஜய் சேதுபதியை படத்தில் இருந்து விலகுமாறு கோரிக்கை வைத்து அறிக்கை  வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் தற்போது  800 படத்தின் இணை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலகா படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது குறித்தும், படம் தொடர்பாகவும் சிலக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அதில் “ விஜய் சேதுபதியை நான் சந்தித்தது இல்லை. ஆனால் அண்மையில் நான் அவருடைய ரசிகனாக மாறினேன். தற்போது முத்தையா முரளிதரனின் கோரிக்கைக்கு இணங்க 800 படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியுள்ளார். நான் முத்தையாவையும் சந்தித்தது இல்லை.

ஒரு கலைஞனாக விஜய் சேதுபதி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க மிக ஆவலாக இருந்தார். ஆனால் அவர் தற்போது வெளியேறியுள்ளார். இது மிகவும் தாமதமானது. அவர் நடுவர் கைஎழுப்பி கொடுத்த விக்கெட்டால் வெளியேறவில்லை. மாறாக கூட்டத்தின் கூச்சல் காரணமாக வெளியேறியுள்ளார்.

முரளிதரன் குறித்தான கதையை 7 பாகங்களாக எழுதியும் அவரது பெயரை சரியாக எழுதுவதில் சந்தேகம் இருக்கிறது. அவரை ஒருவேளை நான் சந்திக்கும் பட்சத்தில் என்னிடம் உள்ள 800 கேள்விகளில் முதலாவது கேள்வியாக  இதனை முன்வைத்து சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வேன்.

விஜய் சேதுபதியை பொருத்தவரை அவரிடம் நான் சொல்ல விரும்புவது தயவுசெய்து போட்டியை ரத்து செய்யாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்