ஏழாம் நூற்றாண்டில் பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் இடையே போர், இதில் சேரர்களுக்கு உதவியாக சோழர்களும் இன்னும் பல குறு படைகளும் வருகிறார்கள். பாண்டிய அரசர் அரிகேசரிக்குப் பிறகு படையை வழி நடத்துவது அவரின் மகன் ரணதீரன். பெரும் படையால் பாண்டியர்களை வீழ்த்த நினைத்த சேரர் படையை வீழ்த்துகிறார் ரணதீரன் (ஷக்தி மித்ரன்). உதவ வந்த சோழர் படை காட்டுக்குள் பதுங்கி வாழத்துவங்குகிறது. பிற சிறு குறு படைகளும் துரத்தியடிக்கப்படுகிறது. அப்படி பாண்டியர்களால் பாலை நிலத்துக்கு விரட்டப்பட்ட இனக்குழு தான் எயினர் குழு. பெரும் படைகளால் வீழ்த்த முடியாத பாண்டியர்களை எதிர்க்க எயினர் குழுவில் இருந்து கொதி (சேயோன்) என்ற வீரன் வருகிறான். அவனால் பாண்டியர்களை வீழ்த்த முடிந்ததா? இல்லையா? என்பது மீதிக்கதை.
வழக்கமாக வரலாற்றுப் புனைவு கதைகளை சினிமாவாக மாற்றும் வகையில் இருந்து மாறி ஒரு தனித்துவமான சினிமாவை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன். இரு ராஜ்ஜியங்களுக்கு இடையே நடந்த போரையோ, அல்லது ஒரே ராஜ்ஜியத்துக்குள் அதிகாரத்திற்காக நடக்கும் சூழ்ச்சிகளும் தான் இதுவரை நமக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் யாத்திசை ஒவ்வொரு அரசனுக்குப் பின்னும் ஒவ்வொரு போருக்குப் பின்னும் அதிகாரம் என்ற போதை இருப்பதைப் பற்றி பேசுகிறது. நல்ல அரசன், கெட்ட அரசன் என எவரையும் வரையறுக்காமல் அவர்களின் அதிகாரம் நோக்கிய பயணத்தை மட்டும் பதிவு செய்கிறது. அதிகாரம் ஒருவனை எப்படி மாற்றுகிறது, அதிகாரத்தை திரும்பப் பெற ஒருவன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை பேசுகிறது. போர் என்பது வீரத்தை நிரூபிக்கும் களம், எத்தனை பேரை கொன்றோம் என்ற பெருமை போன்ற மாயைகளை பற்றி சொல்லாமல், போர் ஒரு காட்டுமிராண்டித் தனம் என்பதையும் குறிப்பிடுகிறது படம்.
படத்தின் பட்ஜெட் மிக குறைவு, எனவே எந்தக் காட்சியையும் அலங்காரமாக சொல்ல நினைக்காமல், இயல்பாக சொல்ல முயன்றிருக்கிறது படக்குழு. அரச கால உடைகள், போர் ஆயுதங்கள், சிம்மாசனம் எல்லாமே எளிமையான வகையிலேயே இருக்கிறது. இரண்டு குழுக்களுக்கு இடையிலான சண்டைக் காட்சிகளும் கூட நிஜத்துக்கு நெருக்கமாக எடுக்கப்பட்டிருக்கிறது. எயினர் குழுவினர் பேசும் தமிழை பழந்தமிழாக வடிவமைத்திருப்பது புது அனுபவத்தை அளிக்கிறது. எயினர்கள் பேசும் தமிழுக்கும், பாண்டியர்கள் பேசும் தமிழுக்கும் இருக்கும் வேறுபாட்டை வைத்தே, தமிழ் மொழியில் இருக்கும் வெவ்வேறு சொல்லாடல்களை நம்மால் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. அதே சமயம், எயினர் குழு பேசும் வசனங்களுக்கு படம் நெடுகிலும் தமிழ் சப் டைட்டில், ஆங்கில சப் டைட்டில் இரண்டும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இது பார்வையாளனை சற்று சங்கப்படுத்துகிறது. சக்கரவர்த்தியின் இசையில் பாடல்கள் சிறப்பு. அதை விட பின்னணி இசை வெகு சிறப்பு. படத்திற்கு ஒரு எபிக் தன்மையை வழங்குவதே பின்னணி இசைதான்.
ராஜா காலத்து படம் என்றாலே அதில் புனைவை எவ்வளவு வேண்டுமானாலும் சேர்க்கலாம் என்னும் நிலை தான் உலக அளவில் இன்று வரையில் இருக்கிறது. அதிலிருந்து வேறுபட்டு நிற்பது மிகச் சொற்பான படைப்புகள் தான். அதைப்போலவே பிரமாண்டம் என்கிற பெயரில், அந்தக் காலகட்டத்தில் இல்லாத, பயன்பாட்டுக்கு வராத பொருட்களைக்கூட இத்தகைய படங்களில் பார்க்க முடியும். யாத்திசை முற்றிலுமாய் வேறுபட்டு நிற்பது இந்த இடத்தில் தான். The Favourite படத்தைப் போல, படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் வீரர்களுக்குடைய சாயலில் இல்லாமல் பார்த்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களுக்கு சிக்ஸ் பேக் போன்ற சினிமா சடங்குகள் இருந்தாலும், பெரும்பான்மை கதாபாத்திரங்கள், இயல்பான மனிதர்களாகவும், அவர்களாகவே உருவாக்கிய ஆயுதங்களை மட்டுமே வைத்து போர்க் காட்சிகளை வடிவமைத்திருப்பது சிறப்பு. அதே போல், கொஞ்சம் பிசகினாலும் டாக்குமென்டரி உணர்வைத் தந்துவிடக்கூடிய எல்லம் வாய்ப்புகளும் இருந்தும், எந்தவித சமரசமுமின்றி மரபு சார்ந்து தமிழர்கள் செய்த இரண்டு விஷயங்களை படத்தில் வெளிப்படையாகக் காட்டியிருக்கிறார்கள். இயக்குநர் ரஞ்சித் குமாருக்கும், காஸ்டியூம் டிசைனர் சுரேஷ் குமாருக்கும் பாராட்டுக்கள்.
கொதியாக நடித்திருக்கும் சேயோன், ரணதீரனாக வரும் ஷக்தி மித்ரன், துடி என்னும் போர் வீரராக சமர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் இரண்டு மூன்று நடிகர்களைத் தவிர பெரும்பாலும் புதுமுகங்களே. ஆனால், எந்தவித குறையுமின்றி சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் குறைகள் எனப் பார்த்தால் சிஜி கண்டிப்பாக இன்னும் மேம்பட்டு இருந்திருக்கலாம். ஆனால் அது பட்ஜெட் சார்ந்த குறை என ஒதுக்கினாலும், ஒரு படமாகவும் சில குறைகள் இருக்கிறது. முதலில் சொன்னது போல படம் அதிகாரத்தைப் பற்றி பேசுகிறது. அதிகாரத்திற்கான சண்டைதான் எல்லாம் என்பதை உணர்த்த ரணதீரனுக்கு ஒரு காட்சியும், கொதிக்கு ஒரு காட்சியும் வைத்திருக்கிறார்கள். ஆனால், ரணதீரனின் வசனங்களில், அவன் ஏனோ நமக்கு விளக்கம் சொல்வதற்காகவே அந்தக் காட்சியை வைத்திருப்பது போல படமாக்கியிருக்கிறார்கள். படத்தில் சில காட்சிகள் அப்படி கடந்து போகிறது. இந்தப் படத்திற்கான காட்சிகளுக்கு இடையில், அடுத்த பாகத்துக்கான லீடை உருவாக்கி ஆங்காங்கே அதைக் காட்டுவது படத்தோடு ஒட்டாமல் விலகி நிற்கிறது. அதைத் தவிர்த்திருக்கலாம்.
இந்தப் படம் ரணதீரன் - கொதி இரண்டு பேருக்கு இடையிலான மோதலையும், யார் வெல்வது என்பதையும் கூறுகிறது. ஸ்பார்ட்டகஸைப் போல கொதிக்கும் ஒரு கடந்த காலம் இருக்கிறது, அவன் தான் இனி அவன் மக்களுக்கான உத்வேகம் போன்றவற்றை எல்லாம் இறுதியில் வெறும் வசனங்களில் கடந்து போக வேண்டியதிருக்கிறது. படம் அதன் முடிவை நெருங்க நெருங்க இடைச்செறுகலாக வரும் சில காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.
எல்லைகளை கடந்த சினிமாவில், தமிழில் இருந்து வந்திருக்கும் முக்கியமான படைப்பு இந்த யாத்திசை.