திரை விமர்சனம்

சிங்கத்தையும், புலியையும் சேர்த்து என்ன செஞ்சு வைச்சிருக்கீங்க பாஸ்? - லைகர் விமர்சனம்

சிங்கத்தையும், புலியையும் சேர்த்து என்ன செஞ்சு வைச்சிருக்கீங்க பாஸ்? - லைகர் விமர்சனம்

webteam

மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸில் உலக சாம்பியன் ஆக ஆசைப்படும் இளைஞனின் கதையே லைகர்.

மகன் லைகரின் (விஜய் தேவரகொண்டா) மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிக்காக கரீம் நகரிலிருந்து மும்பைக்கு அழைத்து வருகிறார் பாலாமணி (ரம்யா கிருஷ்ணன்). தன் கணவர் பெற முடியாத சாம்பியன்ஷிப் பட்டத்தை மகன் பெற வேண்டும் என விரும்புகிறார். அதற்காக கோச்சிங்கில் சேர்த்துக் கொள்ளும்படி, பயிற்சியாளர் ரோனத் ராயிடம் கேட்க, அவரும் இவர்கள் நிலமையை பார்த்து கோச் செய்ய சம்மதிக்கிறார். முதலில் திக்குவாய் பிரச்னையால் அவமானங்களை சந்தித்தாலும், அமைதியாக தன் கனவை நோக்கி பயணிக்கிறார் விஜய்.

இதே சமயத்தில் தான்யா (அனன்யா பாண்டே) அறிமுகம் ஆகிறார். சண்டையில் ஆரம்பிக்கும் விஜய் - அனன்யா சந்திப்பு பின்பு காதலாக மாறுகிறது. சாம்பியன் கனவில் இருந்து விஜயின் கவனம் சிதறக் கூடாது என காதலைக் கைவிடும்படி சொல்கிறார்கள் அம்மா ரம்யாகிருஷ்ணனும், கோச்சும். இதன் பின் விஜய் தேவரகொண்டா என்ன முடிவு எடுக்கிறார்? அவரின் சாம்பியன் கனவு என்ன ஆனது? காதல் கைகூடியதா? இதுதான் லைகர் படத்தின் மீதிக்கதை.

படத்தின் ப்ளஸ் விஜய் தேவரகொண்டா படத்துக்காக எடுத்துக் கொண்ட உழைப்பும், அவரின் சண்டைக் காட்சிகளும். விஷ்ணு ஷர்மாவின் ஒளிப்பதிவு, ஜானி சைக் பாஷாவின் கலை இயக்கம் இவை தவிர படத்தில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு விஷயம் கூட சிறப்பாக இல்லை.

அண்டர்டாக் கதாபாத்திரம், வாழ்க்கையில் போராடி வெற்றியடையும் கதை உலகம் முழுக்க பல விதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதில் மிகப் பழமையான ஒரு ஃபார்மட்டை தேர்ந்தெடுத்து ஒரு காட்சி கூட புதிதாகவோ, சுவாரஸ்யமாக இருக்கக் கூடாது என முடிவு செய்து கொண்டு எழுதினால் எப்படி இருக்குமோ அந்த மாதிரி ஒரு படமாக வந்திருக்கிறது லைகர். படத்தின் முதல் காட்சியில் இருந்து முடியும் வரை ஒரு இடத்தில் கூட படத்துடன் ஒன்ற முடியாமல் இருக்கையிலேயே நெளிய வைக்கிறது படம்.

ஒவ்வொரு காட்சியும் முந்தைய காட்சியை விட மோசாமாகவும் அசுவாரஸ்யமாகவும் இருக்க வேண்டும் என புதுமையான முயற்சியில் இறங்கி படத்தை எடுத்திருக்கிறார் பூரி ஜெகன்னாத். தெலுங்கு சினிமாவில் சம்பூர்னேஷ் பாபு என்று ஒரு நடிகர் உண்டு. நம்ம ஊர் சாம் ஆண்டர்சன் போல அங்கு அவர். அவரை வைத்து தெலுங்கு சினிமாக்களை கேலி செய்து 'ஹ்ரிதய கலேயம்', 'சிங்கம் 123', 'கொப்பரிமாட்டா' என சில படங்கள் எடுக்கப்பட்டது. அந்த சினிமாக்களின் நோக்கம் கேலி செய்து அதன் மூலம் நகைச்சுவையை அளிப்பது.

அதற்குள் எந்த லாஜிக்கும் கிடையாது, எந்த தர்மங்களும் கிடையாது. லொல்லு சபாவின் சினிமா வடிவம்போல். லைகர் படம் பார்த்த மொத்த நேரமும் ஒருவேளை இந்தக் கதை சம்பூர்னேஷ் பாபுவுக்கு எழுதப்பட்டு, அவரது கால் ஷீட் கிடைக்காததால் விஜய் தேவரகொண்டாவை நடிக்க வைத்திருப்பார்களோ என்ற எண்ணம் மேலோங்கியது.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவின் கதாபாத்திரம் ஸ்டாமரிங் பிரச்சனை உள்ளதாக காட்டப்படுவது, மைக் டைசனை வைத்து காட்சி என தேவையே இல்லாத பல விஷயங்கள் இருந்தது. பெரும்பாலான காட்சிகள் மிக நகைப்புக்குரியதாக இருந்தது. உதாரணமாக விஜய் தேவரகொண்டா ஒரு குத்துச்சண்டை போட்டியில் சண்டையிட்டுக் கொண்டிருப்பார். இதை விஜயின் தாய், ரம்யாகிருஷ்ணன் டிவியில் பார்த்துக் கொண்டிருப்பார்.

திடீரென எதிராளி தாக்கிவிட, மயங்கி கீழே விழுவார் விஜய். தன் மகன் மயங்கியதைப் பார்க்கும் தாய், “எந்திரிச்சு அடி” என டிவியைப் பார்த்து ஆக்ரோஷமாக கத்த, பாக்ஸிங் ரிங்கில் இருக்கும் விஜய் மயக்கம் கலைந்து எழுந்து எதிரியை அடித்து தும்சம் செய்வார்.

இப்படி ஒரு காட்சியை இப்போது எடுக்கும் ஸ்ஃபூஃப் படங்களில் கூட வைக்கத் தவங்குவார்கள். ஆனால் மிக தைரியமாக இந்தப் படத்தில் வைத்திருக்கிறார் பூரி.

சில படங்களுக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்கள் வரும், அதைப் படித்துவிட்டு படம் பார்க்கும் போது, இது அவ்வளவு மோசம் இல்லையே என்று தோன்றும். ஆனால் அந்த தைரியத்தில் லைகரை நெருங்கினால் ஆபத்து நிச்சயம். நீங்கள் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு மோசமான படம் இது.

- ஜான்சன்