80களில் மக்களுக்கு வேலை வாய்ப்பு, இந்திய நாட்டின் முன்னேற்றம் என்ற பெயரில் கணிம வளங்களை சுரண்ட நினைக்கிறது வெளிநாட்டு நிறுவனம். அரசாங்கமும் அதற்கு ஆதரவாக இருக்க, இதனை எதிர்த்து தமிழர் மக்கள் படை தாக்குதல்களை நடத்துகிறது. அந்தப் படையை அழிக்கவும், அதன் தலைவர் பெருமாளைப் (விஜய் சேதுபதி) பிடிக்கவும் காவல்துறை பல குழுக்களை அமைக்கிறது. இந்த நேரத்தில் புதிதாக போலீஸ் வேலைக்கு சேர்கிறார் குமரேசன் (சூரி). அந்த சூழலுக்கே புதியவரான குமரேசன், போலீஸ் அதிகாரிகளின் பற்றியும், அந்த ஊர் மக்களைப் பற்றியும், தமிழர் மக்கள் படை பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார். இதன் பிறகு குமரேசனுக்கு வரும் சவால்கள் என்ன? ‘வாத்தியார்’ என்ற பெருமாள் போலீஸில் பிடிபட்டாரா என்பது தான் ‘விடுதலை பாகம் 1’ படத்தின் கதை.
படத்தின் பெரும் பலம் வெற்றிமாறனின் திரைப்பட ஆக்கம். ஒரு ரயில் குண்டு வெடிப்பில் துவங்கும் படத்தை, இறுதி வரை நம்மை சோர்வடைய வைக்காமல் கதை நகர்த்துகிறார். இதற்குள் எளிய மக்களின் மீது போலீஸ் எப்படியெல்லாம் வன்முறையை செலுத்துகிறது, காவலர்களுக்கு இடையே இருக்கும் ஈகோ, வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதற்கு பின் நடக்கும் அரசியல் எனப் பலவற்றை பேசுகிறார். இதேபோல் பாராட்டுக்குரிய இன்னொரு விஷயம் கதை நாயகனாக வரும் சூரியின் நடிப்பு. இதுவரை பார்க்காத ஒரு சூரியை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார். இந்தக் கதையை தாங்கிப் பிடிக்கும் அளவுக்கான வலுவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் சூரி. உதவிக்கு ஓடுவது, இயலாமையில் தவிப்பது, தயங்கி தயங்கி காதல் சொல்வது, அறத்தின் பக்கம் நிற்பது என அத்தனையிலும் தேர்ந்த நடிகராக வெளிப்படுகிறார்.
பவானிஸ்ரீ, சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், மூணார் ரமேஷ் என அத்தனை பேரின் நடிப்பும் சிறப்பு. இந்த பாகத்தில் சில காட்சிகளே வந்தாலும் தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார் வாத்தியார் விஜய் சேதுபதி.
தொழில்நுட்ப ரீதியாக படத்தின் ஒளிப்பதிவு இந்தப் படத்தின் தன்மையோடு ஒன்றி இருக்கிறது. துவக்க காட்சியாக ஒரே ஷாட்டில் காட்டப்படும் ரயில் குண்டு வெடிப்பின் பாதிப்புகள், இரண்டு காவலர்கள் மலையேறி செல்லும் காட்சி, வாத்தியாரை பிடிக்க செல்லும் காட்சி எனப் பல இடங்களில் அசுரத்தனமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். இளையராஜா படத்தின் பின்னணி இசையை மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். சாமான்ய மக்களை, காவல்துறை அதற்கே உரித்தான போக்கில் விசாரிக்கும் பொழுது வரும் ராஜாவின் இசை அபாரம். படத்தின் பாடல்களும் சிறப்பாக இருக்கிறது. பெரும் உழைப்பை கோரியிருக்கும் இன்னுமொரு டிப்பார்ட்மெண்ட் சண்டை. அதைத் திறம்பட செய்திருக்கிறார் பீட்டர் ஹெய்ன்.
இந்தப் படத்தின் பிரச்சனைகள் என்ன என்றால், கண்டிப்பாக வெற்றிமாறன் இனி மோசமான ஒரு படத்தை எடுக்க முடியாது. ஆனால் அதை எவ்வளவு பலமாக சொல்கிறார் என்பதுதான் சிக்கல். முந்தைய படங்களோடு ஒப்பீட்டளவில் இது கொஞ்சம் வீக்கான படம். விசாரணையில் இருந்த அளவுக்கான வன்முறை இதிலும் இருக்கிறது. அது நம்மை அசௌகர்யமாக்குகிறது, ஆனால் அதே அளவு பதைபதைப்பு நமக்கு வருகிறதா என்றால் இல்லை. இந்தப் படம் எந்த இடத்திலும் சோர்வளிக்கவில்லை. அதற்கு காரணம் ஒரு காட்சிக்கான முழுமை வரும் முன்பு அடுத்த காட்சிக்கு நகர்ந்துவிடும் உத்தி. இது கதையை பரபரப்பாக்குகிறது. அந்தப் பரபரப்புக்கு இடையே காட்சிகளின் உணர்வு நமக்கு கிடைக்காமல் போகிறது. ஒருவேளை இந்த படத்தின் முழு உணர்வையும், கதாபாத்திரங்களின் தன்மையையும் புரிந்து கொள்ள அடுத்த பாகத்தையும் பார்க்க வேண்டுமோ என்ற கேள்வி எழுகிறது.
கூர்மையான வசனங்கள், நேர்த்தியான நடிப்பு, விறுவிறுப்பான பொலிட்டிகல் க்ரைம் என அடிப்படையில் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் அவை ஆழமாக காட்டப்படுகிறதா, கடத்தப்படுகிறதா? என்பதுதான் பிரச்னை. நிச்சயம் தமிழில் முக்கியமான படங்கள் வரிசையில் ‘விடுதலை’ படத்திற்கு இடம் உண்டு. அடுத்த பாகத்தையும் உடனடியாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் எழுகிறது. ஆனால், படத்தின் காட்சிகளும், விவாதிக்கப்படும் விஷயங்களிலும் இன்னும் ஆழம் இருந்திருக்கலாம் என்ற பிரச்னையும் உள்ளது. மற்றபடி கண்டிப்பாக நல்ல சினிமாவை விரும்பும் அனைவருக்கும் இந்தப் படத்தை பரிந்துரைக்கலாம். அதே சமயம் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இதில் நிறைய டிஸ்டர்பிங்கான காட்சிகள் உண்டு என்பதை மனதில் வைத்துக் கொண்டு செல்லவும்.