குடும்பப் பொறுப்புகளை சுமக்கும் மிடில் க்ளாஸ் குடும்பத்து இளைஞனின் வாழ்க்கை, ஒரு பெண்ணின் வருகையால் எப்படி மாறுகிறது என்பதே `ஃபேமிலி ஸ்டார்’.
கோவர்தன் (விஜய் தேவரகொண்டா) பாட்டி, இரு சகோதரர்கள், அவர்களின் மனைவி, குழந்தைகள் என மொத்த குடும்பத்தையும் தூக்கி சுமக்கும் பொறுப்பான இளைஞன். வீட்டுக்கு பலசரக்கு வாங்குவதில் துவங்கி, குடிநோயாளி அண்ணனின் சரக்கு பில் கட்டுவது, இன்னொரு சகோதரனின் பிசினஸுக்கு லோன் ஏற்பாடு செய்வது என சர்வ ரோக நிவாரணியாக சுழன்று உழைக்கிறார். கோவர்தனின் வீட்டின் மாடி போர்சனுக்கு வாடகைக்கு குடி வருகிறார் இந்து (மிருணாள் தாக்கூர்). இந்தக் குடும்பத்திற்குள் இந்து வந்ததன் பிறகு பல திருப்பங்கள் நடக்கிறது. அவற்றை கோவர்தன் எப்படி கையாள்கிறார் என்பதே மீதிக்கதை.
பரசுராம் தனது ஹூமரான ட்ரீட்மெண்டிலேயே இப்படத்தையும் நகர்த்தியிருக்கிறார். சில இடங்களில் அது ஒர்க் ஆகவில்லை என்றாலும், ஒரு புதுமையும் இல்லாத கதை, திரைக்கதையை நகர்த்துவதே அந்த ஹூமர் தான். விஜய் தேவரகொண்டா வழக்கமான நடிப்பை இதிலும் கொடுக்கிறார். குடும்பத்துக்கு அடங்கிய பையனாக பொறுப்பு காட்டுவது, ஒரு கதாப்பாத்திரத்தின் செயலால் கோபத்தில் வெடிப்பது என கதைக்கு தேவையான நியாயத்தை செய்திருக்கிறார். மிருணாள் தாக்கூர் நடிப்பில் குறை ஒன்றும் இல்லை, லிப் சிங் கூட சமாளித்து சரியாக பேசுகிறார். ஆனால், அதைத் தாண்டி நடிப்பாக எதுவும் நம் மனதில் பதியவில்லை. அதற்கு காரணம் அந்த கதாப்பாத்திரம் எழுதப்பட்டிருக்கும் விதம். கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் இதம்... ஆனாலும் எங்கயோ கேட்ட, டேஜாவு ஃபீலை தவிர்க்க முடியவில்லை. பின்னணி இசை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
பரசுராம் படம் என்றால் அரைத்து மாவு தான் இருக்கும். அதைக்கூட எளிதாக கடந்துவிடலாம். ஆனால் படத்தில் இவற்றைத் தவிர பல பிரச்சனைகள் உண்டு. முதலில் இப்படத்தில் சொல்லப்படும் எதுவும் நம்பும்படியாக அல்லது நாம் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அழுத்தமாக சொல்லப்படவில்லை. கோவர்தன் எதற்காக மொத்த குடும்பத்தின் பொறுப்பையும் தானே சுமக்கிறார்? கோவர்தனின் அண்ணன் குடி நோயாளி ஆனதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது, இதெல்லாம் ஒரு காரணமாப்பா என நாம் யோசித்துக் கொண்டே இருக்கையில், அதற்கு நான்தான் காரணம் என கில்ட் ட்ரிப் செல்கிறார் நாயகன். தம்புடு ஏமிரா இதி...? இந்து கதாப்பாத்திரம் தலைகீழாக தான் குதிப்பேன் என கோவர்தன் வீட்டுக்கு வருவது ஏன்? அவர் மேல் ஏன் அவ்வளவு அழுத்தமான காதல்? என்பதும் தெளிவாக இல்லை. மிடில்கிளாஸை வைத்து ஆய்வுக் கட்டுரை; அதைத் தொடர்ந்து நடக்கும் விஷயங்கள் என எல்லாமே ' என்னப்பா சுத்தமா ஒட்டல ' ரேஞ்சில் எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில், " அவ எல்லாம் எனக்கு பண்ணினதுக்கு 'நொண்டி' ' முடம்' மாதிரி யாரைவாது தான் கல்யாணம் பண்ணுவா " என சாபம் விடுகிறார் கோவர்தன். அதை வைத்து அடுத்தடுத்து சில காட்சிகள் நகர்கிறது. அதையொட்டித்தான் க்ளைமாக்ஸ் காட்சியும் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் கதைக்குழுவில் இருந்த ஒருவருக்குக்கூடவா இதெல்லாம் அபத்த விஷம் என புரிபடவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட ஒருவருக்கும் இது தவறு என தோன்றவில்லை. மிகவும் கீழான செயல் பரசுராம். அதே போல், மிடில் கிளாஸை கவர்வதாக நினைத்து சில பஞ்ச் வசனங்களை தூவியிருக்கிறார். கடுப்பு வந்ததுதான் மிச்சம்.
”என்னதான் நீ பொண்ணா இருந்தாலும், வீட்டுக்குள்ளயே இருக்காம வேலைக்கெல்லாம் வந்திருக்க...” என ஆரோக்கியமாக பேசுவது போல் விஷத்தை விதைப்பது ஒருபுறம் என்றால், அமெரிக்காவில் சென்று மாட்டுத் தொழுவம், துளசி மாடம் வைத்து வீடு கட்டும் புராஜெக்ட் செய்வதெல்லாம் ஏலியன் லெவல். ஃப்ளைட்டில் அறிமுகமாகும் ஒரு கதாப்பாத்திரம், பின்பு அதே கதாப்பாத்திரம் ஒரு பார்ட்டியில் வந்து நாயகனை சந்திப்பது, ஹீரோவுக்கு உதவும் ஒரு கதாப்பாத்திரம் திடுதிப்பென படத்திற்குள்ளே வந்து பணத்தை வாரி இறைப்பது, திடீர் வில்லனை கொண்டு வந்து, அதன் விளைவாக க்ளைமாக்ஸில் ஒரு ஃபைட் வைப்பது என திரைக்கதை கண்டபடி செல்கிறது. வசனங்களை எல்லாம் லெஃப்ட்டில் தான் டீல் செய்திருக்கிறார் பரசுராம். “உன்னை கிஸ் பண்ணது theseus எழுத இல்ல, theseus எழுதனதால தான் உன்ன கிஸ் பண்ணேன்” என்ற வசனம் எல்லாம், சிம்பு தத்துவார்த்தமாக சொன்ன, ”எனக்கு மேத்ஸ் வராது, ஏன்னா எனக்கு மேத்ஸ் வந்துது” லெவல்.
மொத்தத்தில் இது மிக மெத்தனமாக எழுதப்பட்டு, எடுக்கப்பட்டிருக்கும் படம். ஒரு குடும்ப செண்டிமெண்ட், காதல் போதும் என்றால் தாராளமாக பார்க்கலாம். மற்றபடி விஜய் தேவரகொண்டாவின் World Famous Lover, Liger, Kushi பட வரிசையில் புது வரவு The Family Star.