தங்கலான் எக்ஸ் தளம்
திரை விமர்சனம்

THANGALAAN Review | தங்கமா... தங்கமுலாமா? எப்படியிருக்கிறான் தங்கலான்..?

karthi Kg

18ம் நூற்றாண்டில் தங்கலானின் மக்கள் விவசாயக்கூலிகளாக இருக்கிறார்கள். தங்கலானுக்கு சிறிதளவு நிலம் இருந்தாலும், அதுவும் சூழ்ச்சியால் அவரிடம் இருந்து பிடுங்கப்படுகிறது. இயற்கைக்கு எதிராக பாட்டன்கள் செய்த செயலும் தங்கலானின் இரவுகளை நீண்டதாக்குகினறன. வாழ்வே நிர்கதியான சூழலில் பிரிட்டிஷ் துரை தங்கலானை தங்க வேட்டைக்கு அழைக்கிறார். கிராமத்தை சுரண்டித் திண்ணும் மிராசுதாரிடம் இருந்து தன் மக்களை மீட்க ஆங்கிலேயர் சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார் தங்கலான். தங்கலானுக்கு அவரின் மக்களுக்கும் தாங்கள் எதிர்பார்த்த விடியல் கிடைத்ததா என்பதே தங்கலான் சொல்லவரும் மீதிக்கதை.

தங்கலான்

தமிழ் சினிமாவின் 'தங்கலான்' விக்ரம்!

வீட்டிற்குள் உறங்கிக்கொண்டிருக்கும் ஆரம்ப காட்சியிலிருந்து தங்க முலாம் பூசியபடி தங்கத்தை சுமந்துநிற்கும் இறுதிக்காட்சி வரை தங்கலானை தன் கைகளில் சுமந்து இருக்கிறார் தமிழ் சினிமாவின் 'தங்கலான்'.

உதட்டை மறைக்கும் முரட்டு மீசை, சவரம் செய்யப்பட்ட தலை, உடல் முழுக்க ஆறா வடுக்கள் என தங்கலானாகவே மாறியிருக்கிறார் விக்ரம். சிறிதுகாலம் ஆதித்த கரிகாலனாய் வந்தவர் தற்போது தங்கலான் வேடம் பூண்டிருக்கிறார் அவ்வளவுதான்.

ஆங்கிலேயத் துரை பேசிக்கொண்டிருக்கும் காட்சியில் விக்ரம் அவுட் ஆஃப் போகஸில்தான் இருப்பார். ஆனாலும் ஒய்யாரமாக நின்றுகொண்டு நடித்துக்கொண்டிருப்பார்.

அதுதான் விக்ரம்.!

கவனம் ஈர்த்த கதாபாத்திரங்கள்!

தங்கலானின் மனைவி கங்கம்மாவாக பார்வதி. சாம்பலை பற்களில் பூசிக்கொண்டும், இடுப்பில் பிள்ளையை வைத்துக்கொண்டும் தங்கலானுக்காக காத்துக்கொண்டிருக்கும் கதாபாத்திரம். அதே சமயம், பல இடங்களில் தங்கலானையே சாப்பிட்டு ஏப்பம் விடும் கதாபாத்திரம். அதை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஆரத்தியாக மாளவிகா மோகனன். நடிப்பு, சண்டை என இந்தப் படத்தில் மாளவிகாவுக்கு அத்தனை வேலைகள். அத்தனையையும் திறம்பட அநாயசமாக செய்து முடித்திருக்கிறார். சிறிய அளவிலான கதாபாத்திரம் என்றாலும் நாராயணதாசனாக வரும் பசுபதி ரசிக்க வைக்கிறார். கரடு முரடான கதையில் நம்மை இளைப்பார வைப்பது பசுபதி வரும் காட்சிகள்தான்.

படத்தின் பலம்:

படத்தின் பெரும்பலம் அதன் டெக்னிக்கல் குழு. பூர்வகுடி மக்களின் பல இசைக்கருவிகளை ஒன்றிணைத்து பின்னணி இசையை உருவாக்கியிருக்கிறார் ஜிவி பிரகாஷ். அட்டகாசம். ஸ்டன்னர் சாமின் சண்டைக்காட்சிகள் சினிமா என்பதைக் கடந்து குருதி தெறிக்கும் நிஜ சண்டையின் வீரியத்தை நமக்குக் கடத்துகிறது. ஒப்பனை, கலை, கேமரா என டெக்னிக்கலாக படம் புதியதொரு மைல்கல்.

படத்தின் பலவீனம்:

படத்தின் வீழ்ச்சி அதன் ஆன்மாவான கதையும் திரைக்கதையும்தான்.

பீரியட் டிராமா, ஃபேண்டசி, மேஜிக்கல் ரியலிசம், ஹாலூசினேசன், மக்கள் அரசியல் என பலவற்றை பேச முயன்றிருக்கிறார்கள் ரஞ்சித் & டீம். ஆனால், எதிலும் ஆழமான புரிதல் இல்லாமல் மேம்போக்காக எடுத்திருப்பது நம் பொறுமையை சோதிக்கிறது.

ஃபேன்டசி படங்களில் அரசியல் பேசக்கூடாதா என்ன? அதெல்லாம் தாராளமாக பேசலாம். ஆனால், அவை திரைக்கதையில் ஏதாவது ஒரு இடத்திலாவது ஒன்றிணைய வேண்டும். குழம்பில் போட்ட காய் வேகாமல் இருந்தால் பரவாயில்லை. மசாலாவில் இருக்கும் பொடியெல்லாம் தனித்தனியாக இருந்தால் என்ன செய்வது? அப்படியிருக்கிறது தங்கலானின் திரைக்கதை. தங்கலான் தன் ஊரில் இருந்து கிளம்பும்வரை ஆமை வேகத்தில் நகரும் கதை, அதன் பின்னர் சற்று சுவாரஸ்யமாகிறது

சொதப்பிய இரண்டாம் பாதி!

ஆனால், இரண்டாம் பாதியில் அதுவும் இல்லை. சில காட்சிகளை அப்படியே கடந்துபோகிறார்கள். ‘ஆக மொத்தத்தில் என்னதான்ப்பா சொல்ல வர்றா?’ என நாமே கேட்கவேண்டியதிருக்கிறது. சிங்க் சவுண்ட், லைவ் சவுண்ட் எல்லாம் யார் கொடுத்த ஐடியா என தெரியவில்லை. வசனம் புரியவில்லை என்பது தனிப்பிரச்சினை. ஆனால், அதைவிட பெரும்கொடுமை சில வசனங்கள் கேட்கவே இல்லை.

ஒரு இழப்பு எவ்வளவு பெரிய வலியை பார்வையாளருக்குக் கடத்த வேண்டும். ஆனால், இதில் 'போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' மனநிலையில் கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது.

ரஞ்சித் படங்களில் வசனங்கள் எப்போதும் பேரிடியாக இருக்கும். இதில் அதுவும் மிஸ்ஸிங்.

ஒன்றிரண்டு வசனங்களைத் தவிர சொல்லிக்கொள்ளும்படி எதுவுமே இல்லை. இது ஓடிடி காலம். அதையும் தாண்டி ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவதே காட்சி அனுபவத்திற்காகத்தான். ஆனால், இந்த அளவு சுமாரான VFXம் ஒழுங்கில்லாத திரைக்கதையும் , எந்தவித எமோசனலும் இல்லாத கதையும் அந்த அனுபவத்தையே கேள்விக்குறியாக்கிவிடுகிறது.

தங்கலான் ~ வெறும் தங்கமுலாம் பூசப்பட்ட செங்கல்.