ஏழு பேர் கொண்ட கல்லூரி நண்பர்கள் குழு ஒன்று, பார்ட்டிக்காக ஒரு வீட்டிற்கு செல்கிறார்கள். பத்து மணிக்கு மேல் இருந்த சரக்கு மொத்தமும் காலியாகிவிட, பேஸ்மெண்டில் எதுவும் பாட்டில் இருக்கிறதா என அலசுகிறார்கள். ஆனால் கிடைப்பது மிக வினோதமான டேரோட் கார்டுகள் (ஆருடம் சொல்லும் அட்டைகள்) அடங்கிய பெட்டி மட்டுமே. விளைடாட்டாக ஏழு பேரும் தங்களின் ஜோசியத்தை அந்த கார்டு மூலமாக தெரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஆனால் ஜோசியத்தில் சொல்லப்பட்ட விஷயங்கள் ஒவ்வொருவருக்கும் பலிக்கத் துவங்குகிறது. முதலில் ஏணி விழுவது, லாட்டரியில் காசு கிடைப்பது என சின்ன சின்ன விஷயங்கள் பலித்தாலும், அந்த சபிக்கப்பட்ட டேரோட் கார்டுகள் மூலம் ஜோசியம் பார்த்தால் மரணம் நிச்சயம் எனத் தெரியவருகிறது. இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? இல்லையா? என்பதே கதை.
1992 ஆம் ஆண்டு நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் Spenser Cohen, Anna Halberg. இது முழுக்கவே ஹாரர் படமாக இருந்தாலும் அதற்கு இடையிடையே Jacob Batalon நடித்த கதாப்பாத்திரத்தின் மூலம் காமெடி கொண்டு வந்திருந்தது ரசிக்க வைத்தது. ஹாரர் வகைமைப் படங்களில் ஒரு ஆர்வத்தை கொடுப்பதே எந்த விஷயத்தை வைத்து கதை எழுதப்படுகிறது என்பதே, அந்த வகையில் டேரோட் கார்டுகள் என்ற ஐடியா சற்று புதிதாக இருந்தது. முதன்மைப் பாத்திரங்களான Harriet Slater, Adain Bradley, Avantika, Wolfgang Novogratz, Humberly González, Larsen Thompson மற்றும் Jacob Batalon ஆகியோர் தரமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். Joseph Bishara இசை, Elie Smolkin ஓளிப்பதிவு, Tom Elkins படத்தொகுப்பு என தொழில்நுட்ப ரீதியிலும் எந்தக் குறையும் இல்லை.
ஆனால் பல நூறு பேய்ப்படங்களைப் பார்த்து பழகிய பார்வையாளர்கள் எப்போதும் விரும்புவது புதுமையைத்தான். அது இப்படத்தில் இல்லை என்பதுதான் பெரிய குறையே. டேரோட் கார்டுகள் மூலம் மரணம் என்பது துவக்கத்தில் ஒரு ஆர்வத்தை தூண்டினாலும், அதற்கடுத்து வரும் காட்சிகள் எல்லாம் எல்லா பேய் படங்களிலும் வரும் அதே டெய்லர், அதே வாடகை. ஒரு அமானுஷ்ய பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் ஒரு குழு/குடும்பம். முதலில் அதை சிலர் நம்பாமல் மறுப்பது, பின்பு பயந்து உயிரைக் காப்பாற்ற ஓடுவது, இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா என ஃப்ளாஷ்பேக் என மிக வழக்கமான திரைக்கதை. இந்த பேர்ட்டனை உடைக்க முடியாமல் திணறுவது இப்படத்திலும் தீர்ந்தபாடில்லை. காட்சிகளிலும் எந்த திகிலையும் கொண்டு வர முடியாமல், கதவு சாத்துவது, இருளில் உருவம் தெரிவது, உடலை வளைத்து ஜிம்னாஸ்டிக் செய்யும் உருவம் என ஏற்கெனவே போரடிக்கும் படம் இன்னும் மோசமாக நகர்கிறது.
இன்னும் ஒரு படி மேலே சென்று நம்ம ஊர் ஜெயிலரில் கண்டெய்னர் கதவு மூடி திறக்கும் போது ரஜினி தெரியும் மாஸ் காட்சியை போன்றே இதில் ஒரு சீன் வருகிறது. கண்டெய்னர் கதவுக்கு பதில், இங்கே லிஃப்ட் கதவு. அலப்பர கிளப்புறோம் பாட்டு மட்டும் மிஸ்ஸிங். க்ளைமாக்ஸில் பேயை கொல்ல ஹீரோயின் செய்யும் ஐடியா எல்லாம், பேய் ஒட்றது ரொம்ப ஈஸியா இருக்கறதே... வெயிட்டே இல்லையே ரகம். இப்போது உள்ள சூழலில் எல்லோரும் ரசிக்கும்படியன ஹாரர் படம் எடுப்பதுதான் மிகப்பெரிய சவாலே. ஒவ்வொரு ஹாரர் படம் வரும் போதும், அது பார்வையாளர்களை ஏமாற்றவே செய்கிறது. அப்படி ஹாலிவுட்டில் இருந்து வந்திருக்கும் இன்னொரு ஹாரர் படமே இது.
மொத்தத்தில் அரதப்பழைய கதையை, சுவாரஸ்யமே இல்லாமல் சொல்லியிருக்கும் படமே டேரோட். பேய் என்று சொன்னாலே பயப்படுவீர்கள் என்றால் உங்களுக்கு தான் இந்தப் படம்.