Siddharth Takkar
திரை விமர்சனம்

Takkar Movie review |பேரு மட்டும் டக்கரா இருந்தா போதுமா..?

வில்லன்களுடனான பிரச்சனை முடிந்த பிறகு அரைமணி நேரம் படம் ஓடுகிறது. அதில் ஒரு சோகப் பாட்டும் அடக்கம்.

Johnson

பெரிய பணக்காரனாக நினைக்கும் ஒரு ஆள் - பணம்தான் வாழ்க்கையில் பிரச்சனை என நினைக்கும் பெண் இருவரும் சந்தித்தால்?

குன்ஸ் aka குணசேகர் (சித்தார்த்) ஒரு டாக்ஸி ட்ரைவர், ஏழ்மையால் பல பிரச்சனைகளில் இருக்கும் அவருக்கு எப்படியாவது நிறைய பணம் சம்பாதித்து பெரிய பணக்காரனாக ஆசை. லக்கி aka மஹாலக்‌ஷ்மி (திவ்யன்ஷா கௌஷிக்) பெரிய பணக்கார வீட்டுப் பெண். வாழ்க்கையில் எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் பணம் தான் என நம்புகிறார். அவருக்கு தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் ஏற்பாடாகியிருக்கிறது. ஆனால் அதில் அவருக்கு விருப்பமில்லை. நகரத்தில் பல பெண்களைக் கடத்தி வெளிநாட்டுக்கு விற்கும் கேங்க்ஸ்டர் ராஸ் (அபிமன்யூ சிங்). ஒரு சந்தர்பத்தில் இந்த மூவரின் பாதையும் ஒன்றுக்கொன்று சந்திக்கும் போது என்ன ஆகிறது? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் படத்தில் இரண்டு விஷயங்களை சொல்ல முயற்சிப்பதாகத் தோன்றுகிறது. ஒன்று பணத்தால் மகிழ்ச்சி கிடைக்காது, அன்புதான் மகிழ்ச்சிக்கான வழி. இன்னொன்று ஆண் மையச் சமூகம் பெண்களை எப்படி நடத்துகிறது என்பது. ஆனால் மிக குளறுபடியான கதையும், நேர்த்தியாக இல்லாத ஆக்கமும் அதைத் தெளிவாகச் சொல்ல உதவவில்லை. நடிகர்களின் நடிப்பு எனப் பார்த்தால் சித்தார்த், ஏழ்மையான குடும்பத்துப் பையனாக நடிக்க முயல்கிறார், ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்க முயல்கிறார். ஆனால் அவரது அழுத்தமே இல்லாத டெம்ப்ளேட்டான நடிப்பு அதைத் தடுக்கிறது. திவ்யன்ஷா கௌஷிக் எல்லா காட்சிகளிலும் அழகாக தோன்றுகிறார், படத்தை கவர்ச்சிகரமாக மாற்றுகிறார். ஆனால் அவரது நடிப்பும், தமிழுக்கேற்ற லிப் சிங்கும் தட்டுத் தடுமாறுகிறது. யோகிபாபு படத்தில் பல காட்சிகளில் வருகிறார், அவரது ஹூமரும், ஒன்லைனர் காமெடிகளும் வழக்கம் போல் வேலைக்காகவில்லை. ஆனால் இரண்டே காட்சிகள் வரும் முனீஷ்காந்த்தின் ஹூமர் பார்வையாளர்களை சிரிக்க வைக்கிறது. அது தவிர்த்து படத்தில் வரும் கார் சேசிங் காட்சி நன்றாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கூடவே நிவாஸ் கே பிரசன்னா இசையில் மரகத மாலை நேரம் மற்றும் நிரா பாடல்கள் இரண்டும் சூப்பர்.

Siddharth | Divyansha Kaushik

இந்தப் படத்தின் பெரிய பிரச்சனையே சரியாக எழுதப்படாததுதான். ஹீரோ- ஹீரோயின் இடையேயான காதல் பற்றி நமக்கு எந்த அக்கறையும் வரவில்லை, ஹீரோ கடைசியில் ஜெயிக்க வேண்டும் என்பதிலும் அக்கறை வரவில்லை, விக்னேஷ்காந்த் நடிப்பில் காமெடி காட்சியோ சீரியஸ் காட்சியோ எதுவானாலும் மிக செயற்கையாக இருக்கிறது. வில்லன் கதாப்பாத்திரம் ராஸ் மீது துளியும் அக்கறை வரவில்லை. யோகி பாபு கூட சுலபமாக அவரை கேலி செய்கிறார். அதனாலேயே அவர் ஒரு டெரர் வில்லனா? காமெடி பீஸா? என்பது புரியவில்லை. படத்திற்கு டக்கர் என்ற தலைப்பு ஏன் என்று கூட புரியவில்லை.

இந்தப் படம் மோசமாக எழுதப்பட்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு வசனத்தையும், ஒரு காட்சியையும் உதாரணமாக சொல்லலாம்.


ஒரு காட்சியில் தன்னுடைய எதிரிகளிடம் ஹீரோ சொல்லும் மாஸ் வசனம் “ நூடுல்ஸ் சாப்பிடற உனக்கே இவ்வளோ இருக்குன்னா, பரோட்டா சாப்பிடற எனக்கு எவ்வளோ இருக்கும்”

Siddharth

வில்லன்களுடனான பிரச்சனை முடிந்த பிறகு அரைமணி நேரம் படம் ஓடுகிறது. அதில் ஒரு சோகப் பாட்டும் அடக்கம். காதலை நிராகரிக்கும் படியான ஒரு காட்சியில் ஹீரோ - ஹீரோயின் பேசிக்கொள்ளும் ஒரு காட்சி சுத்தமாக லாஜிக்கே இல்லாமல் இருக்கும். ”அப்போ நீ என் ஃப்ரெண்ட பத்தி கவலைப்பட மாட்டியா?” என ஹீரோ கேட்க, ”அப்போ நீ என்னப் பத்தி கவலைப்பட மாட்டியா?” என ஹீரோயின் கேட்க, `அடங்கப்பா டேய்’ ரகம்.

மொத்தத்தில் மிக சுமாராக எழுதி, அதைவிட சுமாராக எடுக்கப்பட்டிருக்கிறது படம். இதைப் பற்றி கவலை இல்லை எப்பேர்பட்ட படமும் என்னை எண்டர்டெய்ன் செய்யும் என்றால் தாராளமாகப் பார்க்கலாம். மற்றவர்கள் கொஞ்சம் யோசிப்பது நலம்.