கலையரசனுக்கு (கவின்) சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது தீராத காதல். அந்த ஆசைக்கு பக்க பலமாக நிற்கிறார் அவன் தந்தை பாண்டியன் (லால்) . விருப்பமே இல்லாமல் பொறியியல் படிப்பு, அங்கு சந்திக்கும் ஜூனியர் மீரா (ப்ரீத்தி) மீது காதல், நண்பன் குலாபியுடன் (தீப்ஸ்) செய்யும் அலப்பறைகள் என வாழ்க்கை செல்கிறது. நடிக்க வாய்ப்புத் தேடி அலைவது ஒருபுறம், இன்னும் நடிப்பை மெருகேற்ற பயிற்சி வகுப்பு மறுபுறம் என பரபரக்கிறார் கலை. எல்லாம் கூடி வரும் ஒரு தருணத்தில் எதிர்பாராத விதமாய் நடக்கும் ஒரு சம்பவம் எல்லாவற்றையும் தலைகீழாக்குகிறது. வாழ்க்கையை மீண்டும் முதலில் இருந்து தொடங்குவதைவிட கோரமான விஷயம், எங்கிருந்து தொடங்குவது என்றே தெரியாமல் நிற்பது தான். அப்படியான தருணத்தில் சிக்கிக்கொள்கிறார் கலை. திருமணம், நிறுவனத்தில் வேலை, இரண்டு பெட்ரூம் வீடு என ஒரு வழக்கமான சிலந்தி வலையில் மாட்டிக் கொள்கிறார் கலை. இதிலிருந்து அவரால் மீள முடிந்ததா? நினைத்தது போல் சினிமாவில் சாதிக்க முடிந்ததா என்பதே படத்தின் கதை.
Underdog to Achiever கதையில் சுவாரஸ்யமே மையக் கதையை தாண்டி அதில் நடக்கும் நிகழ்வுகளே. அந்த நிகழ்வுகளை வைத்தே திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் இளன். படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு அழுத்தமான காட்சியமைப்பை கொடுத்து துவங்குகிறார். பாரதியாக நடிக்க மீசை தேவை இல்லை, பார்வையாளர்களை பிரம்மிக்க வைக்கும் நடிப்பே தேவை என அந்தக் காட்சி தரும் சிலிர்ப்பு அட்டகாசம். அதைத் தொடர்ந்து வரும் காட்சிகளிலும் நம்மை ஈர்க்கும்படி கதை நகர்கிறது. எழுத்தாக படத்தில் குறைகள் இருந்தாலும், படத்தின் ஆதார புள்ளிகளை இயல்பாகக் கொண்டுவந்திருந்த விதம் சிறப்பு. உதாரணமாக நடிப்பு கற்றுத்தரும் ஆசிரியர், “நானே உன்ன ரிஜெக்ட் பண்ணாலும், நீ உன்ன ரிஜெக்ட் பண்ணல” என்பார். ஆனால் அதுவே பின்பாதியில் தலைகீழாகும். ஒரு கட்டத்தில் கலை தன்னையே நிராகரித்துவிட்டு, தன்னை தன்னிடமே நிரூபிக்கப் போராடுகிறார் என்ற அமைப்பு ரசிக்க வைத்தது. மொமண்ட்ஸாக சில இடங்கள் வெகு சிறப்பாக இருந்தது. துவக்கக் காட்சி, இழவு வீட்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கலை தன் குடும்பத்திடம் பகிர்ந்து கொள்வது, சர்ப்ரைஸாக வரும் ஒரு பாடல், மொட்டை மாடியில் ஒரு காட்சியை தன் தந்தையிடம் கலை நடித்துக் காட்டும் இடம் என ரசிக்கத்தக்க காட்சிகள் இடம்பிடித்தன.
இந்த மொத்தப்படமும் ஒரு நடிகராக கவினின் திறமையைக் காட்டும் ஒரு ஷோ ரீல் எனச் சொல்லும் அளவுக்கு உழைத்திருக்கிறார். துள்ளலாக திரியும் பள்ளி மாணவன் துவங்கி, தன்னையே தொலைத்த ஒருவனாக விரக்தியில் கத்துவது வரை பலப்பல உணர்வுகளை கொட்டித் தீர்த்திருக்கிறார். ஃபோன் பூத்தில் “ப்பா என்ட்ட காசில்லப்பா” என்பது, மும்பையில் வறுமையுடன் போராடுவது, காதலியுடன் நடக்கும் வாக்குவாதம், க்ளைமாக்ஸ் என எந்த காட்சியைத் தொட்டாலும் ஒரு குறை கூட சொல்ல முடியாத அபாரமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் கவின். நாயகிகளாக வரும் ப்ரீத்தி, அதிதி போஹன்கர் இருவரும் சிறப்பான பங்களிப்பு. லாலுக்கு ஒரு கேக் வாக் கதாப்பாத்திரம், அதன் எமோஷனை அப்படியே கடத்தியிருக்கிறார். இவர்களை எல்லாம் ஓரம் கட்டுவது அம்மா பாத்திரத்தில் வரும் கீதா கைலாசம். மகனிடம் எரிந்து விழுவது, நீ எங்கள நல்லா பாத்துக்கணும்னு சொல்லல, நீ எந்த கஷ்டமும் இல்லாம வாழணும் என சொல்வது. மகனுக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பைக் கொண்டாடி, வெகுளியாக கேள்வி கேட்பது என அசத்தல்.
எழில் அரசுவின் ஒளிப்பதிவு இந்தக் கதைக்கு அத்தனை அழகாக வண்ணம் சேர்த்திருக்கிறது. கல்லூரி காட்சிகள், மும்பை காட்சிகள், பாடல்கள் என ஒவ்வொன்றும் வால் பேப்பர் மெட்டீரியல். இந்தப் படத்தை தனி ஆளாக உயிரூட்ட அசுரத்தனமாக உழைத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன். படத்தின் பாடல்கள், பின்னணி இசை என அனைத்திலும் அத்தனை தரம். கடந்த சில ஆண்டுகளில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வந்த ஆல்பங்களில் தி பெஸ்ட் ஆல்பம் என ஸ்டாரை சொல்லலாம். கூடவே மாதேவன், விக்னேஷ் ஸ்ரீகாந்த், நிரஞ்சன் பாரதி, மதன் கார்க்கி, கபிலன் மற்றுன் இளன் என படத்தின் பாடலாசிரியர்களுக்கு தனி பாராட்டுகள். படத்துக்கு இத்தனை பொருத்தமான வரிகளுடன் கூடிய பாடல்கள் அவ்வளவு சுகம்.
முதல் பாதியில் மெல்ல மெல்ல எழுப்பிய கோட்டையை, இரண்டாம் பாதி புல்டோசர் விட்டு இடிப்பதுதான் பெரிய சோகம். முதலில் கலைக்கு சினிமாவின் மேல் இருக்கும் அபரிமிதமான காதல் ஏன் என்பது நமக்கு எமோஷனலாக சொல்லப்படவில்லை. சந்தைக்கு போனும் ஆத்தா வையும் என்பதைப் போல, நான் நடிகர் ஆகப்போறேன், நடிகர் ஆகப்போறேன்... பாத்துக்கோ பாத்துக்கோ... போனா வராது பொழு போனா கிடைக்காது எனப் பினாத்துகிறார். எதுவுமே வராது அப்ப சினிமாவாது வரட்டுமே ரேஞ்சில் தான் கலைக்கு இருக்கும் கலை மீதான தாகத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதனாலேயே இரண்டாம் பாதியில் அவரின் பல நடவடிக்கைகள் நமக்கு அயற்சியை உண்டாக்குகிறது. மேலும் சுரபி கதாப்பாத்திரத்தை படத்துக்குள் இணைத்த விதம் சுத்த போங்கு லெவல். இவ்வளவு செயற்கையாக ஒரு கதாப்பாத்திரத்தை கதைக்குள் இணைப்பதெல்லாம் ரொம்ம்ம்ம்ப ஓவர். 'என்ன ப்ரோ முதல் ஹீரோயினுக்கு எதுனா கால் ஷீட் பிரச்னையா' என கேட்கும் அளவுக்கு இருக்கிறது சுரபி கதாபாத்திரத்தை கதைக்குள் இணைத்த விதம். மனரீதியாக கலையின் சோர்வு புரிகிறது, ஆனால் அதன் பொருட்டு நமக்கு எந்த எமோஷனும் எழவில்லை. அதனாலேயே எந்த ஒரு கனெக்ட்டும் உண்டாகவில்லை. அதே போல், படம் எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது என்பதிலும் அத்தனை குழப்பங்கள்.
நல்ல கதைக்களம், தேர்ந்த நடிப்பு, அருமையான இசை, ஒளிப்பதிவு என இத்தனை இருந்தும் அவற்றை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத எழுத்து படத்தை கீழே தள்ளுகிறது. கண்டிப்பாக இது போரடிக்கும் படமல்ல, ஆனால் இந்தப் படம் தொட்டிருக்க வேண்டிய உயரம் வேறு, அதற்கு முதல் அடியைக் கூட எடுத்து வைக்கவில்லை என்பதுதான் சோகம். பல லட்சம் கோடி கிலோ மீட்டர் தாண்டியிருந்தாலும் ஒரு நட்சத்திரத்தின் ஜுவாலை தான் , பூமி வரை அதன் புகழினை கொண்டு வந்து சேர்க்கிறது. ஆனால், இந்த ஸ்டாரோ பால்கனியில் இருப்பதையே தன் வாழ்நாள் சாதனையாக கருதிக்கொள்கிறது.