பிரேம் ஜி சத்திய சோதனை
திரை விமர்சனம்

சத்திய சோதனை விமர்சனம் | கதை செம்ம... ஆனால் நடிப்பு..?

ஒரு கிடாயின் கருணை மனு போல, இந்தப் படத்தையும் மிக இயல்பான ஒரு ட்ரீட்மெண்டில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார் இயக்குநர்.

Johnson

சாமானியன் ஒருவன் காவல் நிலையத்தில் படும் அல்லல்கள் தான் `சத்திய சோதனை’ படத்தின் ஒன்லைன்

பிரதீப் (பிரேம் ஜி) தனது வருங்கால மனைவியை சந்தித்து விட்டு வரும் வழியில் ஒருவர் இறந்து கிடப்பதைப் பார்க்கிறார். அந்த பிணத்தை இழுத்து நிழலில் வைத்துவிட்டு அவரின் மொபைல், வாட்ச், செயின் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் செல்கிறார் பிரதீப். கொலை நடந்தது ஒரு காவல் கோட்ட எல்லையில், ஆனால் பிரதீப் அந்த பிணத்தை இழுத்து சங்குப்பட்டி காவல் கோட்ட எல்லையில் வைத்ததில் இருந்து ஆரம்பிக்கிறது தலைவலி. கொலையாளிகள் காவல் நிலையம் வந்து ஆஜர் ஆனாலும், கொலை செய்யப்பட்டவர் அணிந்திருந்த 30 சவரன் தங்க நகைகள் மர்மமாகிறது. அந்த நகையை பிரதீப் தான் திருடியிருக்க வேண்டும் என விசாரணையை முடுக்குகிறார்கள். ஒரு பக்கம் நடக்க இருக்கும் திருமணம், இன்னொரு பக்கம் திருடாத நகையைத் திருப்பி தர சொல்லும் போலீஸார். இந்த பிரச்சனைகளை பிரதீப் எப்படி சமாளிக்கிறார்? அந்த நகைகளை களவாடியது யார்? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.

`ஒரு கிடாயின் கருணை’ மனு மூலம் கவனம் கவர்ந்த சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். முதல் படம் போலவே இதுவும் social satire தான். காவல்துறையிலும், நீதித்துறையிலும் உள்ள குறைபாடுகளைப் பற்றி பகடியாக படம் பேசுகிறது. சாமானியன் ஒருவனை அதிகாரம் என்னவெல்லாம் செய்யும் என்பதையும் பளீர் எனக் காட்டுகிறது. குபேரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சித்தன் மோகன், மகாதேவன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் செல்வமுருகன் இருவரும் தனிகவனம் பெறுகிறார்கள். ஒரு காவல் நிலையத்தில் நடக்கும் மெத்தன போக்கை மிக இயல்பாக இவர்களின் நடிப்பு மூலமாக பிரதிபலிக்கிறார்கள். படத்தில் பல இடங்களில் இவர்களது காமெடி சிரிக்க வைக்கிறது. குறிப்பாக தப்பிச்சென்ற கைதிகளைப் பிடிக்கப் போகும் இடமும், கைதி ஒருவரின் பெயரைக் கேட்கும் இடமும் தியேட்டரே சிரிப்பலையில் மூழ்குகிறது.

“கைய வெட்டுனவன் கால வெட்டுனவனெல்லாம் விட்ருங்க, லைசென்ஸ் இல்லாதவன், ஹெல்மட் போடாதவன், ஆர் சி புக் இல்லாதவன், இவங்கள்லாம் தான் உங்களுக்கு Monthly டார்கெட்” என நீதிபதியாக வரும் ஞானசம்பந்தம் பேசும் வசனங்கள் உட்பட பல வசனங்கள் நேரடியாகவே இன்றைய சமூக நிலையை குறிப்பிடும்படி எழுதப்பட்டிருந்தது. வசனகர்த்தாக்கள் குருநாதன் - சுரேஷ் சங்கையாவுக்கு வாழ்த்துகள். கிராமத்துக் கதை களத்தை ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு மிக எதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறது.

படத்தின் பிரச்சனையாகபட்டது, படம் சற்று சுவாரஸ்ய குறைவாக இருந்தது. கதாபாத்திரங்கள் யாருடனும் நம் கவனம் ஒட்டாமலே இருக்கிறது. சரி இந்தக் கதாபாத்திரத்திற்கு என்ன ஆனால் என்ன? என்ற எண்ணம் வந்துவிடுவதால் கதையில் இருந்து ஒரு விலகல் ஏற்படுகிறது. எப்போதோ வரும் ஒரு நல்ல வசனம், நல்ல காட்சிக்காக மந்தமாக நகரும் திரைக்கதையை பொறுத்துக் கொள்ள வேண்டியதாகிறது. கிராமத்திற்கு ஏற்ற வட்டார வழக்கை திடீரென பேசுகிறார்கள், திடீரென ஒரு சாதாரண படம் போல் மையமாக பேசுகிறார்கள். அதில் கொஞ்சம் தெளிவு இருந்திருக்கலாம். முதன்மை கதாபாத்திரங்கள் இன்னும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். பிரதீப் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரேம்ஜி நடிப்பு அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. அவரது ஜோடியாக வரும் சுயம் சித்தா, அக்காவாக வரும் ரேஷ்மா, மாமாவாக வரும் கர்ணா ராஜா எனப் பலரும் அதே ரகம் தான். காவல் நிலையத்திற்கு அருகில் இருக்கும் கிழவி கதாபத்திரத்தின் நடிப்பு அத்தனை இயல்பாக இல்லை, அந்தக் கதாபாத்திரம் பற்றிய தெளிவும் படத்தில் இல்லை. ஒரு கட்டத்தில் இந்தப் படம் கூற விரும்பும் கருத்து என்ன என்ற குழப்பம் வருகிறது.

பிரேம் ஜி

ஒரு மோசமான படமில்லை என்ற போதிலும், மிக சிறப்பான படம் என பாராட்டும்படியும் இல்லை. ஒரு கிடாயின் கருணை மனு போல, இந்தப் படத்தையும் மிக இயல்பான ஒரு ட்ரீட்மெண்டில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார் இயக்குநர். அது மட்டும் கைகூடி, இன்னும் சிறப்பாக திரைக்குக் கடத்தப்பட்டிருந்தால், முக்கியமான social satire படமாக கவனம் குவித்திருக்கும் இந்த `சத்திய சோதனை’.