பிரபாஸ் | சலார் Salaar
திரை விமர்சனம்

Salaar | ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு பக்கா ஆக்சன் படம் பாக்கணுமா..?

Johnson

கான்சாரின் அரியணைக்கான யுத்தமும் - அதில் தொலைந்து போன நட்பும் தான் `சலார்’.

உலக வரைபடத்திலிருந்தே தலைமறைவாக இருக்கும் நகரம் கான்சார். உலக அளவில் ஆயுத வியாபாரம், ஒட்டு மொத்த இந்தியாவின் அரசியலை தீர்மானிக்கும் அதிகாரம் எனப் பலவற்றைக் கொண்ட கான்சாரின் தலைவர் ராஜமன்னார் (ஜெகபதிபாபு). அவரின் மகன் வரதராஜ மன்னாரும் (ப்ரித்விராஜ்), அதே நகரத்தில் வசிக்கும் தேவரதாவும் (பிரபாஸ்) நண்பர்கள். வரதாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் உயிரைக் கூட துச்சமாக நினைத்து உதவுபவன் தேவா. தேவாவின் பிரச்சனையை தீர்க்க, தனது ராஜ்ஜியத்தை கூட விட்டுக்கொடுப்பவன் வரதா. ஆனால் சூழ்நிலை காரணமாக இருவரும் பிரிய நேர்கிறது. எனவே எந்த வம்புக்கும் போகக் கூடாது என்று அம்மாவுக்கு கொடுத்த வாக்கின்படி அமைதியாக வாழ்ந்து வருகிறார் தேவா. சில வருடங்களுக்குப் பிறகு ஆத்யா (ஸ்ருதிஹாசன்) என்ற பெண் இந்தியாவுக்கு வருகிறார். அவர் உயிருக்கு ஆபத்து, அவரைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஆள் தேவா தான். எனவே மீண்டும் அம்மாவின் ஆசியுடன் சண்டைக் களத்தில் குதிக்கிறார். ஆத்யாவை துரத்தும் ஆட்களுக்கும் கான்சாருக்கும், தேவாவுக்கும், வரதாவுக்கும் தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதில் பாதியை Salaar: Part 1 – Ceasefireல் கூறி, மீதி Salaar: Part 2 – Shouryaanga Parvamல் என சஸ்பென்ஸ் வைத்து முடிகிறது படம்.

பிரஷாந்த் நீல் இந்த முறையும் தனது வித்யாசமான ட்ரீட்மெண்டில் அசத்துகிறார். அமைதியாக வாழும் ஆட்டோ டிரைவர், ஒரு காலத்தில் பாட்ஷா பாயாக இருந்த மிகப் பழைய கதைதான். ஆனால் அதை சொல்லும் விதத்தில் நம் கவனத்தைக் கவர்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் ஒரு ஹைலைட் மொமண்ட், ஒரு மாஸ் எலிவேஷன் என ஆச்சர்யப்படுத்துகிறார். ஒரு காட்சிக்குள் அவர் உருவாக்கும் ட்ராமா, உதாரணமாக கேக் வெட்டும் ப்ளாஸ்டிக் கத்தி மகன் கையில் இருப்பதைப் பார்க்கும் அம்மா பதறும் காட்சியை சொல்லலாம். அப்படி ஒவ்வொரு காட்சியிலும் அவர் அமைத்திருக்கும் ட்ராமா சிறப்பு. கான்சார் பற்றி பிலால் (மைம் கோபி) சொல்லும் நரேஷனும் அசத்தல். கான்சாரும் அதன் மூன்று இனக்குழுவையும் பற்றி அவர் சொல்ல ஆரம்பிக்கிறார். அனைவருக்கும் அது ஒரு கற்பனை உலகம் என்பது தெரிந்திருந்தாலும், நம்மை நம்ப வைக்கும்படி அந்த உலகத்தை அமைத்திருக்கிறார்.

பிரபாஸ் சலார்

நடிகர்கள் பிரபாஸ் - ப்ரித்விராஜ் இருவரின் ஸ்க்ரீன் பிரசன்ஸும் மிகச்சிறப்பு. அடுத்ததாக கவனம் பெறுவது ராதா கதாப்பாத்திரத்தில் வரும் ஷ்ரேயா ரெட்டி. வில்லத்தனம் கலந்த கதாப்பாத்திரம் என்றால் தன் `திமிரு’ஐ காட்டிவிடுகிறார். ஈஸ்வரி ராவுக்கு கே.ஜி.எஃப் போலவே சின்ன ரோல் என்றாலும், நினைவில் நிற்கும்படியான ரோல். ஆனால் கெஸ்ட் ரோலில் வரும் ஸ்ருதிஹாசனுக்கு அப்படி அழுத்தமான காட்சி எதுவும் இந்த பாகத்தில் இல்லை.

படத்தின் சண்டைக்காட்சிகள் மிகத்தரமாக இருக்கிறது. ஒரு சண்டைக்கு முந்தைய செட்டப், பில்டப், அதன் பின்புதான் சண்டை என பிரஷாந்த் நீலின் யுத்தி ஆரம்பத்தில் நெளிய வைத்தாலும், போகப் போக ரசிக்க வைக்கிறது. ரவி பஸ்ரூர் பின்னணி இசை படத்தை மிக அழகாக தாங்கிப் பிடிக்கிறது. பாடலில் கூட அதே ட்ரீட்மெண்டைக் கொடுக்கிறார். அது பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் பாடுவதாகட்டும், பலியிடும் காட்சியின் போது பெண்கள் சுற்றி நின்று பாடுவதாகட்டும் மாஸ் கொஞ்சமும் குறையவில்லை. கான்சார் என்ற உலகத்தை நம் மனதில் பதிய வைப்பது புவன் கௌடாவின் ஒளிப்பதிவு மற்றும் வெங்கடாசலபதியின் கலை இயக்கம் இரண்டும் தான். மிக மெனக்கெட்டு ஒவ்வொரு காட்சியையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

பிரபாஸ் பிருத்விராஜ் சலார்

படத்தின் மைனஸ் எனப் பார்த்தால், பல காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீட்டப்பட்டிருப்பது. பிரஷாந்த் நீலின் முதல் படமான `உக்ரம்’ இதே போன்ற கதைக் களம் தான். ஆனால் அந்தக் கதை அதிக கிளைக் கதைகளை உள்ளடக்காத ஒரு எளிமையான கதை, எனவே எந்த நீட்டலும் இல்லாமல் சுருக்கமாக சொல்லியிருப்பார். ஆனால் சலாரில் பல இடங்கள் பொறுமையை சோதிக்கதான் செய்கிறது. மேலும் அதிகப்படியான ஸ்லோமோஷன்களும் அயர்ச்சியை உண்டாக்குகிறது.

மேலும் தேவா - வரதா இருவருக்கும் இடையிலான நட்பின் ஆழம் பற்றி இன்னும் சொல்லியிருக்கலாம். அவர்களின் நட்பைப் பற்றி சொல்ல தேவாவுக்கு ஒரு காட்சி, வரதாவுக்கு ஒரு காட்சி மட்டும் வைத்துவிட்டு நகர்ந்தது போதவில்லை. அதனாலேயே ஏன் தேவா, வரதாவுக்கு இவ்வளவு செய்கிறார்? அப்படி என்ன பாசம் என்ற எதுவும் நமக்குப் ஒட்டவில்லை. KGF போன்று சலாரும் இரு பாகக் கதை. KGF முதல் பாகம் பார்த்த போது, ராக்கி பாய் பற்றிய எல்லா விஷயங்களும் நமக்கு தெரிவிக்கப்படும். எனவே அவரின் எல்லா செயலுக்குப் பின்னால் இருக்கும் எமோஷன் நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் சலாரில் அது மிஸ்ஸிங்.

கூடவே இந்த இருபாகக் கதைகளில் உள்ள இன்னொரு சிக்கல், முழுதாக நம்மாள் பல விஷயங்களை கண்டடைய முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்கான காரணம் அடுத்த பாகத்தில் என தப்பித்துவிடுவார்கள் இயக்குநர்கள். அதே போன்று சலாரிலும் பல கனெக்‌ஷன்கள் தெளிவுபடுத்தப்படவில்லை. சலார் நல்ல பொழுதுபோக்கை தரும் ஆக்‌ஷன் படம் என்றாலும், ஒரு முழுமையான படமாக இல்லை. எனவே Salaar: Part 2 – Shouryaanga Parvam வரும் வரை காத்திருப்போம்.

மொத்தத்தில் சலார், நல்ல விஷுவல் அனுபவம் தரும், தரமான ஆக்‌ஷன் படம். மேலும் படத்தில் உள்ள ரத்தம் தெறிக்கும் வன்முறைக்காக ஏ சான்றிதழ் பெற்ற படம், எனவே குழந்தைகள் பார்க்க உகந்தது அல்ல.