சிவநைந்தணும், சேகரும் நண்பர்கள். பள்ளி செல்லும் நாட்களில் இவர்கள் மாணவர்கள். விடுமுறை நாள்களில் வாழைத்தார் சுமக்கும் கூலிகள். வரப்போறமாய் நடந்து, சேற்றில் கால் பதித்து, ஆற்றைக் கடந்து சுமக்கப்படும் வாழைத்தார்களை வெறுக்கிறான் சிவநைந்தண். எப்படியாவது வாழைத்தார் சுமப்பதில் இருந்து மட்டம் போட எல்லா வகையிலும் சிந்திக்கிறான்.
போராட்டம் போராட்டம் என சென்றதாலேயே நொடிந்து போன குடும்பம் சிவநைந்தணுடையது என்பதால் வாழைத்தார் சுமப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவனுக்கு சமீபத்திருக்கும் சொர்க்கவாசல் பள்ளியில் பாடம் எடுக்கும் பூங்கொடி ஆசிரியை. விவசாயக்கூலிகள் என்னும் உழைப்புச் சுரண்டல் தொழிற்சாலையில் சிக்கிக்கொள்ளும் சிவநைந்தண் இறுதியில் மிச்சம் இருப்பது என்ன என்பதே வாழை.
சிவநைந்தணாக பொன்வேல். சேகராக ராகுல். ரஜினி கமல் தொடங்கி பல்வேறு விஷயங்களை பால்யத்தோடு இணைத்து திரைக்கதையாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.
கொஞ்சம் மீறினாலும் செயற்கைத்தனம் எட்டிப் பார்த்துவிடும் கதாபாத்திரத்தில் அவ்வளவு இயல்பாய் நடித்திருக்கிறார்கள் பொன்வேலும், ராகுலும்.
படத்தின் இறுதிக் காட்சியாகட்டும்; ஒன்றைத் தொலைத்துவிட்டு தேடி அலைந்து நிர்கதியாகிநிற்கும் காட்சியாகட்டும்... பொன்வேல் மிரட்டியிருக்கிறார். நம் எல்லோருக்கும் பள்ளிக் காலத்தில் பிடித்தமான ஆசிரியை என ஒருவர் நிச்சயம் இருந்திருப்பார். அப்படியானதொரு ஆசிரியையாக கதையில் பொருந்திப் போகிறார் நிகிலா விமல்.
13 வயதில் மாணவர்களுக்குள் எட்டிப் பார்க்கும் சில விஷயங்களுடனே நிகிலா விமலை அணுகுகிறான் சிவநைந்தணம். அதை எவ்வளவு கண்ணியத்துடன் காட்சிப்படுத்தமுடியுமோ காட்சிப்படுத்தியிருக்கிறார் மாரி செல்வராஜ். துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் கலையரசனும், திவ்யா துரைசாமியும் கதைக்கு வலு சேர்க்கிறார்கள்.
'வெண்ணிலா கபடி குழு' தொடங்கி 'ரகு தாத்தா' வரை பல்வேறு படங்களில் அம்மா வேடம் ஏற்று நடித்திருக்கிறார் 'கர்ணன்' ஜானகி. இந்தப் படத்தில் சிவநைந்தணின் தாயாக வருகிறார். கனமான வேடம். மிகுந்த வலியுடன் எழுதப்பட்ட இறுதிக்காட்சியை 'கர்ணன் ஜானகி'யின் நடிப்பு மேலும் ரணமாக்கிவிடுகிறது.
திடமான நெஞ்சம் கொண்டவர்களையும் அசைத்துப் பார்த்துவிடக்கூடிய நடிப்புக்கு சொந்தக்காரி ஆகியிருக்கிறார் 'கர்ணன்' ஜானகி. வாழ்த்துக்கள்.
தன் பால்யத்திலிருந்து சுமந்த வலியை கதைக்கருவாக்கி அதில் சினிமா சேர்த்து திரைக்கதையாக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். எளிதாக சரிந்துவிடக்கூடிய மென்மையான வாழை மரத்துக்குப் பின்னால்கூட பலரின் சோகம் ததும்பிய கண்ணீர் கதை இருக்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். இறுதிக் காட்சிக்கு நம்மை ஆங்காங்கே தயார்படுத்தினாலும், அதை மறக்கடித்துவிடும் அளவுக்கு நகைச்சுவை, காதல் என எல்லாம் கலந்த ஒரு கலவையை திரைக்கதையாக்கியிருக்கிறார்.
'எங்க அக்கா மாதிரி' ; 'எங்க அப்பா மாதிரி' போன்ற யதார்த்தமான சொல்லாடல்களை இதைவிட சரியான தருணத்தில் ஒரு திரைப்படத்தில் பயன்படுத்த முடியுமா என தெரியவில்லை. அவ்வளவு கச்சிதமாக அந்த வார்த்தைகள் கதாபாத்திரத்தின் மனதின் ஆழத்திலிருந்து வந்து விழுகின்றன.
மாரியின் கடந்த கால நினைவுகளுகக்கு உயிர் கொடுத்திருக்கிறது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. கறுப்பு வெள்ளையில் தோன்றும் காட்சிகளாகட்டும், வாழை மர காட்சிகளாகட்டும் டாப் கிளாஸ். திரைக்கதை வடிவம்தான் என்றாலும், இன்டர்கட்டில் காட்டப்படும் சில காட்சிகளில் மிளிர்கிறது சூர்யாவின் படத்தொகுப்பு.
இறுதிக் காட்சியின் காலச் சிக்கல், ஆசிரியை தொடர்பான காட்சிகள் என புறந்தள்ளக்கூடிய பிரச்னைகள்தான்.
2024ன் டாப் டென்னில் வாழையுடன் வந்த கர்வத்தோடு அமர்கிறார் மாரி செல்வராஜ்.