வழிப்பறி கொள்ளைக்காரியென என முத்திரை குத்தப்படும் நெல் ஜேக்சன், எப்படி தன் அமானுஷ்ய சக்திகளால் லண்டனை இக்கட்டில் இருந்து காப்பாற்றுகிறார் என்பதே ஹாட்ஸ்டாரில் வெளியாகியிருக்கும் Renegade Nell தொடரின் ஒன்லைன்.
தந்தை நடத்தும் பாருக்கு சில ஆண்டுகளுக்குப் பின் வருகிறார் நெல் ஜேக்சன். அங்கு வந்து தடாலடி செய்யும் நபர்களை தனக்கிருக்கும் சூப்பர்பவர் மூலம் தட்டிக்கேட்கிறார் நெல் ஜேக்சன். அதனாலேயே அடுத்தடுத்து நிறைய பிரச்னைகளை சந்திக்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். தந்தையின் இழப்புக்கு நியாயம் கேட்டு செல்பவருக்கு அடுத்தடுத்து சிக்கல்கள். இதற்கிடையே லண்டனின் ராணியை தீர்த்துக்கட்டும் முடிவுக்கு வருகிறது ஜேக்கோபைட் படை. யார் இந்த ஜேக்கோபைட்; நெல் ஜேக்சனுக்கு இருக்கும் அமானுஷ்ய சக்தி என்ன ; செய்தித்தாள்கள் ஏன் நேர்மையாக இருக்க வேண்டும் போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இந்த Renegade Nell
தொடரின் பெரும் பலம் நெல் ஜேக்சனாக வரும் லூசியா ஹர்லாண்டு. செம்ம ஜாலியாக நடித்திருக்கிறார். ராசலாஸ் என்னும் அடிமையாக வரும் Ényì Okoronkwo சிறப்பாக நடித்திருக்கிறார். "நீங்கள் விளையாடும் ஒரு பொம்மையாகத்தான் என்னை உங்கள் தந்தை கருதினார்" என ராசலாஸ் சோஃபியாவிடம் சொல்லும் காட்சியும், தன்னுடைய நிஜப்பெயரை ராசலாஸ் அறியும் காட்சியும் செம்ம. polly கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் Ashna Rabheruவிற்கு சின்னதொரு கதாபாத்திரம் என்றாலும் சிறப்பு. நெல் ஜேக்சனை ஆண் என நினைத்து காதலித்து, அதன் பிறகு உண்மை தெரியவருகிறது. அதனால் என்ன,காதல் உண்மை தானே என பதிவு செய்த விதம் அழகு.
மக்கள் விரும்புவதை பற்றி எழுதத்தானே ஊடகம் என பேசும் நபர்களையும் நங்கென மண்டையில் கொட்டியிருக்கிறார் சாலி வைன்ரைட். பெண்களைப் பயன்படுத்தி, அவர்களை சாதிக்கத் தூண்டும் வகையில் முதன்மை கதாபாத்திரங்களை எழுதி வருபவர் சாலி வைன்ரைட். அவர்தான் இந்தத் தொடருக்கும் எழுத்தாளர். 17ம் நூற்றாண்டின் கதையாக இருந்தாலும், தற்போது நிகழும் பல விஷயங்களையும் இணைத்து நுண்பகடி செய்திருக்கிறார். ஒரு நாடு நன்றாக இருக்க மீடியாக்கள் உண்மையை விருப்பு வெறுப்பின்றி வெளியிடுவது எவ்வளவு அவசியம் என்பதையும் சில கதாபாத்திரங்கள் மூலம் விளக்குகிறார். சமபால் ஈர்ப்பாளர்களை மையப்படுத்திய கதாபாத்திரம், ஊடகம் சார்ந்த கதாபாத்திரங்கள், அடிமைப்படுத்த கதாபாத்திரம், வறுமை என பல விஷயங்களை ஒரு ஃபேன்டஸி கதைக்குள் அட்டகாசமாக நுழைத்திருக்கிறார். ஒவ்வொரு எபிசோடிலும் ஒரு சின்ன கதையை வைத்து, அதன்வழி ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். ஃபேன்டஸி கதைக்கான பக்காவான பின்னணி இசையை சேர்த்திருக்கிறார் நிக் ஃபோஸ்டர். Tom Pyeயின் காஸ்டியூம் டிசைன், Anna Pritchardன் ப்ரொடக்சன் டிசைன், Oli Russell & Catherine Goldschmidtன் ஒளிப்பதிவு என எல்லாமே பிளஸ்.
சிறுவர்களுக்கான கதைக்களம் என்பதால் பெரிய அளவிலான திருப்பங்கள் ஏதும் இல்லை. யூகிக்கக்கூடிய கதைக்களம் தான்.
குழந்தைகளுக்கான பெட் டைம் ஸ்டோரியாகவும், நல்லதொரு bynge வாட்ச்சாகவும் நிச்சயம் இந்த சீரிஸ் அமையும்.