வடக்கு தெற்கு இல்லை... அன்புதான் மானுடத்திற்கான திசை என்கிறது `ரயில்’.
முத்தையா (குங்குமராஜ்) தேனியில் வசிக்கும் எலெக்ட்ரீசியன். ஊரில் சின்னச் சின்ன வேலைகள் பார்த்து பிழைப்பை ஓட்டுகிறார். அவரின் குடிப்பழக்கத்தால் நிரந்தரமாக வருமானம் இல்லை, குடும்பத்தை சரிவர கவனித்துக் கொள்வதில்லை. எனவே ஊரில் அவரை யாரும் மதிப்பதில்லை, தொழில் செய்ய பணம் கேட்டால் சொந்த மாமனார் கூட பணம் தர மறுக்கிறார், மனைவி செல்லம்மாவும் (வைரமாலா) தொல்லைகளை சகித்துக்கொண்டு அவருடன் வாழ்கிறார். ஆனால் கணவன் பொறுப்பில்லாமல் திரிவதால், குழந்தை பெற்றுக் கொள்ள மறுக்கிறார் செல்லம்மா. அந்த ஊரில் முத்தையாவுக்கு ஒரே ஒரு ஆதரவு வரதன் (ரமேஷ் வைத்யா). அவருடன் ஊர் சுற்றுவது, குடிப்பது என வாழ்க்கையை கழிக்கும் முத்தையா, தன் பொறுப்பில்லாதனத்தை உணராமல், தன் வளர்ச்சியை தடுக்கிறார்கள் என கோபம். மேலும் வடமாநில தொழிலாளர்கள், உள்ளூரில் கிடைக்கும் வேலை வாய்ப்பை தட்டிப் பறிக்கிறார்கள். எனவேதான் தனக்கு வேலை கிடைக்கவில்லை என வடமாநில தொழிலாளர்கள் மீது கோபத்தோடு இருக்கிறார். எனவே தன் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனையே வடமாநில தொழிலாளர்கள் தான் என நம்புகிறார். இந்தக் கோபத்தை அவர் காட்டுவது, அவர் வீட்டின் எதிர் வீட்டில் குடியிருக்கும் சுனிலிடம் (பர்வேஸ் மெஹரூ) தான். திட்டுவது கோபப்படுவது என இருந்த கோபம் மெல்ல மெல்ல பெரிதாகி, கொலை செய்து விடலாம் என திட்டமிடும் அளவு செல்கிறது. அதன் பின் என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.
படத்தில் முதல் பாராட்டுக்குறிய விஷயம், இப்படம் பேசியிருக்கும் கருத்து. எங்கெங்கோ இருந்து, இங்கு வந்து வாழ்க்கை நடத்தும் மனிதர்கள் மீது தேவையில்லாத வெறுப்பு பரப்புவது தவறு, மேலும் அது மனிதத்தன்மையற்றது என்ற குரல் மிக முக்கியமானது. சாதி, மதம், இனம், மொழி போன்ற பிரிவினைவாதம் எவ்வளவு அயோக்கியத்தனமானதோ, அதே போல் ஒருவர் எங்கிருந்து வருகிறார் என்பதை வைத்து ஒதுக்குவதும் அத்தகையதே என்பதை பேசியிருப்பது இப்போதைய சூழலில் தேவையானதும் கூட. இப்படியான கருத்தை மாஸ் மீடியமான சினிமாவில் பதிவு செய்திருக்கும் `ரயில்’ குழுவுக்கு பாராட்டுகள்.
அடுத்து பாராட்டும்படியானது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு. முதல் காட்சியில் முத்தையா தரையில் படுத்திருப்பது துவங்கி, படத்தின் அத்தனை காட்சிகளிலும் தன்னுடைய ஒளிப்பதிவால் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார். இரண்டே பேர் மட்டும் இருக்கும் காட்சியானாலும் சரி, ஊரே கூடும் காட்சியானாலும் சரி அதை இயல்புத் தன்மையுடனும், அழகியலுடனும் காட்சிபடுத்தியிருக்கிறார் ஈஸ்வர். முதன்மைக் கதாப்பாத்திரங்கள் அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். தன்னை புரிந்து கொள்ளவே இல்லை எனப் புலம்புவது, சுனிலைப் பார்த்து பொறுமுவது என முத்தையாவாக குங்குமராஜ் கச்சிதம். கணவனை சகித்துக் கொள்ள முடியாமல் திணறும் செல்லம்மாவாக வைரமாலாவும் மனதில் நிற்கிறார். படத்திற்கு தேவையான உணர்வை தன் இசை மூலம் கொடுத்திருக்கிறார் ஜனனி. பின்னணி இசையும் பாடல்களும் சிறப்பு.
படத்தில் என்னவெல்லாம் சிறப்பாக இருந்திருக்கலாம் எனப் பார்த்தால், படத்தின் ரைட்டிங் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், படத்தின் இரண்டாம் பாதியில் தான் பல நிகழ்வுகள் நடக்கின்றன. படத்தின் முதல் பாதி கதாப்பாத்திர அறிமுகமாக மட்டுமே நின்றுவிடுகிறது. அதனாலேயே இரண்டாம் பாதி overstuffed எனத் தோன்றுகிறது. அதேநேரம் இரண்டாம் பாதியில் நடக்கும் சம்பவங்களால் படம் திடீரென ஒரு ஹாரர் காமெடி ரூட் எடுக்கிறது, தொலைந்து போன ஒரு பொருளை தேடும் இன்வஸ்டிகேஷன் ஆகிறது, ஒரு குடும்பத்தின் வருகைக்குப் பிறகு எமோஷனல் ட்ராமாவாக மாறுகிறது. கதையின் நகர்வில் ஒரு கோர்வை இல்லாமல் தடுமாறுகிறது. மேலும் கதாபாத்திரங்களும் இன்னும் ஆழமாக எழுதப்பட்டிருக்கலாம். முத்தையாவுக்கு என்னதான் பிரச்சனை என்பது மிக மேலோட்டமாக, அவர் குடிக்கிறார் அதனால் பொறுப்பில்லாமல் இருக்கிறார் என்ற அளவிலேயே சொல்லப்படுகிறது. எனவே ஓரளவுக்கு மேல் நம்மால் அந்தக் கதாப்பாத்திரத்தோடு ஒன்ற முடியவில்லை. மேலும் வரதன் கதாப்பாத்திரம், ஏன் முத்தையாவை கொம்பு சீவி விட்டுவதையே பிழைப்பாக வைத்திருக்கிறது. அதனால் அவருக்கு என்ன லாபம்? அது சீரியஸான பாத்திரமாகவும் இல்லாமல், காமெடியாகவும் இல்லாமல் குழப்பமாகவே மிஞ்சுகிறது.
படத்தின் பல விஷயங்கள் வசனம் மூலம் மட்டுமே கடத்தப்படுவது மிகுந்த அயர்ச்சியை ஏற்படுத்துகிறது. வசனம் மூலம் விஷயத்தைக் கடத்தக் கூடாது என்றில்லை. இந்தப் படத்திலேயே கூட வசனத்தின் மூலமாக வலுவாக நிற்கும் ஒரு காட்சி உண்டு. முத்தையா, வரதனின் நண்பன் துபாயிலிருந்து வந்ததற்காக, பார்ட்டி கொடுக்கும் காட்சி அது. அந்தக் காட்சியில் மிக அழுத்தமாக ஒரு விஷயத்தை பதிவு செய்திருப்பார்கள். அது மிக முக்கியமான காட்சியும் கூட. ஆனால், அவசியமற்ற இடங்களில் கூட வசனத்தின் மூலமாக மட்டும் எல்லா உணர்வுகளையும் கடத்த முயல்வது ரசிக்கவில்லை.
ஒரு அவசியமான விஷயத்தைப் பற்றி பேசி, அன்பு தான் அனைத்துக்கும் தீர்வு என மனிதத்தை முன்வைத்திருக்கிறது. ஆனால் அந்த கணமும், அடர்த்தியும் படத்திலும் இருந்திருக்கலாம். மொத்தத்தில் ஒரு நல்ல கருத்தை பேசும் படம் என்றால் குறைகள் பற்றி கவலை இல்லாமல் பார்ப்பீர்கள் என்றால், இந்த ரயில் ஒரு அழகான அனுபவத்தைக் கொடுக்கும்.