hip hop aadhi PT SIR
திரை விமர்சனம்

PT SIR | கருத்து ஓக்கே... ஆனா சினிமாவாக ஈர்க்கிறாரா இந்த PT..?

படத்தின் மைய குறைகள் எனப் பார்த்தால், இந்தப் படத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பற்றி பேசியிருப்பது பாராட்டுவதைப் போல, அதை எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்ற விதத்தை பாராட்ட முடியவில்லை.

Johnson

சின்ன சண்டைக்கே பயப்படும் இளைஞன், ஒரு போரட்டத்தை முன்னெடுப்பதே PT சார்!

கனகவேல் (ஆதி) ஈரோடு தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுகிறார். வீட்டில் தங்கையுடன் செல்ல சண்டை, பள்ளி மாணவர்களுடன் நட்பு, ஆங்கில ஆசிரியை வானதி (காஷ்மீரா) மீது ஒன் சைடு லவ் என எளிமையாக போகிறது அரவது வாழ்க்கை. கனகவேல் தவறியும் எந்த வம்பு தும்புக்கும் செல்லமாட்டார். காரணம் அவரது அம்மா ஜோதிடத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை. திருமணம் வரை வேலுவின் உயிருக்கு ஆபத்து, எனவே அதுவரை வேலு எந்த பிரச்சனைக்கும் செல்லாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என வார்னிங் கொடுத்திருக்கிறார் ஜோதிடர். ஒன்சைடு லவ் கைகூட வேலு - வானதியின் திருமண வேலைகள் துவங்குகிறது. ஆனால் திடீரென நடக்கும் ஒரு மோசமான நிகழ்வு, வேலுவை சண்டை செய்ய களம் இறக்குகிறது. அதுவும் ஈரோட்டில் செல்வாக்கான ஒரு நபர் மற்றும் வேலு பணியாற்றும் பள்ளியின் உரிமையாளர் குருவை (தியாகராஜன்) எதிர்த்து. இதன் பிறகு நடப்பவை என்ன? வேலு - குரு மோதலில் ஜெயித்தது யார்? இந்தப் படம் சொல்லும் கருத்து என்ன? என்பதெல்லாம் தான் PT சார்.

பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் அத்துமீறல்கள் பற்றி தொடர்ந்து பல படங்கள் பேசி வருகின்றன, அவை இனியும் பேசப்பட வேண்டியதும் கூட. பாலியல் அத்துமீறல்களை வெவ்வேறு கோணங்களில் பேசிய `கார்கி’, `சித்தா’, மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான `Neru’ போன்ற படங்கள் பேசியவை கவனிக்கப்பட்டது. அதே களத்தை PT சார் படத்திலும் கையாண்டிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன். படத்தில் தீவிரமான விஷயங்களை பேசும் அதே நேரத்தில் படத்தின் ஜாலியும் மிஸ் ஆகக் கூடாது என சமன் செய்ய முயன்றிருக்கிறார். ஜாலியான காட்சிகள் ஓரளவு ரசிக்கக் கூடியதாகவே இருக்கிறது. கூடவே பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள், அதனால் ஏற்படும் உளவியல் சிக்கல்கள், தவறு செய்தது ஆணாக இருந்தாலும் பெண் மீது குறை கூறும் சமூகம், மானத்தைக் காரணம் காட்டி அந்த கொடூரத்தை மறைக்க நினைக்கும் குடும்பம் என பலவற்றையும் பேசியிருப்பது முக்கியமானது.

நடிப்பு பொறுத்தவரை லீட் ரோல் வேலுவாக வரும் ஆதி தனது வழக்கமான நடிப்பை கொடுத்திருக்கிறார். ஜாலியான காட்சிகளில் அவரின் துள்ளல் சிறப்பு, அழுத்தமான காட்சிகளில் தேவைப்படும் எமோஷன் மிஸ்ஸிங். காஷ்மீரா, தேவதர்ஷினி, பிரபு, பாக்யராஜ், நக்கலைட்ஸ் பிரசன்னா ஆகியோர் கதைக்குத் தேவையான நடிப்பை வழங்குகிறார்கள். அனிகா சுரேந்திரன் மற்றும் இளவரசு நடிப்பு தனித்து தெரியும் அளவு மிகச்சிறப்பு. படத்தின் மிக முக்கியமான கதாப்பாத்திரம் என்றாலும் தியாகராஜனின் அழுத்தமில்லா நடிப்பு கொஞ்சம் மைனஸ்.

படத்தின் மைய குறைகள் எனப் பார்த்தால், இந்தப் படத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் பற்றி பேசியிருப்பது பாராட்டுவதைப் போல, அதை எப்படி சொல்லியிருக்கிறார்கள் என்ற விதத்தை பாராட்ட முடியவில்லை. மிகவும் வழக்கமான பேர்ட்டனிலேயே இருக்கிறது. ப்ளாக்‌ஷீப் சேனலில் வரும் வீடியோக்களின் ஃப்ளேவரிலேயே படமும் இருக்கிறது. ஃப்ளேவர் என்பதில் படத்தின் தரத்தை சொல்லவில்லை. மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை எல்லாம் தரமாக இருக்கிறது. ஆனால் ஒரு காட்சியை கையாளும் விதம் அத்தனை சிறப்பாக இல்லை. படத்தின் மையமே, பெண்கள் பாலியல் ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகள், அதனால் உண்டாகும் மன இறுக்கம் போன்றவற்றை பேசுகிறது. ஆனால் இதில் பெண்களின் குரல் என்னவாக இருக்கிறது என்பது கேள்விக்குறியே. ஒரு காட்சியில் பெண்கள் சிலர், இந்த பாலியல் சீண்டல்கள் தினமும் நாங்கள் சந்திப்பதுதான், அது பழகிவிட்டது எனப் பேசுவார்கள். அந்தக் காட்சி முடிக்கப்படும் விதமும் மிக கனமானதாக இருந்தது. ஆனால் PT பீரியடை கணக்கு டீச்சர் கடன் வாங்குவது போல், அந்த காட்சி நமக்குள் இறங்கும் முன், அது ஒரு மாஸ் காட்சியாக மாறிவிடுது சோகம்.

மேலும் பல விஷயங்களை வெறும் வசனமாகவே கடத்த முயற்சிக்கிறார்கள். அது பெரிய அயர்ச்சியைக் கொடுக்கிறது. படம் ஒரு கட்டத்தில் கோர்ட் ரூம் ட்ராமாவாக மாறுகிறது, ஆனால் கோர்ட் விவாதங்கள் எதுவும் சுவாரஸ்யமாக இல்லை. மேலும் அங்கு வரும் ஒரு திருப்பம் கூட ஊகிக்கக் கூடியதாகவே இருக்கிறது. அதை வைத்து ஹீரோ பேசும் கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியவையே, ஆனால் அதன் பிரச்சார நெடி மிக அதிகம். நல்ல விஷயத்தை ப்ரீச் செய்வதில் எந்த தவறும் இல்லை, ஆனால் அது படம் பார்க்கும் அனுபவத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். அதுதான் இங்கு மிஸ்ஸிங்.

மொத்தத்தில் முக்கியமான பிரச்சனையைப் பற்றி பேசும் ஒரு ஓக்கேவான படமாக இருக்கிறது PT சார். ப்ளாக்‌ஷீப் வீடியோவின் தன்மையில் காமெடி கலந்து, கருத்து சொல்லும் படத்தை பார்ப்பீர்கள் என்றால், இந்த PT சாருக்கு ப்ரசண்ட் சார் சொல்லலாம்!