முதல் பாகத்தின் இறுதியில் பொன்னியின் செல்வனுக்கு நேர்ந்த துயரத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது. பொன்னியின் செல்வனைக் காப்பாற்றுபவர்கள் அவரை புத்த பிச்சுகளின் பாதுகாப்பில் விட்டுச் செல்கிறார்கள். இன்னொரு பக்கம், பாண்டியனின் ஆபத்து உதவிகள் பௌர்ணமி நாளில் மூன்று சோழர்களையும் பழி தீர்க்க முடிவு செய்கிறார்கள். இதற்கிடையே மணிமகுடம் தனக்குத்தான் என மதுராந்தகனும் மல்லுக்கு நிற்கிறார்.
சதுரங்கப் போட்டியில் கட்டங்களையே நகர்த்தும் வல்லமை பொருந்திய நந்தினி தன்னால் முடிந்த மட்டிலும் எல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறார். பெரிய பழுவேட்டரையரும், அவருடன் இருக்கும் சிற்றரசர்களும் என்ன முடிவு எடுக்கிறார்கள்; புதிதாக முளைக்கும் எதிர்மறை நபர்கள் யார்; ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் உட்பட பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம்.
கண் அசைவிலேயே நடிப்பை வெளிப்படுத்தும் விக்ரமுக்கு ஆதித்த கரிகாலன் வேடம் கன கச்சிதம். சம்புவரையரின் கடம்பூர் அரண்மனையில் அவர் செய்யும் லூட்டிகள் செம்ம. இரட்டை வேடமெடுத்திருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு ஏனோ ஊமை ராணியாக பெரிய வேலையில்லை. நாவலில் இருக்கும் அளவுகூட இதில் அந்த வேடம் அழுத்தமாக எழுதப்படவில்லை. அதே சமயம், நந்தினியாக மிரட்டியிருக்கிறார். கடம்பூர் அரண்மனைக் காட்சிகளில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் இருவரும் ஒருவரை ஒருவரை விஞ்சிக்கொண்டு நடித்திருக்கிறார்கள். எல்லாம் கடந்தப் பின்னும் எஞ்சியிருக்கும் காதலுக்காக போராடும் அந்த நொடியில் வென்றுவிடுகிறார் விக்ரம்.
‘ராவணன்’ படத்தில் வரும் காட்சியும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என்றாலும், இதில் விக்ரம் இன்னும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். விளக்குகளை அணைத்துவிட்டு இருள் கொஞ்சம் கொஞ்சமாய் அறையை விழுங்க ஆரம்பிக்கும் தருணத்தில், விக்ரம் நம்மை முழுவதுமாய் ஆட்கொள்கிறார். இப்படியான கதாபாத்திரங்களில் இன்னும் கொஞ்சம் நடியுங்கள் விக்ரம்.
கார்த்திக்கு இரண்டாம் பாகத்தில் ஜாலி கேலி வசனங்கள் இல்லாவிட்டாலும், எமோஷனல் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். அந்தப் பக்கம் ஆதித்த கரிகாலன் - நந்தினி காட்சி அமர்க்களம் என்றால், கார்த்தி - த்ரிஷாவுக்காக எழுதிய 'உயிர் உங்களுடையது தேவி' வசனத்தின் நீட்சி அட்டகாசம். அங்கிருந்து அப்படியே சக்திஸ்ரீ கோபாலனின் குரலில் வரும் ‘அகநக’ பாடல் வெயிலில் கரையும் ஐஸ்க்ரீம் போல் , யாரையும் கரைத்துவிடும். சண்டைக் காட்சிகளில் ஜெயம் ரவி செம்ம. நாவலிலேயே தலைப்பு அளவுக்கு அவருக்கு காட்சிகள் இருக்காது என்பதால், அதில் குறையொன்றுமில்லை. முதல் பாகத்தைப் போலவே இதிலும் ஆழ்வார்க்கடியான் நம்பியான ஜெயராம் செய்யும் சில விஷயங்கள் சிரிப்பு மூட்டுகிறது.
புத்தகத்தை பலமுறை வாசித்தவர்கள், யூட்யூபில் கதையை சுருக்கமாகக் கேட்டவர்கள், மூன்றாம் பாகத்தின் நூறாவது பக்கத்தில் கல்கி இதைத்தான் எழுதியிருக்கிறார் என மனனம் செய்தவர்களெல்லாம், முதல் பாகத்திலேயே இதை எப்படி மாற்றலாம், அதை எப்படி மாற்றலாம் என வாள் சண்டை இட்டுக்கொண்டிருந்தார்கள். இந்தப் பாகத்தில் அவர்களுக்கு மேலும் அதிர்ச்சியே காத்திருக்கிறது. சில கதாபாத்திரங்களை மொத்தமாய் நீக்கியது; சில கதாபாத்திரங்களின் முடிவை மாற்றியது என நிறையவே துணிச்சலாக மாற்றியிருக்கிறார்கள்.
அந்த வகையில் இளங்கோ குமரவேல், ஜெயமோகன், மணிரத்னம் மூவருக்கும் பாராட்டுகள். மூன்று மணி நேரத்துக்குக் கொஞ்சம் குறைவாய் ஓடும் படத்தில் எதையெல்லாம் சொன்னால் கல்கியின் நாவலைப் படிக்காமல், படம் பார்க்க வரும் பார்வையாளனுக்கு புரியுமோ, அதை மட்டுமே வைத்து திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். ரசிகனை ரொம்பவும் குழப்பாமல், அதே சமயம், புத்தகத்தில் விடுபட்ட சில கேள்விகளுக்கு தெளிவாகவும் பதில் சொல்லியிருக்கிறார்கள். 'அரசர் சொல்லும் பொய் அரசியல் எனப்படும்', 'பேராசைதானே அரசர்களுக்கு அழகு' போன்ற வசனங்கள் அருமை.
மறைவிற்காக போடப்பட்ட திரைகளின் வழி ஒளிப்பதிவில் மாயங்கள் செய்திருக்கிறார் ரவி வர்மன். குறிப்பாக நந்தினியும், ஆதித்த கரிகாலனும் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சி அத்தனை அற்புதம். சுந்தரச்சோழர் குந்தவையிடம் ஊமை ராணி குறித்து சொல்லும் காட்சியின் ஃப்ரேமில் ரவி வர்மன் கைதட்ட வைக்கிறார். அதைப்போலவே சுந்தரச்சோழரைக் கொல்ல பாண்டிய ஆபத்துதவிகள் சுரங்கப்பாதைக்குள் செல்லும் காட்சி முழுவதும் - சவாலாக இருந்தாலும் - ஒளிப்பதிவில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சினிமா சம்பிராயத்திற்காக சேர்க்கப்பட்டிருக்கும் அந்த இறுதி போர்க்காட்சி படத்தோடு சுத்தமாய் ஒட்டவில்லை. அதேபோல், முதல் பாகத்தில் வரும் பின்னணி இசையையே பல இடங்களில் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியிருக்கிறார். ‘அக நக’, ‘வீரா’ பாடல்களைத் தவிர பெரிதாக எதுவும் இந்தப் படத்தில் ஒட்டவில்லை. புறநானூற்றுப் பாடலான 'இளையோர் சூடார்' பாடல், திரையில் ஒரு சூழலுக்கு சங்கத்தமிழ் பாடலை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
நாவலில் படித்தால் நம்பகத் தன்மை வரும் சில இடங்களை சினிமாவில் காட்டும் போது, இன்னும் அழுத்தமாய் எடுத்திருக்க வேண்டும். குறிப்பாக பார்த்திபேந்திரன் காட்சிகள், மதுராந்தகன் காட்சிகளில் இன்னும் சிரத்தையுடன் எழுதியிருக்கலாம். வெறுமனே வாயை மட்டும் மூடிவிட்டு அதே குரலில் பேசினால்கூட யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்பது எழுத்தாக சரி. ஆனால், விஷுவலாக நகைப்புக்குரியதாக மாறிவிடும். அதே போல், நாவலில் ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் பயணிக்க எடுத்துக்கொள்ள நேரம் போன்றவற்றில் மெனெக்கட்டு இருப்பார் கல்கி. சினிமா என்பதாலேயே இதில் அதை மிஸ் செய்துவிட்டார்கள். துண்டு துண்டாக சில காட்சிகள் சிறப்பாக இருந்தாலும், தொடர்ச்சி இல்லாமல் அவை வந்துகொண்டே இருப்பது ஒருவித அயர்ச்சியை சில இடங்களில் தந்துவிடுகிறது.
'பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?' என்பதாவது சில ஆண்டுகள் முன்னர் வந்த கேள்விதான். ஆனால், ஆதித்த கரிகாலனை யார் கொன்றார்கள் என்பது கல்கியின் பொன்னியின் செல்வன் வெளியான நாள் முதல் இருக்கும் கேள்வி. அந்தக் கேள்விக்கான பதிலை கவித்துவமாக சொன்ன விதத்திலும், யாருமே சினிமாவாக எடுக்க முடியாது என ஐம்பது ஆண்டுகளாக பிரமிப்பாக இருந்த பொன்னியின் செல்வனின் திரை அனுபவத்தை நிகழ்த்திக் காட்டியதற்காகவும் , மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனை மனதார ரசிக்கலாம்.
படம் பார்த்துட்டீங்களா..? உங்க கருத்த கமென்ட்ல சொல்லுங்க