அரசாங்கத்தையே ஆட்டுவிக்கும் சக்தி வாய்ந்த கேங்ஸ்டர், அவரைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சியும், அவரைப் பிடிக்க நினைக்கும் ஒரு காவல் அதிகாரியையும் பற்றிய கதைதான் பத்து தல.
கன்னியாகுமரியில் இருந்து விரல் அசைவில் கவர்மென்ட்டை கட்டுப்படுத்தும் கிங்-பின் ஏஜி ராவணன் (சிம்பு). இவர் மீது பல கொலை வழக்கு, மணல் கொள்ளை வழக்கு என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். ஆனால் அதை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை. அந்த ஆதாரங்களைத் திரட்ட செல்லும் அண்டர்கவர் போலீஸ் குணா (கௌதம் கார்த்திக்). இது கூடவே ஏஜி ராவணனனை அழிக்க நினைக்கும் அரசியல்வாதி நாஞ்சிலார் (கௌதம் வாசுதேவ் மேனன்) சதி வேலைகளை செய்கிறார், உடன் இருப்பவர்கள் துரோகம் செய்கிறார்கள். இவற்றில் இருந்து ஏஜி ராவணன் தப்பினாரா? குணாவின் அண்டர்கவர் மிஷன் என்ன ஆகிறது என்பதெல்லாம்தான் பத்து தல படத்தின் மீதிக்கதை.
சிம்பு வழக்கம் போல் தனது நடிப்பால் படத்திற்கு பலம் சேர்க்கிறார். எதிரிகளிடம் கோபத்தைக் காட்டுவது, தங்கையிடம் பேசுவதற்காக ஏங்குவது, சண்டைக்காட்சி என எல்லாவற்றிலும் அசத்தி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கிறார். கௌதம் கார்த்திக்கு படம் முழுக்க விறைப்பும் முறைப்புமாக வரும் கதாபாத்திரம். அதை முடிந்த அளவு சிறப்பாக செய்திருக்கிறார்.
சிம்பு - அனு சித்தாரா சம்பந்தப்பட்ட அந்த எமோஷனல் காட்சி பெரிய அளவில் கைகொடுக்கிறது. அனுசித்தாராவின் மகள் ஆராதனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹர்ஷிதா என்ற குழந்தை வரும் காட்சிகள் செம க்யூட். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் அள்ளுகிறது. குறிப்பாக 'ஒசரனும் பத்து தல' பாடல் வரும் இடமெல்லாம் ஒரு மாஸ் மொமன்ட் உருவாகிறது.
இவை எல்லாம் படத்தின் ப்ளஸ் என்றால், படத்தின் மைனஸ் படம் எழுதப்பட்டிருக்கும் விதமும், எடுக்கப்பட்டிருக்கும் விதமும். தொழில்நுட்ப ரீதியாக தரமாக எடுக்கப்பட்டிருக்கும் படம், முழுமை இல்லாத விதத்தில் இருக்கும் திரைக்கதையால் கீழே விழுகிறது. கன்னடத்தில் வெளியான மஃப்டி படத்தை தமிழில் தன்னுடைய ஸ்க்ரிப்ட்டாக மேம்படுத்தி எடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா. ஆனால் அது படத்தை கொஞ்சம் நீர்த்துப் போகச் செய்திருக்கிறது. ஒப்பீடாக சொல்லவில்லை, ஆனால் கன்னட மஃப்டியில் ஒரு அழுத்தமான விஷயம், இரண்டு லீட் ரோல்களும் எழுதப்பட்டிருந்த விதம். மிக மோசமான ஆள் என சொல்லப்படும் கேங்க்ஸ்டர், மிக நேர்மையான ஒரு போலீஸ், இந்த இருவரும் வெவ்வேறு வகையில் தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொள்கின்றனர்.
அந்த அடையாளங்கள் வெளிப்படுத்தப்படும் காட்சிகள் கச்சிதமாக எடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் இன்னும் சில விஷயங்களைச் சேர்த்து, சில விஷயங்களை மாற்றி எடுத்திருக்கிறார் கிருஷ்ணா. அப்படி மாற்றுவது அவரது சுதந்திரம், அதே சமயம் அதன் மூலம் படத்தின் எந்த அழுத்தமும் ஏற்படவில்லை என்பதுதான் பிரச்சனை.
உதாரணமாக கௌதம் கார்த்திக் - ப்ரியா பவானி ஷங்கர் இருவருக்கும் ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சி வைப்பது, அதில் நடக்கும் ஒரு பிரச்சனையினால் இருவரும் பிரிவது என எதுவும் படத்தின் மையக்கதையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அப்படி எதுவும் இல்லை எனும்போது எதற்காக அந்தக் காட்சிகள் படத்தில் இருக்கிறது என்ற குழப்பம் எழுகிறது. ஆர்.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியிருக்கும் சில வசனங்கள் சிறப்பு. ஆனால் சிம்புவின் பில்டப்புக்காக எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் அனைத்தும் கொஞ்சம் ஓவர் டோஸாக இருக்கிறது.
படத்தின் மற்ற முக்கிய கதாபாத்திரம் நாஞ்சிலாராக நடித்திருக்கும் கௌதம் மேனன். அவர் ஒரு வட்டார வழக்கை பேச முயல்கிறார், மிரட்டலான வில்லனாக நடிக்க முயல்கிறார். ஆனால் அது எதுவும் எடுபடவில்லை என்பதுதான் சோகம். இதே பிரச்சனை தி ஜே அருணாச்சலம், ரெடின் கிங்ஸ்லி, மனுஷ்யப்புத்திரன் என பல பாத்திரங்களில் பிரதிபலிக்கிறது. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி நன்றாக இருந்தாலும், மிக நீளமாக போய்க் கொண்டே இருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஒரு கேங்ஸ்டர் கதை என்றாலே அதற்குள் அரசியல் விளையாட்டு, எதிரிகளின் பகை, பணத்தாசையால் துரோகம் எனப் பலவும் இருக்கும். பத்து தலயிலும் அவை இருக்கிறது, ஆனால் அது படத்தின் மையத்துடன் சரிவர இணையவில்லை. அதனாலேயே படம் நமக்கு ஒரு முழுமையான அனுபவத்தைக் கொடுக்கவில்லை. இருந்தாலும் பொழுதுபோக்காக பார்க்கக்கூடிய ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படம். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் பத்து தல மோசமான படம் இல்லை. அதேசமயம் ஒரு முழுமையான படமாகவும் இல்லை என்பதுதான் பிரச்சனை.