பெண்ணாக மாறும் ஆண், அதன் பிறகு நடக்கும் கலாட்டாக்கள் தான் `பாட்னர்’.
ஸ்ரீதர் (ஆதி) கிராமத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பி வருகிறார். ஊரில் 23 லட்சம் கடன் பாக்கி, அதை அடைக்க ஒரே மாதம் தான் கெடு. அடைக்காவிட்டால் அவரது தங்கையை கடன் கொடுத்தவர் வற்புறுத்தி திருமணம் செய்து கொள்வார். எனவே ஒரே மாதத்தில் 23 லட்சம் சம்பாதிப்பது எப்படி? என்ற கேள்வியுடனும், லட்சியத்துடனும் வருகிறார். சென்னையில் தனது நண்பர் கல்யாணை (யோகி பாபு) சந்தித்து, அவரிடம் வேலை கேட்கிறார். கல்யாண் ஒரு திருடன் எனவே அதே தொழிலில் ஸ்ரீதரையும் இழுத்துவிடுகிறார். அதன் பின் அவர்களுக்கு ஒரு வேலை தேடிவருகிறது. சைண்டிஸ்ட் (பாண்டியராஜன்) மனித ஜெனிடிக்ஸ் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த ஆராய்ச்சிக்கு முக்கியமான CHIPஐ திருட வேண்டும். அதைக் கொண்டு போய் கொடுத்தால் ஸ்ரீதர் - கல்யாணுக்கு 50 லட்சம் கிடைக்கும். அந்த திருட்டுக்காக சைண்டிஸ்ட் லேப் போகும் போது ஒரு விபத்து நடக்கிறது. அதனால் கல்யாண் பெண்ணாக மாறிவிடுகிறார். அதாவது யோகி பாபு - ஹன்சிகாவாக மாறுகிறார். இதன் பின் என்ன நடக்கிறது என்பதே மீதிக் கதை.
உலகம் முழுக்க இது போன்ற ஜானர்களில் படங்கள் வந்து கொண்டிருக்கிறதுதான். அதில் குறிப்பாக Tom Brady இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான `The Hot Chick'. அதில் ஒரு பெண் திடீரென ஆணாக மாறிவிடுவார். அதே கதை பார்ட்னரில் ரிவர்சாக ஒரு ஆண் பெண்ணாக மாறுகிறார். இந்த ஜானர் படங்களின் ஒரே நோக்கம் பெரும்பாலும் fun. இப்படியான மாறுதல் நடக்கும் போது சம்பந்தப்பட்ட நபரின் இயல்பு வாழ்க்கையில் என்ன கலாட்டாக்கள் நடக்கிறது என்பதை சொல்வதுதான்.
போலவே பார்ட்னர் படத்திலும் சில இடங்களில் இயக்குநர் மனோஜ் தாமோதரன் நகைச்சுவை கொண்டு வந்திருக்கிறார். ஆதி - ஹன்சிகா சார்ந்த சில காட்சிகள், ரோபோ ஷங்கரின் சில ஒன் லைனர்கள், தங்கதுரையின் சில காமெடிகள் இவை எல்லாம் படத்தின் fun modeக்கு உதவுகிறது. ஆனால் அவற்றை எல்லாம் ஓவர் டேக் செய்து படத்தை கீழிறக்குகிறது மோசமான ஸ்க்ரிப்ட்டும், அமெச்சூர்ரான மேக்கிங்கும். படத்தின் முதன்மையான புள்ளியே யோகிபாபு ஹன்சிகாவாக மாறுவதுதான். ஆனால் அந்த மாறுதல் நடப்பதே இடைவேளையின் போதுதான். அதற்கு முன்பு பாதி படம் திக்கித் திணறுகிறது.
படத்தில் ஒரு ஹீரோ இருக்கிறார் என்பதால் வலிந்து திணிக்கப்படுகிறது ஹீரோயின் பாத்திரம். அவர்களுக்கிடையேயான காதல் காட்சிகள், டூயட் பாடல்கள் என நேரத்தை வீணடிக்கிறார்கள். மறுபுறம் யோகி பாபுவின் அலுவலக காட்சி, ஜான்விஜய், ரோபோ ஷங்கர் சார்ந்த காட்சிகள் என வரும் ஒவ்வொரு காட்சியும் சுவாரஸ்யமே இல்லாமல் நகர்கிறது. நடிகர்களும் Over The Top பர்ஃபாமன்ஸை வழங்குகிறார்கள், அது ரசிக்கும்படியாகவும் இல்லை. இவை தாண்டியும் சில சொதப்பல்கள் இருக்கிறது. ஆனால், அவை நன்றாக இருந்தாலும் படம் பிழைத்திருக்காது. ஒன்று படத்தின் VFX மற்றும் CG மிக மோசமாக இருக்கிறது. உதாரணமாக யோகி பாபு - ரவிமரியா காரில் செல்வது போன்ற ஒரு காட்சி. அதில் கார் நகராமல் தான் நிற்கிறது, ஆனாலும் அது ஓடிக் கொண்டிருப்பது போல செய்யப்பட்டிருக்கும் CG அப்பட்டமாக தெரிகிறது.
இரண்டாவது போரிங்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சி. இத்தனைக்கும் படத்தில் வருவதே க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி தான். அதிலும் ஒரு நேர்த்தியும் இல்லை.
இது ஒரு wannabe a fun movie ஆக முயற்சிக்கிறது, ஆனால் அவர்கள் கொண்டு வர நினைத்த fun கடைசி வரை உருவாகவே இல்லை என்பதுதான் பிரச்சனை. மொத்தத்தில், இந்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பை மிகவும் தளர்த்திக் கொண்டு போய் பார்த்தால், ஒருவேளை படம் பிடிக்கலாம். மற்றவர்களுக்கு கஷ்டம் தான்.