போலீஸ், திருடன் இணைந்து பழங்கால சிலையை விற்க முயல்வதும், அதில் வரும் சிக்கல்களும் தான் `பரம்பொருள்’.
ஆதி (அமிதாஷ்) ஒரு திருடன். தங்கையின் மருத்துவ செலவிற்காக லட்சக்கணக்கில் அவருக்கு பணத்தேவை இருக்கிறது. மைத்ரேயன் (சரத்குமார்) ஒரு மோசமான காவலதிகாரி. அவருக்கும் வசதியான வாழ்க்கைக்கு பணம் தேவைப்படுகிறது. சூழ்நிலை காரணமாக மைத்ரேயன் சொல்வதைக் கேட்டு கீழ்படியும் நிலைக்கு ஆளாகிறார் ஆதி. ஆயிரம் ஆண்டு பழமையான சிலை ஒன்று இவர்களிடம் கிடைக்கிறது. அதை விற்பதற்கான ஆளை பிடித்துத்தா என ஆதியிடம் சொல்கிறார் மைத்ரேயன். இந்த சிலையை விற்கும் முயற்சியில் என்னவெல்லாம் நடக்கிறது? இறுதியில் வரும் திருப்பம் என்ன? என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக் கதை.
இந்தப் படத்தின் கதைக்களம் புதிதானது, சுவாரஸ்யமானதும் கூட. இயக்குநர் அரவிந்த்ராஜ் சிலைக் கடத்தல் நெட்வொர்க்கை நமக்கு அறிமுகப்படுத்துகிறார், அதில் ஒரு திருடனும் போலீஸும் நுழைவதால் என்ன ஆகிறது என்ற ஆர்வத்தையும் தூண்டுகிறார். ரைட்டிங்காக சில சுவாரஸ்யங்களும் இருக்கிறது. உதாரணமாக இந்தக் கதைக்குள் இரண்டு deceptions நடக்கிறது. ஒரு விஷயத்தைக் காட்டிவிட்டு, அதை வேறு விஷயம் என்று ஏமாற்றும் தந்திரம். முதல் deception மைத்ரேயனும் ஆதியும் செய்வது. இன்னொரு deception படத்தின் முக்கியமான கதாபாத்திரம் செய்வது. அதை சொன்னால் ஸ்பாய்லர் ஆகிவிடும்.
நடிப்பு பொறுத்தவரை, சரத்குமார் - அமிதாஷ் இருவரும் அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்கள். ஆனால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுந்தது. வருண் ராவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாலகிருஷ்ணன் சிறப்பாக நடித்திருந்தார். குமார் கங்கப்பன் கலை இயக்கமும், பாண்டிகுமார் ஒளிப்பதிவும் படத்தின் தரத்தைக் கூட்டுகிறது. யுவனின் பின்னணி இசை பல காட்சிகளுக்கு பரபரப்பைக் கூட்டுகிறது.
படத்தின் பிரச்சனை, இன்னுமே கூட படம் கச்சிதமாக இருந்திருக்கலாம் என்பதுதான். படத்தின் திருப்பங்கள் வளவள என சென்று கொண்டே இருப்பது சோர்வை அளிக்கிறது. தேவை இல்லாமல் நீட்டப்படும் காட்சிகளும் பொறுமையை சோதிக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல் பழிவாங்கும் கதையாக படம் மாறுவதில் ஒரு இயல்புத்தன்மை இல்லை. ஒரு நபர் இவ்வளவு பெரிய விஷயத்தை திட்டமிடுவதும், அந்த திட்டம் எந்த பிரச்சனையும் இல்லாமல் மிகக் கச்சிதமாக நடந்து முடிவதும் நம்பும்படியாக இல்லை. படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் ஆதி, மைத்ரேயன் தவிர இன்னும் சில கதாபாத்திரங்கள் வருகிறது, அவற்றுக்கு பின் கதையும் இருக்கிறது. ஆனால், கதைக்கு ஏற்றவாறு அழுத்தமாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றியது. யுவனின் இசையில் மூன்று பாடல்கள் படத்தில் வருகிறது. அதில் அசைவின்றி பாடல் இனிமை. ஆனால் மூன்று பாடல்களும் படத்தில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் இது ஓரளவு பொழுது போக்கை அளிக்கக்கூடிய சுவாரஸ்யமான படம் தான். இன்னும் எழுத்தில் கவனமும், மேக்கிங்கில் கச்சிதமும் இருந்திருந்தால், மிகத் தரமான க்ரைம் த்ரில்லராக வந்திருக்கும்.