'அணுகுண்டின் தந்தை' என போற்றப்படும் ராபர்ட் ஓப்பன்ஹெய்மரின் மனசாட்சியாக விரிகிறது நோலனின் இந்த மூன்று மணி நேர Oppenheimer சினிமா.
ஆகஸ்ட் ஆறாம் தேதி ஹீரோஷிமாவிலும், ஆகஸ்ட் எட்டாம் தேதி நாகசாகியிலும் நிகழ்ந்த அணு குண்டு வெடிப்பு என்னும் துயர்மிகு சம்பவம் சொல்லில் அடங்கா துயரங்களை ஜப்பானுக்கும் மனித குலத்துக்கும் பரிசளித்தது. ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் அதற்கு முன்பு , அந்த அணு குண்டு உருவான காலத்தையும், அணு குண்டு உருவாக்கியவர் அவர் தேசம் கைவிட்ட கதையையும் பல்வேறு நேரக்கோடுகளில் நம் முன் வைக்கிறது.
இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் , வெடிகுண்டுகள் ஏற்படுத்தும் பாதிப்பு போதாதென அடுத்தக்கட்டத்தை நோக்கி அரசியல்வாதிகள் விஞ்ஞானிகளை புதிய பிரளயங்களை ஏற்படுத்த தயார்படுத்துகிறார்கள். ஜெர்மனி இத்தகைய ஆராய்ச்சியில் முதலில் இறங்க வெவ்வேறு தேசங்களும் இதில் முதலீடு செய்யத் தொடங்குகின்றன. அமெரிக்காவின் அதி உன்னத மூளைக்காரர்களின் உதவியுடன் ஓப்பன்ஹெய்மர் நீயூ மெக்ஸிக்வோவின் லா அலமாஸ்ஸை அவர் ஆராய்ச்சிக்கான இடமாக தேர்வு செய்கிறார். ஓப்பன்ஹெய்மரின் அரசியல் சார்புகள், கழுவினாலும் அகலாத ரத்தம் படிந்த கைகளை சுத்தம் செய்ய அவர் தேடும் பிராய்ச்சித்தங்கள், அவருக்கும் லெவி ஸ்டிராஸுக்கான பகை அவரை எந்த அளவு சோதிக்கிறது ; ஹைட்ரஜன் குண்டு சோதனைகளை ஏன் மறுக்கிறார் என்பன பற்றியெல்லாம் விரிவாக ஒரு டாக்குமெண்ட்டரி பாணியில் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் கிறிஸ்டோஃபர் நோலன்.
ஓப்பன்ஹெய்மராக சில்லியன் மர்ஃபி. டார்க் நைட் சீரிஸ், இன்செப்சன் , டன்கிர்க் என நோலனின் முந்தைய படங்களில் சில்லியன் மர்ஃபி நடித்திருந்தாலும் இது முற்றிலும் வேறு களம். ஒரு மாணவனாய் அறிவியல் பாடம் கற்கும் காலம் தொட்டு தன் இறுதிக் காலத்தில் , அவரைத் துன்புறுத்திய தேசம் அதனை மன்னித்துக்கொள்ள அவரை கௌரவப்படுத்தும் காலம் வரை பல்வேறு மனநிலைகளை வெளிப்படுத்தும் அற்புதமான வாய்ப்பு சில்லியன் மர்ஃபிக்கு கிடைத்திருக்கிறது. மூடிய அறைக்குள் கேள்விகளால் துளைத்தெடுத்து அவரை மன ரீதியாக நிர்வாணப்படுத்தி ஏளனம் செய்யும் காட்சியில் சில்லியனின் நடிப்பு அபாரம். வசனங்களற்று உதடுகள் துடிதுடித்தபடி பல காட்சிகளில் தோன்றும் சில்லியனுக்கு ஆஸ்கார் தூரமில்லை..!
படத்தின் அடுத்த பிராதன கதாபாத்திரம் லெவி ஸ்டிராஸாக வரும் ராபர்ட் டௌனி ஜூனியர். ஷெர்லாக் ஹோம்ஸ், ஜட்ஜ் உள்ளிட்ட படங்களில் சிறப்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் ராபர்ட் டௌனி ஜூனியர் தன் வாழ்நாள் முழுக்க IRONMANஆக மட்டுமே நினைவுகூரப்படுவார். அது அவருக்கான வரமும் , சாபமும். இனி லெவி ஸ்டிராஸாகவும் நினைவுகூரப்படுவார் என்பதுதான் இந்தப் படம் அந்த நடிகருக்கு செய்திருக்கும் உதவி. பொதுசபையில் தன்னை எள்ளி நகையாடிய ஒரு மனிதரை , சாதுர்யமாய் பழி தீர்க்க ஒருவன் எந்த எல்லை வரை செல்வான் என்பதை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தில் எந்த ஃபிரேமை ப்ரீஸ் செய்தாலும் அங்கு நாலு நல்ல பெர்பாமர்கள் இருக்கும் வண்ணம் தேர்ந்த நடிகர்களைக் பயன்படுத்தியிருக்கிறார் நோலன். நீல் போராக கென்னத் பிரனா; ஜெனரல் க்ரோவ்ஸாக மேட் டேமன்; ஓப்பன்ஹெய்மரின் மனைவி கிட்டியாக எமிலி பிளன்ட்; காதலி ஜீன் டட்லாக்காக ஃப்ளோரன்ஸ் பக்; டேவிட் ஹில்லாக ரமி மாலிக்; போரிஸ் பேஷாக கேஸி அஃப்லெக்; அமெரிக்க அதிபர் ஹேரி S ட்ரூமேனாக கேரி ஓல்டுமேன், எட்வர்ட் டெல்லராக ( ஹைட்ரஜன் குண்டுகளின் தந்தை ) வரும் பென்னி சஃப்டி என படம் முழுக்க எல்லா இடங்களிலும் பெர்பார்மர்கள் தான். இவர்களுக்கு மத்தியில் பிரிவின் வலி சுமந்து நிற்கும் ஃப்ளோரன்ஸ் பக்கும்; கணவருக்காக அந்த அறையில் துணை நிற்கும் எமிலி பிளன்ட்டும் கூடுதல் அப்ளாஸ் அள்ளுகிறார்கள்.
American Prometheus: The Triumph and Tragedy of J. Robert Oppenheimer என்னும் புத்தகத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கிறிஸ்டோபர் நோலன். நோலனின் மற்ற படங்களைப் போல மாயாஜால கண் கட்டி வித்தைக் காட்டும் திரைக்கதை யுக்திகளோ; பேட்மேன் , ஜோக்கர் பண்ணி சூப்பர் ஹீரோக்களோ இதில் இல்லை. மூன்று மணி நேர சினிமாவில் பெரும் பகுதி வெறும் உரையாடல்களே. ஆனால் கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளுக்கான பிராய்ச்சித்தமாக அரசியல் சரி தவறுகளைக் கடந்து ஆத்மார்த்தமாக இயக்கியிருக்கிறார் நோலன்.
Fission, Fusion, B&W, கலரில் நடக்கும் காட்சிகள் என ஆங்காங்கே நோலனின் கண்கட்டி வித்தைகள் எட்டிப் பார்த்தாலும் அதைத் திரைக்கதையை எங்கும் குழப்பவில்லை. ஒரு நேர்த்தியான அரசியல் மைய சினிமாவை எடுத்திருக்கிறார் நோலன். ஜெனரல் க்ரோவ்ஸும் ஓப்பன்ஹெய்மரும் பேசிக்கொள்வது; ஓப்பன்ஹெய்மரின் பாதுகாப்பு பிரச்னைகளை மையப்படுத்தி வரும் அறையினுள் நிகழும் உரையாடல்கள்; தனக்காக இந்த சதி வலையை பின்னியது யார் என ஓப்பன்ஹெய்மர் தன் சுற்றத்துடன் பேசுவது; அறிஞர் பெருமக்கள் அணுகுண்டு ஆராய்ச்சிகள் பற்றி புலம்புவது என எல்லாமே உரையாடல்கள் தான். ஒவ்வொரு வசனமும் பெரும் அடர்த்தி நிறைந்தவை. ஓப்பன்ஹெய்மரும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் பேசிக்கொள்வது இந்த பெரிய உலகிற்கானது. ஓப்பன்ஹெய்மரும் அவரின் பார்ட்னருமான ஜீன் டட்லாக்கும் பேசிக்கொள்வது பிரிவின் வலி சுமந்து நிற்கும் நம் உள்ளங்களுக்கானது.
பிளாக் பேந்தரும் முன்பே க்ரீட் உட்பட பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் பிளாக் பேந்தருக்குப் பின்னர் பரவலாக அறியப்பட்டார் லுட்விக் கொரான்சன். TENETஐத் தொடர்ந்து இந்தப் படத்திலும் கொரான்சனின் ராஜ்ஜியம் தான். நியூ மெக்ஸிகோவின் அந்த பாலைவனத்தில் நடக்கும் த்ரில்லர் பாணி அணு குண்டு காட்சிகளில் மேலும் பயம் கொள்ள வைக்கிறது கொரான்சனின் பின்னணி இசை. தற்போது படத்தின் OST இணையத்தில் வெளியாகியிருக்கிறது. TRINITY என்னும் இசைத்துணுக்கு மட்டுமே ஒருவரின் தூக்கத்தை கெடுக்க வல்லமை பொருந்தியது.
ஓப்பன்ஹெய்மரின் அடுத்த ஸ்டார் ஹொய்ட்டி. நோலன் படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். நிறைய க்ளோசப் காட்சிகள்; ஐமேக்ஸ் தொழில்நுட்பம் ; டிஜிட்டல் அல்லாது பிலிம்மில் எடுத்தது; சிஜி இல்லை; கறுப்பு வெள்ளை கலர் பேட்டர் என எவ்வளவோ சிரமங்கள். ஆனால், அவை எல்லாவற்றையும் கடந்து ஓப்பன்ஹெய்மரை ஈர்க்க வைத்ததில் இருக்கிறது ஹொய்ட்டியின் திறமை. டாக்குமெண்ட்டரி பாணி கதை பொதுவாகவே பார்வையாளனை சோர்வடையச் செய்யும். அதிலும் இத்தனை வசனங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. ஆனால், நம்மை ஒரு த்ரில்லர் பார்க்க வைக்கும் அனுபவத்தைத் தந்துவிடுகிறது ஜெனிஃபர் லேமின் படத்தொகுப்பு. எதிர்கால முன்பே பார்ப்பதாக வரும் சின்ன சின்ன துணுக்குகள் திரைக்கதை யுக்தியாக இருந்தாலும், அதனை பார்வையாளரை எந்தவகையிலும் தொந்தரவு செய்யாதவாரு எடிட் செய்திருக்கிறார் லேம். நல்ல திரைப்படம் உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறது என்பார்கள். இத்தனை பேரின் பெரும் உழைப்பினால் அது சாத்தியமாகியிருக்கிறது.
வழக்கமான நோலனின் கமர்ஷியல் பாணி மாயாஜாலங்கள் இல்லை என்பதால், அதை எதிர்பார்த்து செல்பவர்களுக்கு நிச்சயம் இந்தப் படம் போரடிக்கும். அதனால் அதை உணர்ந்து செல்வது நலம்.
ஓப்பன்ஹெய்மர் ஒரு பேரனுபவம். நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து வரலாற்றைக் படித்துப் பயன்பெறுங்கள்.