Nivin Pauly | Malayalee From India Malayalee From India
திரை விமர்சனம்

ஒரு சிலரின் வெறுப்புப் பேச்சுக்கான காமெடி பதிலா இந்த Malayalee From India..?

இந்தியாவில் நிகழும் வெறுப்புப் பேச்சுக்களால் கடுப்பான நபரா நீங்கள்..?உங்களுக்கு முதல் பாதி செம்ம ஜாலியாக இருக்கும்.

karthi Kg

இஸ்லாமியர்களையும், பாகிஸ்தானையும் எதிரிகளாக கருதும் ஒருவருக்கு வாழ்க்கை அத்தகைய சூழலையே ஜீவிதமாக கொடுத்தால் என்ன நடக்கும் என்பது தான் Malayalee From India.

த்யான் சீனிவாசனும், நிவின் பாலியும் கேரளாவில் தண்ட சோறாக சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்கள். இஸ்லாமியர்கள் கெட்டவர்கள், பாகிஸ்தான் நம் எதிரி, குஜராத் வளர்ந்த மாநிலம் என புரட்டுகளை நம்பி மூளைச்சலவை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான போட்டியில் பாகிஸ்தான் வென்றுவிட ஒரு இஸ்லாமிய வீட்டில் வெடிச்சத்தம் கேட்கிறது. அதனால் உக்கிரமடைந்து த்யான் சீனிவாசன் செய்யும் செயல் ஊரையே இரண்டாகப் பிரிக்கிறது. தலைமறைவாகும் நிவின் பாலி துபாய்க்கு தப்பி ஓடுகிறார். அங்கு அவருக்கு நடக்கும் சம்பவங்களும், அவர் என்னவாக மாறுகிறார் என்பதே மீதிக்கதை.

கானல் நீரென அறியாமல் பெருமை பேசித் திரியும் கோபியாக நிவின் பாலி. இரண்டாம் பாதியில் வரும் எமோசனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். முன்பு கண்டிப்பாகவும் பின்பு அன்பு கொண்ட நெஞ்சமாக வரும் தீபக் ஜெய்தியின் நடிப்பு சிறப்பு. அப்பாவித்தனமும் குரூரமும் கலந்த கதாபாத்திரம் த்யான் சீனிவாசனுடையது. ஆங்காங்கே அவர் கதாபாத்திரம் காணாமல் போய்விடுவதால் எந்த கனெக்ட்டும் இல்லாமலே முடிந்துவிடுகிறது அந்தக் கதாபாத்திரம் . வாட்ஸ் அப் ஃபார்வர்டுகளை உண்மையென நம்பி வாழும் கதாபாத்திரங்களை திரையில் அசத்தலாக கொண்டுவந்திருக்கிறார்கள் நிவினும், த்யானும். ஆனால், அவர்கள் செய்யும் எல்லா விஷயங்களையும் காமெடியென மட்டுமே கடந்துவிடமுடியுமா என தெரியவில்லை.

Nivin Pauly | Malayalee From India

இந்தியாவின் ஒரு கட்சியை மையப்படுத்தி சினிமா இயக்குவதில் இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனிக்கு அலாதி பிரியம் போல. Jana Gana Mana படத்தில் பொட்டில் அடித்தது போல வெறுப்பு பேச்சுக்கு எதிராக வசனங்களை எழுதிய ஷரிஸ் மொஹம்மது இந்த முறை தர லோக்கலில் ஜாலியாக நக்கலடித்து எழுதி வைத்திருக்கிறார். GDP 2 லட்சம் கோடி தெரியுமா என சொல்பவரிடம் , மசால் தோசை 40 ரூபாய் ஆகிடுச்சு அதுக்கும் எதோ DGP தான் காரணமாம் என பதில் சொல்வதாகட்டும்; "கேரளத்தை குஜராத் போல் மாற்றப் போகிறோம்" என நிவின் சொல்ல, " இந்த கிராமத்த மட்டும் விட்டுடுங்கடா" என சலீம் நக்கலடிப்பதாகட்டும் ; முதல் பாதி முழுக்கவே 'அந்தாணிஜி' காமெடிகள் தான். அதே சமயம், வெறுப்புப் பேச்சுக்கு எதிராக ஆணித்தனமான வசனங்களையும் வைக்க அவர் தவறவில்லை. " நீ இப்ப வெறுப்ப விதைச்சுட்டு போயிடுவ. அடுத்த தலைமுறை இதைய வச்சு சண்டை போடறப்ப. நீயும் இருக்கமாட்ட. நானும் இருக்க மாட்டேன். அப்புறம் ஏன் இதைய பண்றீங்க"; " எந்தவொரு தேசம் மதத்த அதோட அரசியல் அமைப்பு சட்டமா பாவிச்சு காய் நகர்த்துதோ அது மண்ணோட மண்ணாத்தான் போகும்.அது என் தேசமா இருந்தா என்ன, உன் தேசமா இருந்தா என்ன " உட்பட பல வசனங்களில் கவர்கிறார் ஷரிஸ் மொஹம்மது. அதே சமயம், இஸ்லாமியர்கள் பக்கம் நடக்கும் தவறுகளையும், ISIS தீவிரவாதம் குறித்தும் சரிசமமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

மதவெறி பிடித்து அலையும் ஒருவன் , சூழ்நிலைவசத்தால் அதற்கு நேரெதிரான ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும் என்பதே கதை என்னும் போது அதற்குள்ளாகவே விளையாடி இருக்கலாம். தேவையில்லாத கிளைக்கதைகள் ஒரு கட்டத்துக்கு மேல் அயர்வைத் தருகிறது. அட, மலையாளத்துல நல்ல படம் எடுக்கறாங்கப்பா என நாம் பாராட்டிக்கொண்டிருக்கும் போது, நம் சினிமா பாணியில் செட் போட்டு பாடல் காட்சியெல்லாம் வடிவமைத்திருக்கிறார்கள். எதுக்க்க்க்க்க்கு..?. அதே போல் ஆடுஜீவிதம் படத்தையும் ஒரு கட்டத்துக்கு மேல் நீண்டுகொண்டே செல்லும் இந்திய பாகிஸ்தான் நல்லிணக்க கதை பஜ்ரங்கி பைஜான் படத்தையும் நினைவுப்படுத்த தவறவில்லை.

இந்தியாவில் நிகழும் வெறுப்புப் பேச்சுக்களால் கடுப்பான நபரா நீங்கள்..?உங்களுக்கு முதல் பாதி செம்ம ஜாலியாக இருக்கும். மற்றவர்களுக்கு படம் டல்லடிக்க வாய்ப்பியிருக்கிறது. படத்தின் கிளைக்கதைகளால் கருணையின்றி வெட்டியிருந்தால் இன்னுமே நல்ல விருந்தாக அமைந்திருக்கும் இந்த Malayalee From India.