கிரிக்கெட்டும் காதலும் இரு ஆண்களின் ஈகோவை என்ன செய்யும் என்பதே லப்பர் பந்து படத்தின் ஒன்லைன்.
சேவாக்கைப் போல் கெத்தாக ஓப்பனிங் இறங்கி வாணவேடிக்கை நடத்துபவர் 'கெத்து'. ஆனாலும், மனைவியின் முன் பெட்டிப் பாம்பாக மடங்கிவிடுவார். காலம் உருண்டோடுகிறது. ஊரிலேயே பெரிய பவுலராக வலம் வருகிறார் அன்பு. ஆனால், அன்புக்கென நிரந்தரமாக ஒரு டீம் இல்லை. அன்புக்கு ஏற்றார் போல் ஒரு காதலி அமைய , விதி 'கெத்து' ரூபத்தில் வருகிறது. பேட்ஸ்மேனுக்கும், பவுலருக்குமான ஈகோ யுத்தம் எல்லா ரூபத்திலும் எதிரொலிக்கிறது. ஆண்களுக்குள் இருக்கும் ஈகோவை அவர்களின் காதல் வென்றெடுத்ததா என்பதே லப்பர் பந்தின் மீதிக்கதை.
இதுமட்டும் தான் லப்பர் பந்தின் கதையா என்றால் நிச்சயம் இல்லை. பாரம்பரியம் என நம்மில் பலர் சொல்லிக்கொண்டு திரியும் ஜல்லிக்கட்டு முதல் பாகிஸ்தான் என்றால் ' இந்தியராய் பெருமை கொள்வோம்' என ஒன்றிணையும் கிரிக்கெட் வரை தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக நிரம்பியிருக்கிறது சாதி. இங்கு ஒவ்வொரு விளையாட்டிலும் விளையாட மட்டுமல்ல , நுழையவும் ஒரு 'தகுதி' தேவைப்படுகிறது. அந்த தகுதி இல்லையென புறக்கணிப்படும் ஒருவர், அதற்கு என்ன செய்கிறார் என்பதை அவ்வளவு அழகாக சொல்லி அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநரான தமிழரசன் பச்சமுத்து. நெஞ்சுக்கு நீதி படத்தில் வசனங்கள் மூலம் ஈர்த்தவர் இதில் தன்னை ஒரு தேர்ந்த கதைசொல்லியாகவும் நிரூபித்திருக்கிறார். '' ராஜா ராஜா தான்' ஆனா இது தேவா' என நக்கலடிப்பதில் ஆரம்பித்து சிரிக்க படத்தில் அத்தனை விஷயங்களை வசனங்களாக்கியிருக்கிறார்.
குறிப்பாக பால சரவணணும், ஜென்சனும் மாறி மாறி கலாய்த்துக்கொள்ளும் காட்சி மொரட்டு ஊர் சைடு குளத்துமேடு கிரிக்கெட் ரகம். ஜாதிவெறி இருக்கும் நபர்களைவிடவும், ' தம்பி மாதிரி'யென சொல்லி காரியம் சாதித்துக்கொள்ளும் நபர்கள் ஆபத்தானவர்கள் என சொல்லும் இடமும் சரி, கலப்புத் திருமணம் செய்துகொண்ட ஒரு குடும்பத்தில் இரு பெண் சம்பந்திகள் பேசிக்கொள்ளும் இடமும் சரி இயக்குநரின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது. படத்தின் அடிநாதம் அரசியல் தான் என்றாலும் அது எங்கேயும் துருத்தாமல், இயல்பாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இவ்வளவு இயல்பான ஒரு சினிமாவை தமிழில் பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. சின்ன சின்ன கதாபாத்திரங்கள்கூட முழுமை அடையும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது லப்பர் பந்தின் திரைக்கதை . வெட்டி ஈகோவுக்கு குடும்பத்தில் இருக்கும் பெண்கள் படும் அவஸ்தைகள் ; கலப்புத் திருமணங்கள்; மக்கள்; என எல்லாவற்றையும் அழகியலோடு படைத்ததற்கு வாழ்த்துகள் தமிழரசன். ஆண்களுக்குள் இருக்கும் ஈகோவை பதிவு செய்த படத்தில் பெண் கதாபாத்திரங்களை இவ்வளவு வலிமையாக படைத்ததற்குக் கூடுதல் பாராட்டுக்கள்
கெத்தாக அட்டக்கத்தி தினேஷ். முதல் பந்து சாமிக்கு விடும் தோரணையில் ஆரம்பித்து இந்தக் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு அருமையாக பொருந்தியிருக்கிறார். மகளின் ஆசைக்கு எதிராக தானே குற்றவுணர்ச்சியுடன் காய் நகர்த்தும் காட்சியாகட்டும், மனைவிக்காக ஏங்கி நிற்கும் காட்சியாகட்டும் இது தினேஷின் செகண்டு இன்னிங்ஸ். 'நயா பைசாவுக்கு பிரயோசனமில்ல. ஆனாலும் இந்த வரட்டுக் கவுரத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல' என இளவட்டு ஈகோ கதாபாத்திரங்களுக்கென்றே அளவெடுத்தது செய்தது போலிருக்கிறார் ஹரிஷ் கல்யாண். 'பார்க்கிங்'கில் காருக்கு சண்டை போட்டவர் இந்த முறை பந்துடன் களமிறங்கியிருக்கிறார். ஈகோவை ஈகோவால் சீண்டும் தருணங்களில் ஹரிஷ் கல்யாணின் நடிப்பு சிறப்பு. ஹீரோக்களுக்கு இணையான ரன்னர்களாக பாலசரவணனும், ஜென்சனும் காமெடியில் கலக்கியிருக்கிறார்கள். ஆண்களுக்குள் இருக்கும் ஈகோ; கிரிக்கெட் என்பதைக் கடந்து இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக இருந்ததற்குக் காரணம் பெண் கதாபாத்திரங்கள். பார்வையிலேயே கட்டிப்போடும் ஸ்வாஸிகா அப்படிப்பட்டதொரு தேர்வு. பிரமாதப்படுத்தியிருக்கிறார். எல்லா கிராமங்களிலும் இப்படியான நபர்களைக் காண முடியும். தனக்கு எதிராக அப்பா எதுவும் செய்துவிடமாட்டார் என நம்பும் மகளாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அத்தனை பொருத்தம். சின்ன கதாபாத்திரங்கள் என்றாலும் காளி வெங்கட், கர்ணன் ஜானகி, கீதா கைலாசம் கவனம் ஈர்க்கிறார்கள்.
படத்தின் பெரும்பலம் பின்னணி இசை. இருவருக்குமான ஈகோ வெடிக்கும் மைதானத்தில் சான் ரோல்டனின் பின்னணி இசை அருமை. மோகன் ராஜனின் வரிகளில் 'சில்லாஞ்சிறுக்கியே' நல்லதொரு மெலடி. தினேஷுக்கு வரும் ரெட்ரோ பழைய பாடல் அட்டகாசம். படத்தில் அந்தப் பாடலையும், அதையொட்டிய விஷயங்களை வைத்தே ஒரு கதை சொல்லியிருக்கிறார்கள். அதுவும் அருமை. ஸ்போர்ட்ஸ் படத்துக்கான விஷயங்களை சிறப்பாகக் கொண்டுவந்திருக்கிறது தினேஷின் கேமரா. எங்கேயும் எதையும் மிஸ் செய்யாமல், தொய்வாகவும் இல்லாமல் அட்டகாசமான கட்டாக வெளிவந்திருக்கிறது. மதனின் படத்தொகுப்பு அருமை.
படத்தில் சில குறைகள் உண்டு. ஆனால், அவை பொருட்படுத்தக்கூடியவை இல்லை.
குடும்பத்துடன் பார்க்கவேண்டிய நல்லதொரு ஸ்போர்ட்ஸ் சினிமா இந்த லப்பர் பந்து.