அஜய் (பரத்) - திவ்யா (வாணி போஜன்) இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்துப் போக திருமணம் நடக்கிறது. ஆரம்பத்தில் நலமாக நகரும் குடும்ப வாழ்க்கையில் ஒரு வருடத்திற்குப் பிறகு சண்டைகள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. பிசினஸ் செய்கிறேன் என கோடிக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்துகிறார் அஜய். ஆரம்பத்தில் கணவரை சகித்துக் கொண்டு வாழும் திவ்யா, ஒருகட்டத்தில் அவரை விட்டு பிரிய நினைக்கிறார். அப்போது ஏற்படும் வாக்குவாதத்தால் இருவருக்கும் இடையே சண்டை உண்டாகிறது, அதன் பின் என்ன நடந்தது என்பதை த்ரில்லராக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் ஆர்.பி.பாலா.
காலித் ரஹ்மான் இயக்கத்தில் 2020ல் நேரடி நெட்ஃப்ளிக்ஸ் ரிலீஸாக வந்த மலையாள சினிமா `லவ்’ன் தமிழ் ரீமேக் தான் இது. மலையாளத்தில் இந்தப் படம் வெளியான போது அதன் தொழில்நுட்ப சிறப்புகளுக்காக கொண்டாடப்பட்டாலும், அதன் உள்ளடக்கம் அத்தனை நிறைவாக இல்லை என்ற விமர்சனங்களை சந்தித்தது. சரி தமிழ் `லவ்’ அந்த நிறைவை கொடுத்திருக்கிறதா?
படத்தில் பாசிடிவ் விஷயங்கள் எனப் பார்த்தால் நடிப்பைவிட, ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தது. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். பரத் - வாணி இருவருக்கும் இடையிலான சண்டைக்காட்சிகள் நம்பும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது. நடிப்பு பொறுத்தவரை பரத் தன்னால் இயன்ற வரை குற்றவுணர்ச்சி கொண்ட மனிதனாக தயங்கி நிற்பதும், மனைவியின் கேள்விகளை சிரித்தபடி தவிர்ப்பதும், பின் கத்தி சண்டையிடுவதும் என நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். வாணி போஜனுக்கு நடிப்பை வெளிப்படுத்த சில காட்சிகள் தான், அதனை ஓரளவு பயன்படுத்தியிருக்கிறார். பரத்தின் நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, டேனியல் இருவரும் மிக வழக்கமாக ஒரு டெம்ப்ளேட் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். படத்தில் பிரச்சனை, ஒட்டுமொத்த படமாக பார்வையாளர்களுக்கு ஒரு முழுமையை கிடைக்கவில்லை என்பதுதான்.
படத்தின் துவக்கக் காட்சியில் பரத்தும் - வாணி போஜனும் காஃபி ஷாப்பில் சந்தித்துக் கொள்வது, அதன் பின் வரும் ஒரு பாடல் என அனைத்திலும் மிதமிஞ்சிய செயற்கைத்தனம். மேலும் எந்த ஒரு காட்சியும் எடிட், கேமரா, ஸ்லோ மோஷன் என கிம்மிக் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டிருக்கிறதே தவிர, அந்தக் காட்சி சுவாரஸ்யமாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவே இல்லை. விவேக் பிரசன்னா வீட்டுக்குள் வந்த பேசும் காட்சிகள், தொடர்ந்து டேனியல் வரும் காட்சிகள் எல்லாவற்றிலும் அத்தனை செயற்கைத்தனம். போதாதற்கு Schizophrenia, Hallucinations போன்றவற்றைக் கதைக்குள் சேர்த்த விதமும் அத்தனை பொருத்தமாக இல்லை.
மேலும் இந்தப் படம், ஒரு Schizophrenia பாதிப்புக்கு ஆளானவர் பற்றியா, குடும்ப வன்முறை பற்றியா, திருமணத்தைத் தாண்டிய உறவைப் பற்றியா? கடைசியாக இந்தப் படம் பேசவிரும்பும் விஷயம் தான் என்ன? என்பதில் ஒரு தெளிவும் இல்லை. காலித் ரஹ்மான் இயக்கத்திலேயே சற்று சுவாரஸ்யம் குறைந்த படம் `லவ்’ தான். அந்தப் படத்தை ரீமேக் செய்ய எடுத்துக் கொண்டது சரி, ஆனால் அதன் குறைகளை சரி செய்து இன்னும் ஈர்க்கும்படி கொடுத்திருக்கலாம். அதை சரியாக செய்திருந்தால் கவனிக்கும் படியான த்ரில்லராக அமைந்திருக்கும்.