திரை விமர்சனம்

பழைய பன்னீர்செல்வமாகத் திரும்பியிருக்காரா லிங்குசாமி? - ‘வாரியர்’ விமர்சனம்

பழைய பன்னீர்செல்வமாகத் திரும்பியிருக்காரா லிங்குசாமி? - ‘வாரியர்’ விமர்சனம்

webteam

சண்டக்கோழி 2வுக்குப் பிறகு பெரிய ப்ரேக் எடுத்து `தி வாரியர்’ ஆக திரும்பியிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி. இது போக தெலுங்கு நடிகர் ராம் தமிழில் அறிமுகமாகும் படம், க்ரித்தி ஷெட்டி, டி.எஸ்.பியின் புல்லட் சாங் எனப் படத்தின் மீது கவனம் விழ பல காரணங்கள். படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? லிங்குசாமி பழைய லிங்குசாமியாக திரும்பியிருக்கிறாரா? 

சென்னையில் இருந்து வந்து மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராகப் பணிக்குச் சேருகிறார் சத்யா (ராம்). மதுரையையே அலறவிட்டுக் கொண்டிருக்கிறார் ரௌடி குரு (ஆதி). ஆதியால் வெட்டப்பட்ட ஒருவரை, ‘நேர்மையான டாக்டர்’ ராம் காப்பாற்றுகிறார். ”மதுரைக்கு வந்து மதுர முத்துப்பாண்டியவே ஒருத்தன் அடிச்சிட்டான்னா” ரேஞ்சுக்கு வழக்கமான வில்லன் போல் ஆதி கோபப்பட, ஆரம்பிக்கிறது பிரச்சனை. வழக்கம் போல் அடிதடி, மாஸ் காட்சிகள், பன்ச் வசனங்கள், லிங்குசாமி ஸ்டைலில் மிக மிக வழக்கமான க்ளைமாக்ஸ் என முடிகிறது `தி வாரியர்’. வழக்கத்துக்கு மாறாக இருப்பது நேர்மையான டாக்டர், நேர்மையான போலீஸாக மாறினால் என்ற ஐடியா மட்டுமே. 

நாயகனாக ராம் பொத்தினேனி கனிவான மருத்துவர், கறாரான போலீஸ் என இரண்டு பரிணாமம். அதை சிறப்பாக செய்ய முயன்றிருக்கிறார். வில்லனாக ஆதி, படத்தில் அவரின் தோற்றமும், பின் கதையும் மிரட்டலாக இருக்கிறது. ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி பாடல்களில் அசத்தலான நடனம் செய்திருக்கிறார். துணை கதாபாத்திரங்களில் நதியா, ஜெயபிரகாஷ், பிரம்மாஜி போன்றோர் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்கள், படத்தின் பின்னணி இசை இரண்டிலும் புல்லட் வேகம்.

இவை தவிர படத்தில் எல்லாம் சறுக்கலே. பெயரளவில் பைலிங்குவல் என சொல்லப்பட்டாலும், பல காட்சிகளில் கதாபாத்திரம் பேசுவது தெலுங்கிலும், வசனங்கள் தமிழில் ஒலிப்பதும் என ஒட்டாமல் இருக்கிறது. கூடுதல் இன்னொரு பிரச்சனை. தமிழ் வெர்ஷனில் கதைக் களமாக சொல்லப்படுவது மதுரை. ஆனால் ஆந்திரா பகுதிகளிலும், செட்களிலும், க்ரீன் மேட்டிலும் படமாக்கியது அப்பட்டமாக தெரிகிறது. கர்ணூல் கொண்டா ரெட்டி ஃபோர்ட் முன் நின்று கொண்டு மதுரை நாயக்கர் மகால் முன்பு நிற்கிறேன் என ஹீரோ சொல்வதெல்லாம்... நாயக்கர்களே தெலுங்குதான ப்ரோ என சமாளித்தால் தான் உண்டு.

ஒரே படத்தை இரண்டு மொழிகளுக்கும் பொதுமைப்படுத்துவதால் நடக்கும் சிக்கல் என இதைக் கடந்து விடுவோம். படமாவது சுவாரஸ்யமாக இருக்கிறதா என யோசித்தாலும், இல்லை என்பதுதான் சோகம். ஹீரோ - வில்லன் மோதல் என்பது லிங்குசாமி நின்று விளையாடும் க்ரவுண்டு. ஆனால், விறுவிறுப்பான ஹீரோ - வில்லன் மோதலோ, புத்திசாலித்தனமான காட்சிகளோ இல்லாமல் தேமே என நகர்கிறது காட்சிகள். ஒரு ஹீரோ மருத்துவத் துறையில் இருந்து காவல் துறைக்கு மாறுகிறார் என்பதில் என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது? அதனால் கதையில் என்ன நடக்கிறது என்பதில் தானே சுவாரஸ்யம். அதை இன்னும் கவனமாக எழுதியிருக்கலாம். வெறுமனே டாக்டராக இருந்தால் நார்மல் மோட், போலீஸ்சாக இருந்தால் ஆக்ஷன் மோட் என்பது போதுமானதாக இல்லை. மரு வைத்தால் மாறுவேஷன் என்பது இன்றைய தமிழ்ப்படம் கிடையாது. அது அமுதனின் தமிழ்ப்படம். கமர்ஷியல் படத்தில் ஹீரோ வில்லனை அடிக்க வேண்டும் என்றால் போலீஸ் ஆனால் தான் தைரியம் வரும் என்பதெல்லாம் லாஜிக்கே இல்லாத லாஜிக்.

லிங்குசாமியின் மிகப்பெரிய வெற்றியடைந்த ரன், சண்டக்கோழி போன்ற அதே மாஸ் பட ஃபார்முலாவில் தான் உருவாகியிருக்கிறது `தி வாரியர்’. முன்பு குறிப்பிட்ட படங்களில் சண்டைக் காட்சிகள் தவிர்த்து மற்ற காட்சிகளில் ஒரு இயல்பான தன்மையை உணர முடியும். உதாரணமாக, ரன் படத்தில் ரகுவரனுக்கும் மாதவனுக்கும் இடையேயான முரண், சண்டக்கோழியில் நண்பனின் வீட்டுக்கு செல்லும் ஹீரோ அந்த குடும்பத்திற்குள் ஒருவனாக மாறுவது போல சிலவற்றை சொல்ல முடியும். இது போன்ற காட்சிகளுக்கும் மையக் கதைக்கும் நேரடியாக சம்பந்தம் இருக்காது, ஆனால் அந்தப் படங்களை நாம் ரசித்துப் பார்ப்பதற்கு இப்படியான காட்சிகள் கூடுதல் உதவியாக இருக்கும். அது போன்ற விஷயங்கள் வாரியரின் சுத்தமாக மிஸ்ஸிங்.

வாரியர் படத்தில் கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆர்.ஜே பாத்திரம், ஹீரோ துவண்டு போகும் போது “என் மகன் பிறக்கும் போது கூட அழல, ஏன்னா அவன் அடுத்தவங்க கண்ணீர துடைக்கப் பிறந்தவன்” என பேசும் அம்மா, இவனோட கோபம் வேற மாதிரி இருக்குமா என திடீரென பில்டப் வசனம் பேசும் கதாபாத்திரம் என படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களும் மிக சுமாரான கமர்ஷியல் படங்களில் வருவது போல் உருவாக்கியிருப்பது பெரிய குறை. ஒரு கமர்ஷியல் படத்துக்குத் தேவையான அத்தனை வாய்ப்புகளும் இருந்தும் கோட்டை விட்டிருக்கிறார்கள். நல்ல ரைட்டிங் இருந்திருந்தால் நல்ல மாஸ் எண்டர்டெய்னர் படமாக வந்திருக்கும் இந்த வாரியர்.

படத்தில் ஒரு வசனம் வரும். ”சத்யா கையால குரு சாகறான? இல்ல குரு கையால சத்யா சாகறானா?”னு பாப்போம் என. ஆனால் ரெண்டு பேர் கையாலும் ஆடியன்ஸ்தான்... அடுத்த படத்தில் குறைகளை சரி செய்து தரமான பொழுதுபோக்கு படத்தை லிங்குசாமி அளிப்பார் என நம்புவோம்.

- ஜான்சன்