ஒரு சிறுவனின் கோடை விடுமுறையில் என்ன எல்லாம் நிகழ்கிறது, அதன் விளைவுகள் என்ன என்பதே `குரங்கு பெடல்’.
80களில் கத்தேரி என்ற ஊரில் நிகழ்கிறது கதை. ஐந்தாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வுகளை முடித்துவிட்டு, கோடை விடுமுறையை முழுக்க கொண்டாட வேண்டும் எனத் திட்டமிடுகிறார்கள் மாரியப்பனும் (சந்தோஷ்) அவனது மூன்று நண்பர்களும். கோடையை குதூகலமாக கழிக்கும் நால்வரும் ஒரு கட்டத்தில், விடுமுறை முடியும் முன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என முடிவு செய்கிறார்கள். சிரமப்பட்டு காசு சேர்த்து வாடகை சைக்கிளில் பயிற்சிகளை மேற்கொள்ளுகிறார்கள். இறுதியில் மாரியப்பன் தான் நினைத்தது நினைத்தது போல சைக்கிள் ஓட்டி கற்றுக் கொள்கிறான். ஆனால் அதனால் ஒரு பிரச்சனையில் சிக்குகிறான். அந்தப் பிரச்சனை காரணமாக அவனது தந்தை கந்தசாமி (காளி வெங்கட்) கடும் கோபம் கொள்கிறார். மாரி பிரச்சனையில் இருந்து தப்பினானா? அவனது தந்தையின் கோபம் என்ன ஆகிறது என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.
`மதுபானகடை’ என்ற அற்புதமான படம் மூலம் அறிமுகமானவர் கமலக்கண்ணன். இம்முறை ராசி அழகப்பன் எழுதிய `சைக்கிள்’ சிறுகதையை திரைப்படமாக மாற்றியிருக்கிறார். நம் குழந்தைப் பருவ நினைவுகளை ஒரு பாடலின் மூலம் தூண்டுவதில் துவங்குகிறது படம். சேமியா ஐஸ், நுங்கு வண்டி, தொட்டாசிணுங்கி, புளியம்பழம் எனப் பலதும் அதில் வருகிறது. முக்கியமாக குரங்குப் பெடலடித்து சைக்கிள் பழகும் சிறுவர்கள் வருகிறார்கள். மற்ற எல்லாவற்றையும் விட, குரங்கு பெடல் தான் அதில் கூடுதல் ஸ்பெஷல். காரணம் இப்போது அப்படி சைக்கிள் பழகுவது மிகக்குறைவு, அதற்கு அவசியமற்ற சூழலும் உருவாகிவிட்டது. எனவே அதுதான் நமக்கும் படத்துக்குமான ஒற்றை நெருக்கம். படத்தின் மூன்று விதமான பிரச்சனைகள். ஒன்று தன் அப்பாவை ஓரே கிண்டல் செய்வதை தாங்க முடியாத, அதே சமயம் அப்பா ஒரு சூதாடியாக இருக்கிறாரே என கவலைப்படும் மகன், இன்னொன்று தன் பேச்சைக் கேட்காத, காசை திருடுகிற மகன் தவறான வழியில் சென்றுவிடுவானோ என பதறும் தந்தை, மூன்றாவது ஒரு பண வசதி படைத்த சிறுவனுக்கும் - மாரியப்பன் நண்பர்களுக்கும் இடையே நடக்கும் உரசல். இம்மூன்றும் எப்படி தீர்கிறது என்பதாக கதை நகர்கிறது. அவை ஓரளவு படத்தை சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறது.
நடிகர்களின் பர்ஃபாமென்ஸ் பொறுத்தவரை தந்தையாக நடித்திருக்கும் காளிவெங்கட் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மிகச் சரியாக செய்திருக்கிறார். மகனை கண்டிப்புடன் நடத்துவது, அவனின் போக்கை கண்டு கோபப்படுவது என நிறைவு. சிறுவர்கள் குழுவில் மாரியப்பன் கதாப்பாத்திரமாக நடித்துள்ள சந்தோஷ் பல உணர்வுகளை அழகாக கடத்துகிறார். ஜென்சன் - பிரசன்னாவின் காம்போவில் வரும் காமெடிகள் பல இடங்களில் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக ஜென்சன் குடித்துவிட்டு செய்யும் அலப்பறைகளும், அதற்கு கடுப்பாகும் பிரசன்னாவும் என ரகளையான காமெடி.
படத்தின் பிரச்சனையாகப்படுவது, படம் முழுக்க எட்டிப்பார்க்கும் செயற்கைத்தனம். குழந்தை நட்சத்திரங்கள் அனைவரும் நன்றாக நடிக்க முயன்றாலும், அவர்களின் உரையாடல், காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும் விதம் என எதிலும் ஒரு இயல்புத்தன்மை இல்லை. இடைவேளைக்கு முன்பான படத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் “மேயிரமாட்ட நக்குற மாடு கெடுத்துச்சாம்”, “அறுக்கமாட்டாதவன் இடுப்புல 52 அருவாளாம்” என வலிந்து திணித்து சொலவடைகள் பேசுவது அயற்சியை தருகிறது. சொல்லப்போனால் இடைவேளைக்குப் பிறகே படத்தின் கதையே துவங்குகிறது. ஆனால் அந்தக் கதையும் இலக்கற்று கண்டபடி அலைகிறது. இக்கதை ஒரு மகனிடம் ஆரம்பித்து தந்தையிடம் முடிகிறது. ஆனால் அதற்கு இடையில் சொல்லப்படும் எந்த நிகழ்வும் சுவாரஸ்யமாக இல்லை. கூடவே பார்வையாளர்களுக்கு கனெக்ட் ஆகும் படியாக எந்தக் காட்சியும் இல்லாததால், உணர்வு ரீதியாக எந்த பாதிப்பும் நமக்குள் ஏற்படுத்தாமல் படம் நகர்கிறது. எல்லா உணர்வுகளையும் வசனங்கள் மூலம் மட்டுமே கடத்த முயன்றிருப்பது இன்னொரு மைனஸ். இதற்கு உதாரணமாக இரு விஷயங்களை சொல்லலாம். ஒன்று ஆசிரியர் ஒருவர் பள்ளியில் கண்டிப்புடனும், வீட்டில் கனிவுடனும் மாணவர்களிடம் நடந்து கொள்கிறார் என்பதை வலிந்து இரு காட்சிகளாக எடுத்து, அதை வசனம் மூலமாக கடத்த முயல்கிறார்கள். அதுவே கந்தசாமி ஏன் சைக்கிள் ஓட்ட பயப்படுகிறார் என்பதற்கான கதையை, பொம்மலாட்டம் மூலமாக சொல்வது நல்ல ஐடியாவாக இருந்தாலும், எவ்வித அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், மற்றுமொறு காட்சியாக கடந்து செல்கிறது.
குழந்தைகள் பார்க்கும் படமாக இருக்க வேண்டும் என்பதற்காக வன்முறையோ, ஆபாசமோ அல்லாமல் படத்தை எடுத்திருப்பது பாராட்டுக்குறியது. சைக்கிள் பந்தையத்தின் இறுதியில் அன்பும், நட்பும் முக்கியம் என சொல்லாமல் சொல்வதும் சிறப்பு. ஆனால் அதை இன்னும் தெளிவான விதத்திலும், அழுத்தமாகவும் சொல்லியிருந்தால், மறக்கமுடியாத அனுபவமாக இருந்திருக்கும். குடும்பத்துடன் ஒரு படம் பார்க்க நினைத்தால் குரங்கு பெடல் ஓக்கே, ஆனால் சுவாரஸ்யமான படம் வேண்டும் என்றால், அதை இப்படம் வழங்குமா என்பது கேள்விக்குறியே.