ஒரு கொலை, அதை செய்தது யார் என்ற Whodunit murder mystery தான் `கொலை’ படத்தின் ஒன்லைன்
மிகப்பிரபலமான மாடல் மற்றும் பாடகி லைலா (மீனாட்சி சௌத்ரி), அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுகிடக்கிறார். ஒரு கொள்ளை நடந்தது போன்ற அடையாளங்களுடன் கலைந்து கிடக்கிறது வீடு. ஆனால், வீட்டில் யாரும் நுழைந்ததற்கான தடயம் இல்லை. இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி சந்தியா (ரித்திகா சிங்) கொலையாளியைக் கண்டுபிடிக்க டிடெக்டிவ் விநாயக் (விஜய் ஆண்டனி) உதவியை நாடுகிறார். முதலில் தவிர்ப்பவர் பின்பு சம்மதிக்கிறார். வீட்டில் தடயம் எதுவும் இல்லை என்றாலும், பலர் மேல் சந்தேகம் எழுகிறது. லைலாவின் Boyfriend, Photographer, Manager, Modeling Agent எனப் பலரும் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள். டிடெக்டிவ் விநாயக் கொலையாளியை கண்டுபிடித்தாரா? லைலாவின் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் என்ன? கூடவே விநாயக்கின் வாழ்வில் இருக்கும் சிக்கல் என்ன என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.
இயக்குநர் பாலாஜி குமார் தனது முதல் படமான `விடியும் முன்’ படம் போலவே இந்த `கொலை’ படத்தையும் ஸ்டைலிஷாக எடுத்திருக்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரை Murder Mystery கதைகள் இருவிதமாக கையாளப்படுகிறது. ஒன்று Murder on the Orient Express, Death on the Nile, Knives Out, Glass Onion போன்ற ஹாலிவுட் படங்களைப் போல் எடுப்பது. இன்னொன்று விலங்கு, வதந்தி என கதைக் களத்தை கொஞ்சம் Rootedடாக எடுப்பது. இதில் ஹாலிவுட் படம் போன்ற பாணியில் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி குமார். ஒரு கதையை எப்படி சொல்வது என்பது இயக்குநரின் விருப்பம் தான். அதே சமயம் அது சுவாரஸ்யமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.
படத்தில் பாசிடிவான விஷயங்கள் என்றால் இதைச் சொல்லலாம். இந்தக் கொலையை செய்தது யார்? எதற்காக? எப்படி? இந்தக் கேள்விகள் தான் படத்துடன் ஒன்ற செய்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இரண்டு விஷயங்கள் சிறப்பாக இருந்தது. ஒன்று சிவக்குமார் விஜயனின் ஒளிப்பதிவு. துவக்கக் காட்சியில் ஒரு தெருவை காட்சி படத்துவதில் துவங்கி, பல டச் ஆங்கிள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது தரமாக இருந்தது. இன்னொன்று கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் ஜாஸ் பின்னணி இசை. அது படத்தின் த்ரில் மோடுக்கு உதவுகிறது. கூடவே பார்த்த ஞாபகம் இல்லையோ பாடல் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டிருந்த விதமும் சிறப்பு.
இந்த விஷயங்கள் ஒருபுறம். ஆனால் படத்தில் என்ன குறைகிறது என்றால் Why? and How?. இது பாலாஜி குமார் உருவாக்கியிருக்கும் உலகத்தில் நிகழ்கிறது. சென்னையில் தான் நடக்கிறது என்றாலும், மெட்ராஸ் என்று படத்தில் குறிப்பிடப்படுகிறது. அதில் வரும் காவலர்கள் மெட்ராஸ் போலீஸ் ஃபோர்ஸ் என அழைக்கப்படுகிறார்கள். அதில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் அது இந்தக் கதைக்கு ஏன் தேவை? இது நார்மலான சென்னையில் நடந்தாலும் இதேதான் நடக்கப் போகிறது. வெறும் செட்டும், க்ரீன் மேட்டும் போட்டு வேற்று கிரகத்தில் நடப்பது போல காட்சிபடுத்தப்பட்டிருப்பது உறுத்தலாக இருக்கிறது. இது போன்ற கதையில் ஒவ்வொரு க்ளூவும் கண்டுபிடிக்கப்படும் போது, பார்வையாளர்களுக்கு ஒரு ஆச்சரியம் வரும், ஆனால் இதில் எந்த க்ளூவும் பார்வையாளர்களுக்கு ஆச்சரியம் தராமல் கடந்து போகிறது.
நடிப்பு சார்ந்து பார்த்தால் முதன்மை கதாபாத்திரமான விஜய் ஆண்டனியின் நடிப்பு அவ்வளவு அழுத்தமாக இல்லை. ரித்திகா சிங், முரளி ஷர்மா, அர்ஜூன் சிதம்பரம் என துணை கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய முயன்றிருக்கிறார்கள். லைலா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மீனாட்சியின் நடிப்பு சிறப்பு.
இந்த வழக்கை விநாயக் ஏற்றுக் கொள்வதற்கு காரணம் சொல்லப்பட்டாலும், அது அத்தனை வலுவாக இல்லை. மேலும் அவரின் பர்சனல் வாழ்க்கையில் இருக்கும் குற்றவுணர்ச்சி சார்ந்த காட்சிகள் நீக்கப்பட்டு, வெறுமனே இந்த வழக்கை விசாரிக்கும் ஒரு டிடெக்டிவ் எனக் கொண்டு வந்திருந்தாலும் மையக் கதையில் எந்த மாற்றமும் வந்திருக்காது. நட்சத்திரம், நிலா, சூரியனை எல்லாம் மிக முக்கியமானது போல் காட்டப்படுகிறது. ஆனால் அவை இந்தக் கதையில் எப்படி சம்பந்தப்படுகிறது என்ற தெளிவு இல்லை. கொலைக்கான காரணமும் அத்தனை அழுத்தமாக இல்லை. ஒருகட்டத்தில், படத்தின் துவக்கத்தில் கொலையாளி யார் எனத் தெரிந்து கொள்வதில் இருந்த ஆர்வம் சுத்தமாக நீர்த்துப் போகிறது.
மொத்தத்தில் Agatha Christy டைப்பில் ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதை சொல்ல நினைத்து, மிகவும் வழக்கமான ஒரு க்ரைம் த்ரில்லராக நிறைவடைகிறது. கண்டிப்பாக போரடிக்கும் படம் இல்லை, என்றாலும் படத்தில் புதிதாக ஒன்றும் இல்லை என்பதுதான் பிரச்சனை. இன்னும் சிறப்பான எழுத்து இருந்திருந்தால் கவனிக்கப்பட்டிருக்கும்.