இரண்டு விளம்பர ஏஜென்சிகளுக்குள் நடக்கும் போட்டி என நாமாக இந்த கிக் படத்துக்கு ஒரு ஒன்லைன் வைத்துக்கொண்டால் தான் உண்டு.
விளம்பர ஏஜென்சி ஒன்றில் வேலை பார்க்கிறார் சந்தோஷ் என்கிற சந்தானம். விளம்பர ஆர்டர்கள் வாங்க எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்லுமளவுக்கு மோசமான ஒரு நபர் சந்தோஷ். இன்னொரு பக்கம் நீதி, நேர்மை , நியாயம் என மனோபாலாவின் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார் டான்யா ஹோப். கார் விளம்பரம் ஒன்றிற்காக அதன் மார்க்கெட்டிங் ஹெட் செந்திலுக்கு 'ஐட்டம் டான்ஸ்' பாடல் ஒன்றை தயார் செய்கிறார் சந்தானம். பிறகு, அந்தப் பாடலுக்கு ஆடிய பெண் சண்டைக்கு வர அவரை வைத்தே போலியாக விளம்பரங்கள் தயாரிக்கிறார். பிறகு அதில் சில பிரச்னைகள் என see more.. நிறுத்திக்குவோம்.
படத்தில் ஏகப்பட்ட பிரச்னைகள். ஒன்றா இரண்டா சோதனை எல்லாம் சொல்லவே ஒரு விமர்சனம் போதுமா என நம்மிட இரண்டு மணி நேரத்தை இரவல் பெற்று சோதித்து சாதித்திருக்கிறார் இயக்குநர் பிரசாந்த் ராஜ். கோபம் வர்றாப்ல காமெடி செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலரைப் படத்தில் போட்டிருக்கிறார். டான்யா ஹோப் பக்கம் , மனோபாலாவின் தங்கையாக கோவை சரளா. அவரும் ரீல்ஸ் எடுக்கிறேன் என ஒரு பக்கம் வித்தியாச வித்தியாச மாடுலேசனில் பேசி நம்மை சோதிக்கிறார். இது போதாது என நினைத்தவர் சந்தானம் டீமில் தம்பி ராமையாவை சேர்த்திருக்கிறார். சந்தானம் ஜாலியாக கவுண்ட்டர் வசனங்கள் பேசவே ஒரு குழுவை வைத்திருப்பார். லொள்ளு சபா மாறன், மனோகர், சுவாமிநாதன், மொட்டை ராஜேந்திரன், ஈஸ்ட் என ஏகப்பட்ட நடிகர்கள் அதில் அடக்கம். ஆனால், இவர்கள் எல்லாம் வந்தால் நாம் ஒருவேளை சிரித்துவிடுவோம். அப்படி சிரித்துவிட்டால் சாமி குத்தம் ஆகிவிடுமே என்பதற்காக தம்பி ராமையாவை மட்டும் களத்தில் இறக்கியிருக்கிறார். டிரெய்லரில் பார்க்கும் போது, 5 ஸ்டார் ஹோட்டலில் வேலை செய்யும் நபர் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர் மைக்கேல் ஜாக்சனின் ரசிகராம். அதனால் அவர் பெயர் MJவாம். இதோடாவது நிறுத்தியிருக்கலாம். மைக்கேல் ஜாக்சன் ஸ்டெப் வேறு படத்தில் போடுவார். தம்பி ராமையாவின் தந்தையாக YG மகேந்திரன். அந்த விளம்பர கம்பெனி சந்தானத்திற்கு எப்படி வந்தது என்பதற்காக ஒரு கடுப்பை ஏற்றும் பிளாஷ்பேக். அதெப்படி தமிழ் சினிமாவின் ஆதி காலம் தொட்டு யார் எல்லாம் ஜோக் அடித்தால் சிரிப்பு வராதோ, அவர்களை எல்லாம் ஒரே படத்தில் இணைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.
வெளிநாட்டில் ஒரு ஷெட்யூல் அதற்கென சில நடிகர்கள். உள்நாட்டில் ஒரு ஷெட்யூல் அதற்கென சில நடிகர்கள். கதை?? அது கெடக்குது. தம்பி ராமையாவிற்கு வயதாகிவிட்டது , ஆனாலும் இன்னும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கவில்லை. டான்யா ஹோப்பிற்கு சந்தோஷ் யார் என்றே தெரியாது என்பதால், சந்தானம் வேறு பெயரில் சுற்றிக்கொள்ளலாம் என தமிழ் சினிமாவின் க்ளேஷேக்களில் சிலவற்றைத் தூவினால் போதாதா என்ன நினைத்திருக்கிறார். இதோடு பிரம்மானந்தம், அடல்ட் மாத்திரை, அதை வைத்து சில பல காமெடி என நினைத்து சிலவற்றைக் கிண்டியது ஒரு வழியாக சுபம் போடும் போது, நமக்கு உண்மையாகவே அப்பாடா என இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் ஒரு படத்தில் சுபம் என முடித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒருவழியாய் படத்தை முடித்துவிட்டோம் என்பதற்காகவே சுபம் என போட்டிருக்கிறார்கள் போலும்.
படத்தின் ஒரே ஆறுதல் அர்ஜுன் ஜன்யாவின் இசை. பின்னணி இசை பெப்பியாகவே இருக்கிறது.
' எதுக்கு வாழ்றோம்னு தெரியாமக்கூட வாழலாம் . ஆனா எதுக்கு குடிக்கறோம்னு தெரியாம குடிக்கக்கூடாது' என படத்தில் சந்தானம் ஒரு வாழ்க்கைத் தத்துவம் சொல்கிறார். நமக்கும் அதுதான் கிக் பார்த்ததும் தோன்றுகிறது. எதுக்கு எடுக்கறோம்னே தெரியாம ஒரு படத்தை எப்படிங்க எடுக்க முடியுது.
சில தினங்களுக்கு முன்னர், சந்தானம் ஒரு பிரெஸ் மீட்டில் DD RETURNS படத்திற்குப் பிறகு எல்லாமே நல்ல படங்களாகத்தான் இருக்கும். இரண்டு படங்கள் மட்டும் முன்னரே கமிட்டாகிவிட்டேன் என நாசுக்காக ஒரு பதில் சொல்லியிருந்தார். சந்தானம், இத மட்டும் சொல்லுங்க. நீங்க சொன்ன ரெண்டு படத்துல ஒரு படம் KICK, இன்னொரு படம் என்ன..?