முத்தையா படங்களின் கதையின் அடிப்படையை எளிமையாக சொல்லிவிடலாம், படத்தின் க்ளைமாக்ஸில் முதன்மைக் கதாபாத்திரம், தனது எதிரிகளை கொடூரமான முறையில் கொலை செய்யும். அந்தக் கொலைகள் எதற்காக செய்யப்பட்டன என்பதுதான் படத்தின் கதை. அதுவே தான் அவரின் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் `காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் கதையும்.
நடுவபட்டியில் வாழும் தமிழ்செல்வி (சித்தி இத்னானி) நூறு ஏக்கர், ஆறு வீடு என பல சொத்துக்களைக் கொண்டவர். இவரின் சொத்துக்களை கைபற்ற வேண்டும் என ஊரில் இரண்டு குடும்பங்கள் திட்டமிடுகின்றன. அந்த இரண்டு குடும்பங்களும் தமிழ்செல்விக்கு உறவினர்கள் தான். மேலும் அவர்கள் போடும் திட்டமும் ஒரே மாதிரியான திட்டம் தான். தங்கள் குடும்பத்து பையனுக்கு தமிழ்செல்வியை திருமணம் செய்து வைத்து சொத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அது. எனவே அந்த இரண்டு குடும்பமும் வெவ்வேறு வகையில் தமிழ்செல்வியை திருமணத்திற்கு நிர்பந்திக்கிறது, கூடவே வேறு யாராவது தமிழ்செல்வியை திருமணம் செய்ய வந்தால் , அவர்களை மிரட்டி ஓடவிடுகிறது. இந்த சூழலில் மதுரை ஜெயிலில் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் (ஆர்யா) என்பவரை சந்திக்க செல்கிறார் தமிழ்செல்வி. காதரை சந்திக்க தமிழ் ஏன் செல்கிறார்? காதருக்கும் தமிழ் செல்விக்கும் என்ன சம்பந்தம்? காதபாட்சாவின், மாணிக் பாட்சா ஃப்ளாஷ்பேக் என்ன? என்பதெல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.
பாலிவுட்டில் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்கும் படங்களுக்கு செல்லமாக விமர்சகர்கள் வைத்த பெயர் தி ஆயுஷ்மான் குரானா ஜானர். அதே போல் தமிழில் முத்தையா படங்களுக்கு `தி முத்தையா ஜானர்’ அல்லது ‘முத்தையா யுனிவர்ஸ்’ எனப் பெயர் வைத்துவிடலாம். முத்தையா தயார் செய்யும் கதைகளில் எந்த ஹீரோவாலும் பொருந்திப் போக முடிகிறது, அவரும் சுலபமாக அவரின் டெம்ப்ளேட் படத்தை எடுத்துவிடுகிறார். ஆனால் அவரின் ஒவ்வொரு படத்திலும் எனக்கு ஆச்சர்யமாகப்படுவது, குடும்பங்களை மையப்படுத்தி வைக்கும் காட்சிகளும், அவற்றை எமோஷனலாக எடுத்துவிடுவதும் தான்.
முத்தையாவின் படங்கள் அதன் கதையோட்டத்தில் இரண்டு விதமான பிரச்னைகளை கொண்டு நகரும். ஒன்று முதன்மைக் கதாபாத்திரத்தின் குடும்பத்துக்குள் இருக்கும் சிக்கல், இரண்டாவது முதன்மைக் கதாபாத்திரத்திற்கு வில்லன்கள் மூலமாக வரும் சிக்கல். இந்த இரண்டும் தீரும் போது சுபம் போட்டு படத்தை முடிப்பார். இந்த வித்தை அவருக்கு கை கொடுத்தது கொம்பன் படத்தில் மட்டும் தான். காதர்பாட்சா படத்திலும் சில எமோஷனல் காட்சிகள் நன்றாக வந்திருக்கிறது. காதரின் குடும்பம் பற்றிய கதை, தமிழ்செல்விக்கும் அவரது அண்ணன் மகள்களுக்கும் இடையேயான பிணைப்பு இவற்றை உதாரணமாக சொல்லலாம். அதனால் அது மட்டும் முழு படத்தையும் சுவாரஸ்யமாக்கிவிடாதல்லவா.
நடிப்பு பொருத்தவரை ஆர்யா கிராமத்தி ஆளாக தோற்றத்தில் தெரிந்தாலும், வசனம் பேசும் போது அவருக்குள் இருக்கும் சிட்டி பையன் வெளியே வந்துவிடுகிறார். சண்டைக் காட்சிகளில் மட்டும் எனெர்ஜிட்டாகத் தெரிகிறார். சித்தி இத்னானி லிப் சிங்கை சமாளிக்க அவரது முகத்தை எவ்வளவு தவிர்க்க முடியுமோ அவ்வளவு தவிர்த்திருக்கிறார்கள். பிரபு தான் ஏற்ற கதாபாத்திரத்திற்கான நியாயத்தை செய்திருக்கிறார். வில்லன்கள் என ஒரு டஜன் ஆட்கள் இருக்கிறார்கள், எல்லோரும் மிக வழக்கமான முத்தையா யுனிவர்ஸ் வில்லன்கள். அதற்கு தகுந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
காதர்பாட்சா படத்தின் பெரிய குறையே Convenient Writing மற்றும் காட்சிக்கு காட்சி நடக்கும் Co Incident. கதையில் ஒரு இயல்புத் தன்மையே இல்லை என்பதால் படமும் நம்பும்படியாக இல்லை. படத்தில் நீண்ட நெடிய சண்டைக் காட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சண்டைக்கும் இன்னொரு சண்டைக்கும் இடையே கேப் இருக்கிறதே, அதை நிரப்ப வேண்டும் என்ற கட்டாயத்துக்காக மட்டும் கதையையும், காட்சிகளையும் எழுதியிருப்பது போல இருந்தது. மேலும் இந்த ஒரு கதைக்குள் பல கிளைக் கதைகள் நாம் அயற்சியாகும் அளவுக்கு சொல்லப்படுவது மிகப்பெரிய சோர்வைத் தருகிறது. படத்தின் வசனங்கள் வெறுமனே எதுகை மோனைக்காக எழுதப்பட்டிருப்பதால் நகைப்புக்குரியதாக இருக்கிறது. உதாரணமாக,
1. ”என்னோட பேர் கனி இல்ல, ஜின்னா” “ஜின்னா ஜின்னான்னு சொல்லி மண்ணா போயிடாத, ஒன்னா இருக்கணும்னு நெனை”
2. “சேர்ந்து நின்னாதான் வாய்ப்பு வரும், ரெண்டு கைய தட்டுனா தான் சத்தம் வரும்”
இதுபோல படம் முழுக்க ஏகப்பட்ட வசனங்கள். 'ஐயா நாங்க சொடக்கு போட்டுக்கூட சத்தத்த வர வச்சிக்கறோம். ஆள விடுங்க' என சில சமயங்களில் தோன்ற வைத்துவிடுகிறார். மேலும் முத்தையா படங்களில் உள்ள சில பிற்போக்குத் தன கருத்துக்களுக்காக தொடர்ந்து விமர்சிக்கப்படுபவர். காதர்பாட்சாவிலும் கூட `நாடகக் காதல்’ என்ற விஷயத்தை சத்தமில்லாமல் ஊசி ஏற்றுவது போல படத்துக்கு இடையில் செறுகியிருக்கிறார். இது போன்ற கருத்துகள் சரிதானா என்று, உங்களை நீங்களே கேட்டு சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள் டைரக்டர் சார். தொழிநுட்ப ரீதியாக வேல்ராஜ் படத்திற்கு பெரிய பலம். விஷுவலாக பல காட்சிகளில் கிராமத்து களத்தை, ஸ்டைலிஷாக காட்ட உழைத்திருக்கிறார். ஆனால் இசை பொருத்தவரை ஜி.வி. படத்தை கைவிட்டிருக்கிறார். படத்தின் பாடல்களோ, பின்னணி இசையோ குறிப்பிட்டு பாராட்டும்படி இல்லை.
மொத்தத்தில் முத்தையா எடுக்கும் படங்களை ரசித்துப் பார்ப்பவர் நீங்கள் என்றால் கண்டிப்பாக காதர்பாட்சா உங்களை ஏமாற்றாது. மற்றவர்கள் படத்தை உங்களது சொந்த ரிஸ்க்கில் பார்க்கவும்.