SUrya Bobby deol KANguva
திரை விமர்சனம்

KANGUVA REVIEW | 2.5 ஆண்டுக்கு பிறகு சூர்யா படம்... எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறதா கங்குவா..?

கங்குவா என்னும் குழந்தை , ராயன் பட அபர்ணா பாலமுரளி போல, ' இந்தக் குழந்தை எங்களுக்கு வேண்டாம் ' என திருப்பிக் கொடுக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது.

karthi Kg

முன் குறிப்பு : நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கும் திரையரங்கில் படத்தைப் பார்க்கப் போகிறீர்கள் என்றால், noise cancellation வசதி இருக்கும் ஹெட்செட்டுடன் படத்துக்கு செல்வது நல்லது. காதுநலன் கருதி வெளியிடுவோர் உங்கள் நான்..!


சூர்யாவுக்கும் ஒரு சிறுவனுக்குமான பிணைப்பை கடந்த காலம் , நிகழ் காலம் என இரண்டும் டைம்லைனில் சொல்லும் கதையே இந்த கங்குவா.

நிகழ்காலத்தில் ஃபிரான்சிஸ் (சூர்யா) ஒரு பவுன்டி ஹன்டர். போலீஸால் கூட பிடிக்க முடியாத ரவுடிகளை பிடித்துவந்து போலீஸிடம் ஒப்படைத்து காசு வாங்குவதே இவரின் வேலை. பவுன்டி ஹன்டர் சூர்யாவின் போட்டியாளர் திஷா பட்டானி. சூர்யா, யோகிபாபு, திஷா பட்டானி, ரெடிங் கிங்க்ஸ்லி, கோவை சரளா, கே எஸ் ரவிகுமார் என முதல் இருபது நிமிடங்கள் இவர்களுக்கானது. சூர்யாவின் ஒரு மிஷனில் ஒரு சிறுவன் சூர்யாவிடம் வந்து சேர்கிறான். இந்த சிறுவன் வழி ஆயிரம் ஆண்டு பழங்கதை ஒன்று நம் கண் முன்னர் விரிகிறது.



கங்கா என்கிற கங்குவா பெருமாச்சி இனத்தின் இளவரசன். பெருமாச்சி இனத்தின் நிலத்தை ரொமானியர்கள் ஆள வருகிறார்கள். அதே சமயம், பெருமாச்சி இனத்துக்கும் உதிரனின் இனத்துக்கும் பன்னெடும் காலமாக முட்டிக்கொண்டு நிற்கிறது. முதல் முயற்சி தோல்வியில் முடிய, உதிரனுடன் கை கோக்கிறது ரொமானிய படை. பெருமாச்சி இன கங்குவாவுக்கும், நிகழ்கால ஃபிரான்சிஸிற்கும் இரண்டு டைம்லனில் இருக்கும் சிறுவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதே கங்குவா படத்தின் மீதிக்கதை.

கமர்ஷியல் சினிமாவுக்குள் கடந்த காலம் , நிகழ்காலம், பூர்வ ஜென்மம், மறு ஜென்மம் போன்ற விஷயங்களை பிசைந்து மசாலாவாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் சிவா. மக்களின் ஆடைகள், சண்டைக் காட்சிகள் போன்றவற்றில் அதற்கான மெனக்கெடலும் தெரிகிறது. ஆனால், அதுமட்டுமே ஒரு கமர்ஷியல் படத்துக்கு போதாது என்பதில் ஆரம்பிக்கிறது சிக்கல். நம்மைப்போலவே சிவாவும் சிறுவயதில் கோவை சரளாவின் காமெடிக் காட்சிகளை எல்லாம் பார்த்து வளர்ந்திருப்பார் போல. ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, கோவை சரளா இவர்களை எல்லாம் வைத்தாலே காமெடி என நினைத்துக்கொள்கிறார். அதைவிடக்கொடுமை வித்தியாசமாக தமிழ்ப் பேசுவதை காமெடி என இன்னும் நினைத்துக்கொண்டிருப்பது தான். கோவாவில் இருந்தால் எதற்கு இப்படி தமிழ் பேச வேண்டும் என தெரியவில்லை. ஈஸ்ட்மென் கலர் படங்களோடு புதைந்துவிட்ட காமெடி காட்சிகளை எல்லாம் தோண்டியெடுத்து முதல் 25 நிமிடங்களை ஒப்பேற்றியிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போல் எதை எதையோ ஒட்டி வைத்திருக்கிறார் சிவா. கொல கடுப்பு சாரே அதெல்லாம்.

படத்தின் மெயின் பிக்சரே பீரியட் பிலிம் என்பதால், அதாவது சிறப்பாக இருக்குமா என்றால் ம்ஹூம். எல்லோருமே கத்திக்கொண்டேயிருக்கிறார்கள். கலைராணி ஆரம்பித்து வைக்கும் இந்த கத்தல் வைபவத்தை அடுத்தடுத்து வரும் கதாபாத்திரங்களும் சிறப்பாக செய்கிறார்கள். இரண்டு டைம்லைனிலும் சிறப்பாக இருக்கும் ஒரே விஷயம் சத்தம் தான். ரெடின் கிங்ஸ்லி தொடங்கி பாபி தியோல் வரை தொண்டை கிழிய கத்துகிறார்கள். ' அப்புறம் நான் எதுக்கு இருக்கிறேன் ' என்பதாக THIS IS DSPயும் இணைந்துகொள்கிறார். ஸ்டேடியத்தில் தோனி இறங்கும் போது டெசிபல் மீட்டரை வைத்து வீடியோ போடுவார்களே, அந்த கருவிகளை எடுத்துக்கொண்டு இந்த படத்திலும் செக் செய்யலாம். சண்டைக் காட்சிகள், மக்கள் கூக்குரல் என எங்கும் எதிலும் சத்தம்.

சாம்பல் மேடுகளும், புகை மண்டலங்களும் என்பதாக கங்குவாவின் குழு இருக்கும் இடமே மண்ணுக்குள் இருப்பது போலத்தான் இருக்கிறது. MADMAX பாதிப்பில் படம் எடுப்பதெல்லாம் ஓக்கே தான். ஆனால், யார் என்ன கதாபாத்திரம் என்பதைக் கண்டுபிடிக்கும் அளவுக்காவது முகங்கள் தெரிய வேண்டுமே.இந்தக் கூட்டத்திற்கும் ஒட்டுத்தாடிக்கும் இடையே தான் கருணாஸ், நட்டியை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டியதாய் இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கொஞ்சம் பெர்பாமன்ஸ் காட்டுவது போஸ் வெங்கட் மட்டும் தான். இவர்களை கண்டுபிடிப்பதே பெரும்பாடாய் இருக்கும் போது, இவர்களின் நடிப்புத்திறனை எல்லாம் எங்கு போய் கண்டுபிடிப்பது. அந்த மக்கள் பண்டைய தமிழில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சட்டென டாப் கியர் போட்டு , பேச்சுத் தமிழுக்கு மாறிவிடுகிறார்கள். படத்தின் ஒரே ஆறுதல் வெற்றியின் ஒளிப்பதிவு தான். சிறப்பாக வந்திருக்கிறது. 3D என்பது காட்சிகளின் டெப்த் எஃபெக்ட்டிற்காக செய்யப்படுவது என அந்த தொழில்நுட்பம் இப்போது மாறிவிட்டது. இன்னும் 'மை டியர் குட்டிச் சாத்தான்' லெவலில் ஜெம்ஸ் மிட்டாயை திரைக்கு வெளியே காட்டிக்கொண்டிருக்கிறார்கள். என்ன சொல்வதென தெரியவில்லை.

ஒரு திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் என்பது அந்த படத்தின் இறுதிக் காட்சி. ஆனால், இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் இரண்டாம் பாகம் என இயக்குநர்கள் அடிசனல் ஷீட் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். எதற்கென்றே இல்லாமல் நீளும் இந்த இரண்டாம் பாகக் கொடுமைகளுக்கு கங்குவாவும் விதிவிலக்கல்ல. அப்படி வைக்கப்பட்டிருக்கும் லீடும் சிறப்பாக இல்லை.

கங்குவா என்னும் குழந்தை , ராயன் பட அபர்ணா பாலமுரளி போல, ' இந்தக் குழந்தை எங்களுக்கு வேண்டாம் ' என திருப்பிக் கொடுக்கும் அளவுக்குத்தான் இருக்கிறது.