இரு கள்வர்களின் வாழ்வில் ஒரு பெண்ணும், முதியவரும் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதே கள்வன் படத்தின் ஒன்லைன்.
சத்தியமங்கலத்துக்கு அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் ஜி வி பிரகாஷும், தீனாவும் திருடார்களாக வேலை பார்த்துவருகிறார்கள். இதற்கு மேலும் ஊரில் திருட ஏதும் இல்லாத சூழலில், இந்த ஊருக்குச் சென்று திருடுங்கள் என ஐடியா கொடுக்கிறார் ஊர்த் தலைவர். அங்கு சரியாக அவர்கள் குதிக்கும் வீட்டில் கதையின் நாயகியான இவானா இருக்கிறார். எதிர்பார்த்ததுபோலவே இவானாவும், அவர் பாட்டியும் மட்டுமே இருக்கிறார்கள். எதிர்பார்த்தது போலவே, இருவரையும் வீட்டிலேயே சிறைப்பிடிக்கிறார் இவானா. அடுத்தடுத்து வழக்கம் போல காதல் வருகிறது. இவானாவை தன் வீட்டுக்கு கரம்பிடித்து அழைத்துவருவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், முதியோர் இல்லத்திலிருந்து பாரதிராஜாவை அழைத்துவருகிறார். பாரதிராஜாவை ஏன் அழைத்துவருகிறார் ஜிவிபி. அடுத்து என்ன நடக்கிறது என்பதை இரண்டு மணி நேரத்துக்கும் மேல் படமாக எடுத்திருக்கிறார்கள்.
எமோசன் காட்சிகளில் ஜிவி பிரகாஷின் நடிப்பு மெருகேறிக்கொண்டே இருக்கிறது. காடுகளில் அலைந்த்து திரியும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதைகளிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம் ப்ரோ. இயக்குநர்கள் எப்போதுமே மிகச்சிறப்பாக நடிப்பார்கள். இயக்குநர்கள் நடிகர்களாக அறிமுகமாகும் படங்களில் இதை நான் காண முடியும். பாரதிராஜா இதற்கு முன்பு பல படங்களில் அநாயசமாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் ஏனோ அது மிஸ்ஸிங். கொங்கு மண்டல படம் என்றாலே, குட்டி யானையில் நக்கலைட்ஸ் டீமை அள்ளிப் போட்டுக்கொண்டு போய்விடுகிறது கோலிவுட். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. பிரசன்னா, ஜென்சன், செல்லா, தனலட்சுமி, நிவேதிதா என ஒட்டுமொத்த டீமும் ஆஜர். எல்லோருக்கும் பாத்திரங்களை ஒதுக்கிவிட்டு, ஊர்த்தலைவர் மனைவி வேசத்துக்கு தனலட்சுமி அம்மாளை ஃபிக்ஸ் செய்திருப்பார்கள் போல. சுத்தமாக செட்டாகவில்லை.
படத்தின் பெரும் பிரச்னையே கதையும் திரைக்கதையும் தான். மனிதர்களின் வாழ்விடமும், காடுகளும் அருகருகே இருக்கும் இடங்களில் மிருகங்களால் மனிதர்களுக்கு நேரும் துயரம்; கள்வனின் காதலி; முதியோர்கள் மீது யாரேனும் கரிசனம் காட்டினால் கவனமாக இருத்தல் அவசியம்; சர்க்கஸ் கதை என பல கதைகளை ஒரே குண்டாவில் போட்டு குழப்பி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குநரான பி வி ஷங்கர். ஒளிப்பதிவும் அவர் தான். வெரி சாரி ப்ரோ. இரண்டாம் பாதியெல்லாம் ஜெயம் க்ளைமேக்ஸில் கோபி சந்த் நடப்பது போல் போய்க்கொண்டே இருக்கிறது. அதிலும் 'துள்ளுவதோ இளமை' தனுஷ் கெட்டப்பை எல்லாம் ஜிவி பிரகாஷுக்கு போட்டு, ஏன் பாஸ். எங்களை எல்லாம் பார்த்தால் பாவமாக இல்லையா. டெக்னிக்கலாகவும் படம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.
படம் இன்றுதான் வெளியாகிறது. அதற்கு ஒரு போஸ்டர் ரிலீஸ் செய்திருக்கிறார்கள் . அதைக் கொஞ்சம் பாருங்களேன். உண்மையிலேயே திரையரங்கிற்கு நம்மை அழைத்துவரும் யுக்தியாகத்தான் இந்த போஸ்டரை வெளியிட்டார்களா..?
கள்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில், " நாம யானைய வச்சு எடுத்தாலும் சரி, டைனோசர வச்சாலும் எடுத்தாலும் சரி. கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தால் தான் படம் ஓடும் " என மேடையிலேயே பேசினார் வெற்றிமாறன். படத்தைப் பார்த்துவிட்டுத்தான் இதைச் சொன்னாரா என யாம் அறியேன் பராபரமே.