'சிஸ்டம் சரியில்லாத' தேசத்தின் சிஸ்டத்தை சரி செய்ய ஒரு ஜெயிலர் எடுக்கும் அவதாரமே அட்லியின் ஜவான்.
மெட்ரோ ரயிலை ஹைஜேக் செய்கிறது ஒரு கும்பல். இந்த நாட்டின் நாசக்கேடுகளில் ஒரு பிரச்னையை மையப்படுத்தி நடத்தப்படுகிறது அந்த ஹைஜேக். இந்த கும்பலைப் பிடிக்க வருகிறார் அதிகாரி நயன்தாரா. யார் இந்த கும்பல், இந்த கும்பல் தலைவனையும், நயன்தாராவையும் இணைப்பது எது, இன்னொரு ஷாருக் யார் , இந்த தேசத்தின் அதிமுக்கிய பிரச்னை எது என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறது ஜவான்.
ஷாருக் கான் நிஜமாகவே wattey a man என சொல்லவைக்கிறார். ஸ்டண்ட் , டான்ஸ் என எல்லாமே அவ்வளவு எனெர்ஜி . ஷாருக்கின் காஸ்டியூம், மேக்கப் என எல்லாமே பட்டாஸ். நயன், பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, தீபிகா படுகோன்,சஞ்சய் தத், ஜேஃபர் என இந்திப் படமாகவே இருந்தாலும் நமக்கு பரிச்சயமான நிறைய முகங்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். உத்தர பிரதேச துயர சம்பவத்தில் மருத்துவர் கஃபீல் கானின் கதையை சான்யா மல்ஹோத்ராவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். சிறப்பு. மெர்சல் நித்யா மேனனின் கதாபாத்திரத்தை ஜவானில் தீபிகா செய்திருக்கிறார். அதற்காக அந்தக் கதாபாத்திரத்தின் பெயரைகூட மாற்றாமல் ஐஷ்வர்யா என்றே வைப்பதெல்லாம் ப்யூர் அட்லியிசம்..!
அட்லியின் ரைட்டிங்கில் மாஸ் மொமண்ட்களும், க்யூட் மொமண்ட்களும் எப்போதும் சிறப்பாகவே எழுதப்பட்டிருக்கும். சீனியர் ஷாருக் கானுக்கான அந்த முதல் காட்சி ப்யூர் தியேட்டர் மெட்டீரியல். மெட்ரோ டிரெயின் சீக்குவன்ஸ் பக்கா கமெர்ஷியல் ஃபார்முளா. ஷாருக் நயன் கிட் காட்சிகளும் சோ க்யூட் தான். இடைவேளைக் காட்சி எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும், மற்றுமொரு மாஸ் மொமண்ட். அதன்பின்னர் தான் படத்தின் பிரச்னைகள் ஆரம்பித்தன. எம்ஜிஆர் படமாவே இருந்தாலும், மூன்று அடி வாங்கியதும் திருப்பி அடிப்பார்கள். பிளாஷ்பேக்க்கில் ஒருமுறை வெல்வதோடு சரி, அதற்குப் பிறகு விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்துக்கு வெற்றிக்கான எந்த அறிகுறியும் இல்லை. அடி மேல் அடி, அடியோ அடியாகவே அந்த கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. அதனாலேயே ஹீரோ அவரை வெல்லும் போது எந்தவித சுவாரஸ்யமும் இல்லாமல் அந்தக் காட்சிகள் கடக்கின்றன. ஒரு கட்டத்தில் விஜய் சேதுபதி அவர் மாடுலேசனில் படத்தை நக்கல் அடிப்பது போல் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகள் தான் அப்பாடா இது நல்லாயிருக்கு என நம்மை சொல்ல வைக்கிறது. ஃபிளாஷ்பேக் சொல்லி முடித்ததும், அடுத்து என்ன என்றால் , ஒன்றுமில்லை ஏதாவது செய்வோம் ரீதியில் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை நம்மை ரொம்பவே சோதிக்கிறது.
அனிருத் இசையில் டைட்டில் டிராக் வெறித்தனம். படமாக்கப்பட்ட விதமும் செம்ம. பின்னணி இசையும் இது அனிருத் காலம் என்பதை நினைவுறுத்துகிறது. ஆனால், மற்ற பாடல்கள் சுத்தமாய் செல்ஃப் எடுக்கவில்லை. முதல் சண்டைக்காட்சிக்கான செட், காஸ்டியூம்ஸ், லொக்கேசன், கேமரா என எல்லாமே பக்கா. விஷ்ணுவின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்பு சிறப்பு. டெக்னிக்கல் குழுவுக்குப் பாராட்டுக்கள். அனல் அரசு, ஸ்பைரோ ரஸாட்டோஸ், யானிக் பென், சுனில் ரோட்ரிக் என ஒரு பெரும் குழு சண்டைக் காட்சிகளுக்கு உழைத்திருக்கிறது. வெப்பன் முதல் சண்டைக்கான சூழல் வரை எல்லாமே பக்கா.
மெர்சல், ரமணா, பாகுபலி, இந்தியன், சர்கார், சர்தார், கத்தி, மங்காத்தா, தெறி, Kung Fu Hustle என பல படங்கள் நினைவுக்கு வருகின்றன. அட்லியே ஏழு ஸ்வரம் தான் ஏழு ராகம் தான் என சொல்லிவிட்டதால் அதைவிடுத்துவிட்டு மற்ற பிரச்னைகளைப் பார்ப்போம். தன் குருநாதர் ஷங்கரிடமிருந்து இந்தியாவின் ஊழல் ஸ்கிரிப்ட்டுகளில் நாமும் ஒன்று செய்யலாமே என நினைத்திருக்கிறார். ஆனால், இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இதையே எடுத்துக்கொண்டிருப்பார்கள் என தெரியவில்லை. விவசாயி 40000 கடனுக்கு அவ்வளவு டார்ச்சர் பண்ற அரசாங்கம், பணக்காரனோட 40000 கோடி கடன ரத்து பண்ணிடறாங்க என ஷாருக் கான் பேசும் போது ஹோம் லோன் கட்ட வேண்டிய எனக்கும், அருகில் பைக் லோன் கட்ட வேண்டிய நண்பருக்கும், அதற்கு அருகில் ஸ்டூடன்ட் லோன் வாங்கியிருக்கும் பையனுக்கும் சோகம் தொண்டையை அடைக்கிறது. சினிமா டிக்கெட் அநியாய விலை (டிக்கெட் கட்டணத்தைவிட அதிகம் வாங்குவது), தியேட்டரில் பார்க்கிங் முதல், ஸ்நேக்ஸ் விலை என எல்லாமுமே மோசமானதுதான். உங்க சிஸ்டத்தையே சரி செய்யாமல் குளிர்காயும் சினிமாத்துறை ஊரில் இருக்கும் எல்லா சிஸ்டத்தையும் ஊழல் என ஜிகினா முலாம் பூசி உருட்டுவது தான் கடுப்பை கிளப்புகிறது. 40000 கோடி பணக்காரரின் எடுத்து, இந்தியாவில் இருக்கும் ஏழைகளின் கடனை அடைப்பது என்பது சினிமாவில் கூட காமெடியான தீர்வு தான். விவசாயிகளின் ஒடிந்துபோன முதுகில் ஏறி அட்வைஸ் செய்வதை திரைக் கதை ஆசிரியர்கள் குறைத்துக்கொள்வது நலம். கமெர்ஷியல் படத்துக்கான அளவுகோலைத் தாண்டி நீங்கள் சுற்றும் இந்த 'சிஸ்டம் சரியில்ல ஜிகினா' படத்தில் வரும் விஜய் சேதுபதியின் விக் போல் சுத்தமாய் ஒட்டவில்லை. அதே போல், பார்வையாளன் அழுதே ஆக வேண்டும் என்பதற்காக poverty porn பாணியிலான காட்சிகளும் படத்தில் வேண்டுமென்றே நீட்டப்பட்டிருக்கிறது. போதும் சார். விவசாயிகள் கஷ்டப்படறாங்க தான். அவங்கள மேலும் கஷ்டப்படுத்தாதீங்க. நிச்சயம், இந்த நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று ஊழல், அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அதை மட்டுமே வைத்து ராபின்ஹூட் திரைக்கதை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு என தெரியவில்லை.
தேர்தல் நெருங்கும் சமயம், நல்லதொரு மெசேஜுடன் 'ஷங்கர்' படத்தை எடுத்திருக்கிறார் அட்லி. வட இந்தியாவில் புதிதாக இருக்கலாம். நமக்கு பல படங்களைப் பார்த்தது போலத்தான் இருக்கிறது. தேர்தலில் அட்லி எதிர்பார்க்கும் மாற்றம் வந்தால் நலம் தான்.