kadhal konden movie posters PT
திரை விமர்சனம்

‘அவன் வாழ வேண்டியவன்’ நட்பின் ஒளியில் பிரகாசித்த வினோத்தை ஏன் கொன்றீர்கள் செல்வராகவன்? இது நியாயமா?

Rajakannan K

வினோத் - திவ்யா.. நட்பின் உலகத்திற்குள் சங்கமித்த இரு உயிர்கள். கல்வியின் கரைதேடி தலைநகருக்கு வந்த வினோத்தின் வாழ்க்கையில் தேவதையாய் வந்தவள் திவ்யா. நட்பின் ஆழத்தை மேன்மையை காட்ட தன்னுயிரை கொடுத்து அவளது உயிரை காத்தவன் வினோத். வினோத் யார்? கதையில் அவனுக்கு இயக்குநர் செல்வராகவனால் வழங்கப்பட்ட இந்த முடிவு நியாயமனதா.. அற்புதமான உலகத்தை படைத்த செல்வராகவன் கதை போக்கை கொண்டு சென்ற விதம் சரியானதுதானா என்பது குறித்து கொஞ்சம் அலசுவோம்..!

முதலில் வினோத்தின் வாழ்க்கையை கதையின் போக்கிலே பார்க்கலாம்..

ஒரு நரகத்தில் இருந்து இன்னொரு நரகத்திற்கு..

எல்லோரையும் போல் இயல்பான ஒரு குடும்ப சூழலில் பிறந்தவன் அல்ல வினோத். நகரம் போன்ற சூழலின் நடுவே தான் அவனது பிறப்பு இருந்தது. அவன் ஆணாக பிறந்தது அவனது தாய்க்கே பிடிக்கவில்லை. விலைமாதுவின் உலகிற்குள் பிறந்து வளர்ந்த அவனை அந்தக் கொடிய நரகத்திற்குள் இருந்து இன்னொரு கொடூரமான நகரத்திற்குள் அவனது தாயே தள்ளிவிடுவாள். எந்தவொரு இரக்கமும் இன்றி வெறும் 15 ஆயிரம் ரூபாய்க்கு அவனது வாழ்க்கை விலை பேசப்படும். குழந்தைகளை கொத்தடிமைகளாய் கட்டாயப்படுத்தி நாள் முழுவதும் வேலை செய்ய வைக்கும் துன்பம் சூழ் உலகு அது.

வெறும் சில மணி நேரம் தூக்கம் நாள் முழுதும் ஓயாத வேலை. இதுதான் அன்றாட வாழ்க்கை. அந்த கஷ்டம் மெல்ல மெல்ல அவனுக்கு பழகியது. அந்த வேதனை சூழ் உலகிற்குள் குட்டி தேவையாய் தேவி வந்தாள். பஞ்சத்தில் அடிபட்ட இன்னொரு குடும்பம் அவளை அங்கு கொண்டுவந்து தள்ளியது. அவளுக்கு அந்த உலகம் பிடிபடாமல் அழுதுகொண்டே இருந்தாள். “தூங்கு இன்னும் மூனு மணி நேரம் தான் தூங்க முடியும். இப்ப தூங்கலனா நாளைக்கு வேல செய்யும் போது தூக்கம் வரும்” இது அவன் தேவிக்கு சொன்னது மட்டுமல்ல, அவனது தொடக்கத்தில் சிரமப்பட்டு பழகியது.

உறவாய் கிடைத்த அவளோடு புதிய உலகை கற்பனை கண்டான். இருவரும் சிறைக்குள் இருந்தே சிறகடித்து பறந்தார்கள். விடுதலை கொடுப்பதாய் வந்த அதிகாரியின் பணத்தாசையால் வினோத்தின் வாழ்க்கை மீண்டும் வஞ்சிக்கப்பட்டது. அதிகாரியிடம் நேர்மையை வெளிக்காட்டிய வினோத்திற்கு கிடைத்த பரிசோ சொல்வொண்ணா துயரம். அவனை துயரத்தில் இருந்து மீட்டெடுக்க தன்னுயிரையே கொடுத்தாள் அந்த சின்னஞ்சிறு தேவதை தேவி. எல்லாவற்றையும் கண்களில் கண்டு மனதில் குமுறியவன் நேரம் பார்த்து எல்லாவற்றிற்குள் முடிவு கட்டினான். அவன் கைகளில் படிந்த ரத்தக்கறையே அவனை அந்த நரகத்தில் இருந்து விடுதலை செய்தது.

அரவணைத்த புதிய உலகம்.. புரியாத புதிரான தலைநகரம்!

அவனை மனிதாபமுள்ள ஒரு இடம் அரவணைத்தது. அங்கே படித்தான்.. வளர்ந்தான். தாய் இல்லை, தந்தை இல்லை.. யாரென்றே தெரியாத உறவுகளுடன் அவன் வாழ்க்கை சென்றது. பள்ளிக்காலம் முடிந்து அவன் வாழ்க்கை கல்வி எனும் ஏணியை நோக்கி தலைநகர் சென்னைக்கு நகர்ந்தது. நகரத்தில் அவனுக்கு எல்லாமே புதிதாகவும், புதிராகவும் இருந்தது. இரவில் வேலை, பகலில் படிப்பு.. இதுதான் அவனது தினசரி வாழ்க்கை. கோட்டாவில் சீட் வாங்கி வந்தவன், ஓசியில் படிப்பவன் என்ற வாத்தியார்களின் எள்ளல்களுக்கு ஆளாகிறான். ஆனால், அவனுக்குள் இருக்கும் கற்றல் அறிவு எல்லோரையும் வியக்க வைக்கிறது. அதுதான் திவ்யாவை அவனது உலகிற்குள் அழைத்து வருகிறது.

கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு நம்பிக்கை பிறக்கிறது. கல்வி எனும் விளக்கால் அவனது வாழ்வில் ஒளி பிறக்கிறது. அந்த ஒளியில் அவன் அறிவு பிரகாசமாக மின்னுகிறது. வினோத் நம்பிக்கையோடு வாழ ஆயத்தமாகிறான். ஆனால், குழப்பம் ஆரம்பிக்கிறது. நட்பிற்கும், காதலுக்குமான புரிதலில்.. காதலுக்கும் பாலியல் உறவுக்குமான புரிதலில் தடுமாறுகிறான் வினோத். மீண்டும் ரத்தக்கறை அவன் உலகிற்குள் வந்துவிடுகிறது. இறுதியில் வினோத்தின் நட்பிற்கும், காதலுக்கும் இடையிலான வித்தியாசம் புரிகிறது. ஆனால், அதற்குள் எல்லாம் முடிந்து விடுகிறது.

கதையின் போக்கில் ஏன் திடீர் தடுமாற்றம்?

இதுவரை நாம் பார்த்தது காதல் கொண்டேன் கதையில் வினோத்தின் பயணத்தை பார்த்தோம்.

செல்வராகவன் வினோத்தின் வாழ்க்கையையும், வினோத்-திவ்யா இடையிலான தூய்மையான நட்பின் உலகத்தையும் அற்புதமாக படைத்திருக்கிறார். ஆனால், வினோத்திற்கு ஏன் செல்வராகவன் இந்த முடிவை கொடுத்தார் என்ற கேள்வி கேட்க தோன்றுகிறது. வாழ்க்கையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டு கொண்டே இருந்த வினோத்திற்கு முதல் முறையாக வாழ்வதற்கு வழி கிடைக்கும் போது அவனுக்கு எல்லாமே திசை மாறுகிறது. நட்பிற்கும் காதலுக்கும் இடையிலான புரிதலை உணர்த்த செல்வராகவன் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால், இதில் பாலியல் உணர்வுக்கும் நட்பிற்கும் இடையிலான காட்சிகளில் நிறையவே தடுமாறி வினோத் மனதிற்குள் குரூரமும் தான் தோன்றி தனத்தையும் குடிகொள்ள வைக்கிறார் செல்வராகவன்.

இளம் வயதில் எல்லோருக்கும் இருக்கும் தடுமாற்றம் தான் வினோத்திற்கு வந்ததும். ஆனால், அவன் கல்வி எனும் ஏணி மூலம் மிகப்பெரிய உலகத்தை தரிசிக்க தயாராகிக் கொண்டிருக்கையில் இப்படியான போக்கை கதையில் ஏன் கொண்டுவர வேண்டும். அவனது தடுமாற்றத்தை திவ்யாவே சரி செய்திருக்கலாம் அல்லது உலகை புரிந்து கொள்ளும் தன்மைக்குள் வந்த அவனே கூட நிதானமாக புரிதலுக்குள் வந்திருக்கலாம். சைக்கோ.. கொலைகள் இதெல்லாம் கதைக்குள் எதற்கு?

செல்வராகவன் இதை செய்திருக்கக் கூடாது?

அன்பிற்காக ஏங்கியவன், வாழ்வதற்காக ஏங்கியவன் வினோத். அவமானங்களை எதிர்த்து போராடியவன். நட்பால் மிளர்ந்தவன். ஆனால், நட்பின் மேன்மையை நிலைநாட்ட அவனது உயிரை பறிக்க வேண்டுமா. நிச்சயம் அது செல்வராகவனிடம் இருக்கும் தொடர்ச்சியான தடுமாற்றம் தான். இதை மயக்கமென்ன கதைக்களத்திலும் காணலாம். ஆம், ஒரு கலைஞனின் ஏக்கம் தாகம் என உணர்வுபூர்வமாக செல்ல வேண்டிய கதைக்களத்தில் முக்கோண உறவின் சிக்கலை கொண்டு முன்பாதியில் தடுமாறி இருப்பார். இளமையின் போக்குகளில் ஏற்படும் மாற்றங்களை ஒரு இயக்குநராக பக்குவத்துடன் அணுகி இருந்தால் கதையின் தன்மை காவியத் தன்மையை நோக்கி நகர்ந்து இருக்கும்.

காதல் கொண்டேனில் வினோத் - திவ்யாவின் உலகம் உன்னதமானது. அந்த உலகம் தொடர்திருக்க வேண்டும். அதேபோல், பிறந்தது முதலே துன்பத்தில் உழன்று வந்த வினோத் நிச்சயம் வாழ வேண்டிய ஒருவன். பாலியல் உணர்வுகளின் சிக்கல்களை கதைக்குள் திணித்து, நட்பிற்கும் காதலுக்குமான புரிதலின்மையால் அவனை மரணத்திற்கு அழைத்துச் சென்றதில் கொஞ்சமும் நியாயமில்லை.

(2003 ஆம் ஆண்டு இதேநாளில் காதல் கொண்டேன் திரைப்படம் வெளியானது. அந்த படம் குறித்த ஒரு மீள் பார்வையே இந்த கட்டுரை)