அசாதாரண சூழலில் சிக்கிக் கொள்ளும் ஒரு குடும்பம்... அதிலிருந்து தப்ப செய்யும் காமெடிகளே `இங்க நான் தான் கிங்கு’
வெற்றிவேல் (சந்தானம்) திருமணமாகாத முதிர்கண்ணன். சொந்த வீடில்லாத காரணம் திருமணத்திற்கு தடையாகிவிடக்கூடாது என்பதற்காக 25 லட்ச ரூபாய் கடன் வாங்கி சொந்த வீடும் வாங்கி ரெடியாக இருக்கிறார். கல்யாண ஆசை முற்றிப் போய் மேர்ட்ரிமோனியல் அலுவலகத்திலேயே பணிக்கு சேர்ந்து தனக்குப் பெண் தேடுகிறார். அவருக்கு தேவை எல்லாம் வீட்டுக்கு வாங்கிய கடனை அடைக்க 25 லட்சம் வரதட்சணையுடன் ஒரு பெண். எனவே தரகர் ஒரு ஜமீன் குடும்பத்தில் பெண் பார்க்க அழைத்துச் செல்கிறார். அங்கு கிடைக்கும் ராஜ வரவேற்பு, ஜமீன் பங்களா அனைத்தையும் பார்த்து மயங்கும் சந்தானத்தை, மயக்கம் தெளிவதற்குள் தன் மகள் தேன்மொழிக்கு (ப்ரியாலயா) கல்யாணம் செய்து வைக்கிறார் பெரிய ஜமீன் விஜயகுமார் (தம்பி ராமையா). திருமணத்திற்கு பின்பு, ஜமீனுக்கு பத்து கோடி கடன் இருப்பதும், ஊர்க்காரர்கள் சார்ந்து மகளுக்கு மணமுடித்து வைத்தால் சொத்து எல்லாவற்றையும் கடன்காரர்களுக்கு பிரித்துக் கொடுக்க ஜமீன் செய்த மாஸ்டர் ப்ளானும் வெற்றிக்கு தெரிய வருகிறது. அதன் பின் மனைவியுடன் சேர்த்து மாமனாரையும், மச்சானான சின்ன ஜமீனையும் (பால சரவணன்) பார்த்துக் கொள்ளும் பாரமும் சேர்ந்து கொள்கிறது. அவர்களை சென்னைக்கு அழைத்து வருகிறார். இதே வேளையில் சென்னையில் பல இடங்களில் வெடிகுண்டு வைக்க தீவிரவாத கும்பலும் சென்னை வருகிறது. கடனை எப்படி கட்டுவது என முழி பிதுங்கும் சந்தானத்திற்கு 50 லட்சம் கிடைக்க ஒரு வாய்ப்பு அமைகிறது. அது என்ன? தீவிரவாத கும்பல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
சந்தானம் தனது ட்ரேட் மார்க் காமெடி படத்தைக் கொடுத்திருக்கிறார். இது no brainer silly comedy ஜானர் படம். எனவே லாஜிக் கேள்விகளை தூரப்போட்டுவிட்டு, ஒன்லி எண்டர்டெய்ன்மண்ட் மட்டுமே பிரதானமாய் வைத்து திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். எழிச்சூர் அரவிந்த் அதற்கு தகுந்தது போல் ஒரு கதையையும், ஆனத் நாராயணன் அதற்கு ஏற்றது போல் படத்தை இயக்கியும் கொடுத்திருக்கிறார்கள். நிறைய சினிமா ரெஃபரன்ஸ், ஜாலியான ஒன்லைனர்கள், ஒவ்வொரு கதாப்பாத்திரத்தை வைத்தும் விதவிதமாக காமெடி கொடுத்திருப்பது சிறப்பு. சினிமா மட்டுமின்றி சில இடங்களில் நிஜ வாழ்க்கை ரெஃபரன்ஸையும் போட்டிருக்கிறார்கள். உதாரணமாக ஒரு இடத்தில் தம்பி ராமையா “ஜெய்ஹிந்த்” என சல்யூட் அடிக்க, சந்தானம் அதற்கு கவுண்டராக “என்ன உன் சம்பந்தி நடிச்ச படம் பேரெல்லாம் சொல்ற” என்பார். இப்படி படம் முழுக்க ஆங்காங்கே வெடிச் சிரிப்பு.
நடிப்பாக சந்தானம் தனது வழக்கமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அதில் குறை ஏதுமில்லை. ஒரே காட்சிக்குள்ளேயே ஒரு ஷாட்டில் விக்கும், அடுத்த ஷாட்டில் நார்மல் ஹேர்ஸ்டைலும் என மேஜிக் காட்டுவது தான் ஏன் எனப் புரியவில்லை. கூடவே சின்ன சின்ன எமோஷனல் காட்சிகளும் உண்டு, அதில் இன்னும் கூட சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கலாம். படத்தின் ஆச்சர்யம் என்ன என்றால் தம்பி ராமையாவில் பல காமெடிகள் சிறப்பாக வந்திருப்பதுதான். அவருடையது ஒரு கார்டூனிஷ் கதாப்பாத்திரம் தான், எனவே அவரது ஓவர் ஆக்டிங் நடிப்புக்கு பாத்திரம் கச்சிதமாக பொருந்துகிறது. ஓவர் ஆக்டிங்கும், வினோத உடலசைவுகளும் என அவரது நடிப்பு படத்திற்கு வலு. பால சரவணனின் சில காமெடிகள் அந்த அளவு சிரிப்பில்லை என்றாலும், வண்டியில் வழி சொல்லும் ஒரு காமெடி பிரமாதம். அறிமுக நடிகையான ப்ரியாலயா நடிப்பில் பெரிய குறை இல்லை. விவேக் பிரசன்னாவிற்கு நல்லதொரு கதாபாத்திரம். அடுத்தடுத்த படத்தில் நடிப்பு இன்னும் மெருகேறும் என நம்புவோம். சேஷு, சுவாமிநாதன், மாறன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா ஆகியோரும் படத்தின் காமெடிக்கு மைலேஜ் கொடுக்கிறார்கள்.
படத்தின் குறைகளாக சொல்வதென்றால், ஒரு காட்சி சிறப்பாக இருப்பதும், ஒரு காட்சி கொஞ்சம் சுமாராக இறங்குவதும் தான். 'சும்மா சும்மா கிரிஞ்ச் பண்ணாதீங்கடா, இதெல்லாம் காமெடியாடா' என சந்தானமே அவ்வப்போது சொல்கிறார். என்ன ஆடியன்ஸ் மைண்டு வாய்ஸையும் இவரே பேசிக்கொண்டிருக்கிறார் என தோன்றுகிறது. முதல் பாதியில் திருமணத்தில் சந்தானம் ஏமாந்துவிட்டார் என்பது நமக்கு தெரிந்ததுதான். அது சந்தானத்திற்கு தெரிந்த பிறகு படபடவென பட்டாசு காமெடிகள் எதிர்பார்த்தால், அது பெரிதாக கவரவில்லை. படத்தின் கதை குடும்பத்துக்காக ஏங்கும் ஒருவன், கடனை அடைக்க 25 லட்சத்துக்காக வரதட்சணை கேட்கும் ஒருவன், அவனை ஏமாற்றும் ஒரு குடும்பம் என நகரும் கதை, திடீரென ஒரு கொலை, தீவிரவாத கும்பல் என்று மாறுகிறது. ஆனால் இந்த மாறுதல் திடுக் என ஜம்ப் ஆக இல்லாமல், கொஞ்சம் இயல்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சில காட்சிகளின் திருப்பங்கள் யூகிக்க முடிவதும் ஒரு பிரச்சனை. டி இமானின் பின்னணி இசை சுவாரஸ்யம் சேர்த்தாலும், பாடல்கள் படத்தின் வேகத்தை குறைக்கும் விஷயமாகவே எஞ்சுகின்றன. தியேட்டரே எழுந்து வெளியே போகும் அளவுக்காக சுமாரான பாடல்களைக் கொடுத்திருக்கிறார் இமான். அப்பார்ட்மெண்டில் வசிக்கும், இரு பாலியல் தொழிலாளிகள் சார்ந்த டபுள் மீனிங் காமெடிகளையும் தவிர்த்திருக்கலாம். அதிலும் லொள்ளு சபா சுவாமிநாதன் பேசும் வசனங்கள் முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கும் மோசமான காமெடிகள்.
மொத்தத்தில் டிடி ரிட்டர்ன்ஸ், வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களைப் போன்ற காமெடி படம் தான் `இங்க நான் தான் கிங்கு’. சிலருக்கு படு ஜாலியாக இருக்கலாம், சிலருக்கு ஓக்கேவான படமாக இருக்கலாம். ஆனால் ஒட்டு மொத்தமாக ஒரு டீசண்ட்டான காமெடி படம்.