இயக்குநர் சுமன் குமார் இயக்கத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ரகு தாத்தா திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. திரைப்படம் எப்படி இருக்கிறது? என்பதை பார்க்கலாம்..
வள்ளுவண்பேட்டையில் வங்கி அலுவலராக பணி புரிகிறார் கயல்விழி பாண்டியன். சிறுவயதில் இருந்தே இந்தி திணிப்பு போன்ற அடக்குமுறைகளுக்கு எதிராக போராடும் குணம் கொண்டவர் என்பதால் அது சார்ந்த சிக்கல்களும் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. எங்கே ஆணாதிக்க சிந்தனைகள் கொண்ட ஒரு ஆணிடம் சிக்கிவிடுமோ என்கிற பீதியில் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகிறார். ஆனாலும் விதி செல்வா என்னும் பெண்ணிய போராளி வழியில் வருகிறது. தனக்கான வெளியாக செல்வா இருப்பார் என நினைக்கும் சூழலில் அதிலும் செக் விழ, கயல்விழி பாண்டியன் தன்னை தற்காத்துக்கொள்ள என செய்கிறார் என்பதே மீதிக்கதை.
ரகு தாத்தா எம் எஸ் பாஸ்கர் என்றாலும், படம் அவரின் பேத்தி கயல்விழி பாண்டியனான கீர்த்தி சுரேஷை சுற்றித்தான். துடுக்கான கதாபாத்திரம் சிறப்பாக செய்திருக்கிறார். ‘பொறுத்திரு செல்வா’ மாடுலேசனில் ரவீந்தர விஜயும் "கோபமா போறார்ல" மாடுலேசனில் இஸ்மத் பானுவும் பட்டைய கிளப்பியிருக்கிறார்கள்.
கடினமான சூழல்களில் பெண்களுக்கு பெண்களே துணை என்பதாக வரும் செல்வாவின் தாயார் கதாபத்திரமும் சிறப்பு.
முழுக்க முழுக்க ஒரு காமெடி கதையில் அரசியலையும், பெண்ணியத்தையும் உறுத்தாமல் மெல்லிய சாரல் போல் தூவி ரகு தாத்தாவை எழுதி இயக்கியிருக்கிறார் சுமன். ஃபேமிலி மேன் தொடர் மூலம் கவனம் பெற்றவர், இதில் காமெடி வெப்பனை கையில் எடுத்திருக்கிறார். அது பல இடங்களில் வொர்க்கும் ஆகியிருக்கிறது. இந்தி தெரிந்த வங்கி ஊழியர் தமிழை தப்பும் தவறுமாக பேசுவது, மாடுலேசன் ஏற்ற இறக்கங்கள், காமெடி ஒன்லைனர்கள் என மறைந்த கிரேஸி மோகன் பாணியில் வரும் பல வசனங்கள் நம்மை சிரிக்க வைக்கின்றன.
"திடர்னு வந்தா திணிப்பு, காலங்காலமா செஞ்சுட்டு வந்தா கலாசாரமா" என பெண்களுக்கு எதிராக பன்னெடும் காலமாக நடந்துவரும் அடக்குமுறை குறித்த சுளீர் வசனங்களும் ஆங்காங்கே ஒலிக்கின்றன. காமெடி படத்துக்கு ஏற்றார் போல் அமைந்திருக்கிறது சுரேஷின் படத்தொகுப்பும், சீன் ரோல்டனின் இசையும் .
படத்தில் ஆங்காங்கே எட்டிப் பார்க்கும் நாடகத்தன்மையை குறைத்திருக்கலாம். அதே போல், பழைய காலத்து படம் என்பதால் படமும் அதே வேகத்தில் செல்வது நம்மை டயர்டாக்குகிறது. படத்துல வர்ற பஸ்ஸூ கூட ஸ்லோவா போனா எப்படி பாஸ்.?
மொதத்த்தில் ரகு தாத்தா, இந்த வாரத்துக்கான குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஜாலி கேலி பொழுதுபோக்கு வித் கொஞ்சம் பெண்ணிய அரசியல் திரைப்படம்.