Kaali Venkat Harkara
திரை விமர்சனம்

Harkara Review | இன்னும் கொஞ்சமே மெனக்கெட்டிருக்கலாமே..!

நடிப்பு பொறுத்தவரை காளி வெங்கட் நெகிழ்ச்சியான காட்சி, குற்றவுணர்வை வெளிப்படுத்தும் காட்சி எல்லாவற்றிலும் அசத்துகிறார்.

Johnson

சுயநலம் மிக்க ஒருவரை மாதேஷ்வரன் எப்படி மாற்றுகிறார் என்பதே ஹர்கரா படத்தின் கதை

Harkara

தேனி மாவட்டத்தின் மலை கிராமமான கீழ் மலையில் தபால்காரர் காளி (காளி வெங்கட்). சிறு சேமிப்பு பணத்தை அடிக்கடி கடன் கேட்கும் ஊர் மக்கள், துணி எடுக்கக் கூட டவுனுக்கு செல்ல வேண்டிய சிரமம், இதைவிட முக்கியமாக மலை காட்டில் வசிப்பதால், திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லை என்ற கோபம் எல்லாம் காளிக்கு சேர்ந்து கொள்கிறது. எனவே எப்படியாவது இந்த ஊரில் இருக்கும் தபால் நிலையத்தை மூட வைத்து, பணி மாற்றல் வாங்கிச் செல்ல திட்டமிடுகிறார். அதே சமயம் மலை உச்சியில் வசிக்கும் மாரியம்மாளுக்கு (விஜயலக்ஷ்மி) ஒரு கடிதத்தைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பு வந்து சேர்கிறது. அதை நிறைவேற்றும் பயணத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் இருந்த `ஹர்காரா’ (ஆங்கிலேயர்களின் அரசாங்க தபால்காரர்) மாதேஷ்வரன் பற்றி தெரிந்து கொள்கிறார். அவரின் கதை என்ன? அந்தக் கதை கேட்ட பின் காளியின் மனநிலையில் வரும் மாற்றம் என்ன என்பதே படத்தின் கதை.

கடிதம் மூலம் நடக்கும் தொலைத்தொடர்புகள், அதனூடே வரலாற்றையும் உணர்ச்சிப்பூர்வமாக சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ. கீழ் மலையில் இருக்கும் மனிதர்கள், கடிதம் வாயிலாக வரவேண்டிய தகவல்கள் கிடைக்காமல் ஏற்படும் தவிப்பு போன்றவற்றை பதிவு செய்தவர், மாதேஷ்வரன் கதை மூலம் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த தொலைதொடர்பு பற்றியும், அப்போது நிலவிய அடிமைத்தனம் பற்றியும் பதிவு செய்கிறார். இரண்டு கதையிலும் தகவல் பறிமாற்றம் தான் பிரதானம். நிகழ்காலக் கதையில் சுயநலம் மிக்க ஒருவரின் மனமாற்றத்தையும், 150 வருடங்களுக்கு முந்தைய கதையில் ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு நல்லது செய்ய வந்தவர்கள் என நம்பும் ஒருவன் உண்மையை தெரிந்து கொள்வதுமாக கதையை நகர்த்தியிருக்கிறார். அதில் மனநல பாதிப்புக்குள்ளானவர் சம்பந்தப்பட்ட காட்சி வரும் போது கண்கலங்க வைக்கிறார்.

Harkara

நடிப்பு பொறுத்தவரை காளி வெங்கட் நெகிழ்ச்சியான காட்சி, குற்றவுணர்வை வெளிப்படுத்தும் காட்சி எல்லாவற்றிலும் அசத்துகிறார். மாதேஷ்வரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராம் அருண் காஸ்ட்ரோ, கட்டுமஸ்தான தோற்றத்தில் சண்டைக் காட்சிகளில் அசத்துகிறார். ஆனால் நடிப்பில் பாடரில் பாஸ் ஆகிறார். கங்காணி கதாப்பாத்திரத்தில் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடிப்பு ஒரு டெம்ப்ளேட்டான வில்லன் ரோலில் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாக பிலிப் சுந்தர் மற்றும் லோகேஷ் ஒளிப்பதிவு இயற்கை சார்ந்த இடங்களை இயல்பாகக் காட்டியிருக்கிறது. Shade 69 Studiosன் கிராஃபிக்ஸ் காட்சிகள் சற்று துருத்திக் கொண்டிருந்தாலும், பெரிய அளவில் சொதப்பவில்லை.

படத்தின் பிரச்சனையாக இருப்பது, படத்தைப் பார்க்கும் போது, பார்வையாளர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் காரணி ஏதும் இல்லை. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மட்டுமே முக்கியம் என நினைக்கும் ஒருவன் எப்படி அந்த ஊரையே தனது உறவாக மாற்றிக் கொள்கிறான் என்ற ஒரு கதை, ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு இந்தியன், தேசத்திற்கு நடக்க இருந்த சதியை எப்படி தடுக்கிறான் என்ற இன்னொரு கதை. இவை இரண்டையும் இணைத்து செய்யப்பட்டிருக்கும் திரைக்கதை மோசமாக எழுதப்பட்டிருப்பதால் சுவாரஸ்யம் குறைகிறது. ஒவ்வொரு காட்சியை வடிவமைத்திருக்கும் விதத்திலும், நடிகர்கள் கொடுத்திருக்கும் நடிப்பிலும் நாடகத்தனம் அதிகமாகிவிட்டதால், நல்ல தருணங்களும் வீணாகிறது.

மொத்தத்தில் எழுத்தில், ஆக்கத்தில், நடிப்பில் எனப் பல விஷயங்களில் இன்னும் மெனக்கெட்டிருந்தால் சொல்ல வந்த தகவலை சேதாரம் இல்லாமல் சேர்த்திப்பான் இந்த ஹர்காரா.