புதிய எதிரியை சமாளிக்க காட்ஜில்லாவும், கிங்காங்கும் என்ன செய்கிறார்கள் என்பதே இந்த Godzilla x Kong: The New Empire படத்தின் ஒன்லைன்.
வழக்கம் போல பூமிக்கு கீழ் இருக்கும் ஹாலோ எர்த்திலிருந்து சில 'கீங் கீங்' சத்தங்கள் அலெர்ட் அடிக்க ஆரம்பிக்கின்றன. தனிக்காட்டு ராஜாவாக சுற்றிக்கொண்டிருக்கும் கிங்காங்கிற்கு பல்வலி வர, சரி நம்ம பூமியைப் போய் ஒரு எட்டுப் பார்த்துட்டு, பல்லை சரி செய்துவிட்டுப் போகலாம் என ஆய்வுக்கூடத்திற்கு வருகிறது. போன பாகத்தில் ஒரு குட்டி பாப்பா கிங்காங்கோடு ' தெய்வத் திருமகன் சாரா' போல சைகையில் பேசிக்கொண்டிருக்குமே, அந்த குட்டிப் பாப்பா இப்போது வளர்ந்து பள்ளிக்கு சென்றுவருகிறார். ஆனாலும், ஏதோ சில அமானுஷ்யங்களால் (டெலிபதியாம்) ஹாலோ எர்த்தில் பிரச்னை என்பதைக் கண்டறிகிறார். 'பசுபதி , எட்றா வண்டிய ' என கதையின் நாயகர்களும், Dental implant செய்த கிங்காங்கும் பூமிக்குள் செல்கிறார்கள். இன்னொரு பக்கம், காட்ஜில்லா தண்டால், பஸ்க்கி எல்லாம் எடுத்து தன்னுடைய சக்தியை பெருக்கிக்கொண்டே இருக்கிறது. " என்ன செய்யக் காத்திருக்கோ காட்ஜில்லா... எதுவா இருந்தாலும் நல்லதாத்தான் இருக்கும்" மோடில் சயிண்டிஸ்ட்டுகளும் காட்ஜில்லாவை வாட்சிங் மோடில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஹாலோ எர்த்தில் இருக்கும் அந்த புது வில்லன் யார், அதன் சக்திகள் என்ன, இறுதியில் யார் வென்றார்கள் என்பதே Godzilla x Kong: The New Empire.
படத்தின் மிகப்பெரிய பலம் துணைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குட்டி காங். இந்தக் கதாபாத்திரத்தை இந்தக் கதைக்குள் கொண்டு வரலாம் என நினைத்தவருக்கு ஆயிரம் பொற்காசுகள். படத்தை பல இடங்களில் இந்த குட்டி காங் தான் காப்பாற்றுகிறது. ' அடுத்து எங்க போறோம் சத்யா..?" என கிங்காங்குடன் ஜாலியாக செல்வதாகட்டும்; ' மாட்டினியாடா பம்பரக்கட்டை மண்டையா' என கிங்காங்கை பெரிய சைஸ் டைட்டனிடம் மாட்டிவிடுவதாகட்டும்; ' டேய் எனக்கொரு சோளக்கருது கொடுடா' என கிங்காங்கிடமே டீல் பேசி உணவு வாங்கிக்கொள்வதும், பிரமாதம் குட்டி காங் . அடுத்தடுத்த பாகங்களுக்கு நல்லதொரு கதாபாத்திரத்தை உருவாக்கிவிட்டார்கள்.
மான்ஸ்டர் வெர்ஸ் தொடரின் ஐந்தாவது பாகம் என்று சொல்லப்பட்டாலும், எல்லாவற்றையும் பார்க்க வேண்டும் என்றெல்லாம் எந்த அவசியமும் இல்லை என்பது முதல் பிளஸ். 2021ல் வெளியான Godzilla vs. Kong பாகத்தை மட்டும் ரிவிஷன் செய்துவிட்டுப் போனாலே போதுமானது. ஹாலோ எர்த் என்பதே ஒரு உருட்டு கான்செப்ட் தான் என்றாலும், அதன் மேல் தான் இந்தக் கதைகள் கட்டப்படுகின்றன என்பதால், அதை நம்பினால் தான் படத்தை ரசிக்கவே முடியும். ஆனால், அதையெல்லாம் தாண்டி இந்தப் பாகத்தின் பல காட்சிகளில், RRR ஜூனியர் NTR போல" என்ன என்னமோ சொல்றியே அண்ணா" மோடில் இருக்கிறது. முன்பெல்லாம் ஹாலிவுட் படங்களைப் பார்த்து, நம்மூர் ராமநாராயணனும், பக்கத்து ஸ்டேட் ராஜமௌலியும் சீன் தூக்குவார்கள். ஆனால், இந்தப் படம் அப்படியே உல்ட்டா. " அப்ப குறுக்க நின்னுக்கிட்டு இருந்த ஒருத்தன அந்த மாரியாத்தா முன்னாடி தலை சீவுனான்லே.." மோடிலேயே ஒரு செட்டப்பை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பளபளப்பாக இருக்கும் பிளேடை வைத்து மிகப்பெரிய டைட்டனை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் வில்லன். அவனுக்கு கீழ் பல கிங்காங் . அந்த காங்குகள் எல்லாம் தங்களைக் காப்பாற்ற ஒருவன் வந்துவிட மாட்டானா என ஏங்குகிறார்கள். ' TOOFAN TOOFAN TOOFAN ' என கெத்தா சண்டைபோடும் கிங்காங். ' 'என்ன ஓமத்தைலம் வாடை அடிக்குது' மோடிலேயே சில காட்சிகள் தெலுங்கு மசாலா ஃபேவரில் வந்துபோகிறது. ஒரே ஒரு குறை இவ்வளவு மசாலாவாக்கலாம் என முடிவெடுத்தவர்கள் அப்படியே ரவி பஸ்ரூரையே இசை அமைப்பாளராகவும் போட்டிருக்கலாம். அதுதான் மிஸ்ஸிங். அதே போல் , பல இடங்களில் மொரட்டுத்தனமாக lazy writing செய்திருக்கிறார்கள். என்ன இந்த ஸ்பேர் பார்ட்டா இல்லையா, அதெல்லாம் ஏற்கெனவே எடுத்து வச்சுட்டனே... எப்படா எடுத்து வச்ச? ... செகண்டு ஹாஃப்ல இதெல்லாம் கேட்கக்கூடாது லெவலில் அந்தக் காட்சிகள் வருகின்றது. ஆனால், சந்தானம் திருமணத்தை நிறுத்த உருட்டுக்கட்டையுடன் ஒரு தாத்தாவை தயார் செய்வாறே, அப்படி இருக்கும் ஒரு கதாபாத்திரத்தை முடித்துக்கட்டவா இத்தனை அக்கப்போர் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.
குட்டி காங்கின் க்யூட் பெர்பாமன்ஸிற்காகவும், பெரிய திரையில் கிங்காங், காட்ஜில்லா சண்டைக் காட்சிகளை பார்ப்பதற்காகவும் நிச்சயம் இந்த படத்தைப் பார்க்கலாம். நல்லதொரு வீக்கெண்ட் வாட்சுடன் மசாலா படம் பார்த்த திருப்தியும் இருக்கும்.